தினமணி கொண்டாட்டம்

யாளி

27th Nov 2022 06:00 AM | இரா.ரகுநாதன்

ADVERTISEMENT

 

"ஆளி' என சங்க இலக்கியங்களில் குறிப்பட்டிருக்கும். கோயில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திர உருவுடைய மிருகம்தான் "யாளி'. கோயில் விமானம், கோபுரம், மண்டபத் தூண்களில் மட்டுமே காணப்படும் பல உருக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு கற்பனைச் சிலை என்பது பலரது எண்ணம்.

சிங்கத்தின் கால்கள், குதிரையின் உடல், யானையின் துதிக்கை, கூரிய பற்கள், பெரிய தோற்றம், வலிமையின் அடையாளமாக விளங்கும் மூன்று மிருகங்களின் சேர்க்கையே யாளி. இலக்கியக் குறிப்புகள் தவிர யாளியின் தோற்றத்துக்கு விளங்கும் ஒரே ஒரு சான்று கோயில்சிற்பங்களே.

இது சிங்கத்தையும் யானையையும்விடமிகவும் வலிமையானது என நம்புகின்றனர். யாளி யானையை துதிக்கையை சுருட்டி தூக்குவது போன்று பெரும்பாலான சிற்பங்களில் காணப்படுகின்றது. சிங்கமுகத்தில்கடுமையான கோரைப் பற்களுக்கு இடையே நீண்டு தொங்கும் யானையின் துதிக்கையைப் போன்ற உறுப்புடன் காணப்படும் யாளி,இந்தியாவில் கி.மு. 25,000-க்குப் பின்னர் வசித்தது என்ற குறிப்புகள் எழுதியுள்ளனர்.

ADVERTISEMENT

யாளி வகைகள்

"மகரயாளி' என்பதை பெரும்பாலும் ஆட்டுத்தலையுடன் இருக்கும் யாளி என்று கருதப்படுகிறது. எனினும், மகரம் என்பது முதலையைக் குறிப்பதால், முதலையின் உடலமைப்புடன் கூடிய ஒரு யாளியாகும்.

சிம்மயாளி'சிங்கத்தின் தலையுடன் கூடிய யாளி. "கஜயாளி'அல்லது "யானை யாளி' யானையின் துதிக்கையுடன் விளங்கும் இந்த வகை யாளி அமைப்பு தென்னிந்திய கோயில் அமைப்புகளில் மிகப்பிரசித்தி பெற்றது. "அஸ்வயாளி'- குதிரை முகம் கொண்டது. "ஸ்வான யாளி' அல்லது "ஞமலி யாளி'- நாய் முகம் கொண்டது."மூஷிக யாளி'- எலி முகம் கொண்ட து.

சிம்ம யாளியின் உருவங்கள் பெரும்பாலும் ஒரு சிங்கத்தை பின்னங்கால்களால் மிதித்தவாறு முன்னங்கால்களை உயர்த்தி, பாயும் விதத்தில் இருக்கின்றன. யாளியின் அளவோடு ஒப்பிடும்போது சிங்கம் ஒரு சிறு எலியைப் போன்றே காணப்படுகின்றன. கஜயாளியின் சிற்பங்களிலும் அவற்றின் வலிமை சிறப்பாக வெளிக்காட்டப்படுகிறது. சிம்ம யாளியை போலவே பின்னங்கால்களை தூக்கி நிற்பதோடு முன்னங்கால்களால் தன்னுடைய துதிக்கையை பிடித்த வண்ணம் நிற்கின்றன. துதிக்கையின் அந்தத்தில் ஒரு யானையை தரையில் இருந்து பிரித்திழுக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. யாளியுடன் ஒப்பிடும்போது யானையும் கூட மிகச் சிரியதே என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக அமைத்திருக்கலாம்.

திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயிலில் யாளிகள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம் உள்ளது. முழு உருவமும், முப்பரிமாணமும் 3டி- கொண்ட சிலைகள் உலகில் எந்தவேறு விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் இல்லை என்பது உலகம் உணராத உண்மை.

1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலையில் ஏற்பட்ட மாறுதல்கள் காலத்தில், செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தும்போது கற்களில் கலைநயத்தை ஏற்றும்போதும் இவ்வகை உருவங்களை கற்பனையில் உருவாக்கியிருக்கலாம் என மேல்நாட்டு சிந்தனை வயப்பட்ட ஒருசிலர் தெரிவிக்கலாம்.

முதன்முதலாக முதலாம் பராந்தக சோழன், ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கற்றளியாக மாற்றும்போது இவ்வகை முகாமைப்புடைய சிற்பங்களை உருவாக்கியிருக்-கலாம் என்று மேலை நாட்டு வரலாற்றாளர்கள் அவர்களுக்கு கற்பித்தவர்கள் சொல்லிகொடுத்த அடிப்படையில் குறிப்பிடுவார்கள்.

வியாழ வரி

"வியாழம்' என்றால் பாம்பு ஆகும். பாம்பின் முகத்தைப் பெற்ற வடிவம் வியாழம் எனப்படுகிறது . இதுவே யாழி எனப்பட்டு பிறகு யாளி என்ற இறுதி வடிவம் பெற்று இருக்கிறது என்போரும் உள்ளனர்.

இவ்வியாழ முகத்தில் யானையின் தும்பிக்கை இணைந்து துதியாளி என்ற பிரிதொரு வடிவமும் குறிக்கப்படுகிறது. யாளிகளில் இதுவே மிகச்சிறந்த வடிவழகு கொண்டதாகக் குறிக்கப்படுகிறது. யாளியின் துதிக்கையும் பாம்பின் முகத்தையும் சிம்மத்தின் பற்களையும் கண்களையும் உடலையும் புலி நகங்களையும்கொண்டதாய் விளங்குகிறது. சில படிக்கட்டுகளின் பக்கவாட்டில் யாளியின் துதிக்கை சுருண்டு இருக்கும். இவ்வகைகளை சுருள் யாளி என்பர்.

இத்தகைய யாளிகளும் துதியாளிகளும் கோயில் கட்டடங்களின் பல்வேறு பகுதிகளை அலங்கரிக்கவே பயன்படுகின்றன . யாளி அல்லது யாழிகள் தூண்களைத் தலையில் தாங்கும்வகையிலும் வாயிற்படிகளில் கைப்பிடி சுவர்களிலும் அலங்கரிக்கப் பயன்படுகின்றன. பல கோவில்களில் யாளி வாகனம் புறப்பாட்டின் போது அலங்கரிக்கப்படுகின்றன.

கோயில்களின் கட்டடத்தில் பிரதிபந்த, அதிஷ்டானம், பிரஸ்தரப் பகுதியிலும் சிறு வியாழங்கள் அமைந்துள்ளன. அவை யாளி குட்டிகள் ஆகும். அவை வியாழ முகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது வரிசையில் அமைப்பதால் வியாழ வரி என்றும், "யாளி வரிசை' என்றும் குறிக்கப்படுகின்றன.

தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோயில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையும் உள்ளன.

சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர்நுதல் எனப்படுகிறது. தலைவன் இரவில் வரும் வழியில் அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும், புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும் இருக்கும் என காட்டு விலங்குகளைக் குறித்து அச்சப்படுகிறாள்.

நற்றிணைப்பாடலில் புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் யானையின் உடலை யாளி தன்னுடைய நகங்களால் பற்றியே இழுத்துச்செல்லும் என்று கூறுகிறது. பொருநராற்றுப்படையில் "ஆளி நன்மான் அணங்குடைக் குருளை' எனவும் குறிப்புக் கிடைக்கிறது.

விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்ற தேவாரத்தில் "குன்றில் இடைக் களிறு ஆளிகொள்ளக் குறத்திகள்,முன்றில் இடைப்பிடிகன்று இடும் முதுகுன்றரே' என்ற குறிப்புமுள்ளது.

சிம்ம யாளியை குஜராத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மெஹ்ஸனா கோவிலிலும் கஜ யாளியை கஜுராஹோவில் பார்ஸ்வநாத் கோயிலிலும் காணலாம்.

தமிழகத்தில் சிறப்புற்றிருந்த இந்த ஆளி/யாளிகள் அழிந்துபட்ட ஒரு விலங்கினமாகக் கருதப்பட வேண்டும். டைனோசர், ட்ராகன் போன்றவை இருந்த விலங்கினங்கள் என்பது உறுதிப்பட்டிருப்பது போல் இதுவும் விஞ்ஞானத்தால் உறுதிப்படும்.

எது எவ்வாறாயினும் யாளியின் சிற்பத்தை எந்தக் கோயிலில் கண்டாலும் அதை வியப்புடனும், பயத்துடனும் சில நிமிடங்கள் பார்க்காமல் அகல முடியாது என்பதே உண்மை.

ADVERTISEMENT
ADVERTISEMENT