தினமணி கொண்டாட்டம்

வண்டமிழ் சுரந்த கொண்டல்!

டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.

உரைத்தமிழ் வேந்தர் என்னும் 
உயர்துரை சாமி பெற்ற 
நிறைமதிச் செல்வர்; எங்கள் 
நெடுந்தமிழ்க் குன்றம்; நீலத் 
திரைகடல் திரண்டாற் போலத் 
தீந்தமிழ் கொட்டித் தீர்க்கும் 
நிறைகுடம் மறைந்தார் என்று 
நெஞ்சிலே நெருப்பை வைத்தார்!

பஞ்சிலே வைத்தாற் போலப் 
பற்றிநான் எரிந்த சோகம் 
கொஞ்சமா? ஒருகூட் டுக்குள் 
கொஞ்சிய காலம் என்ன
கொஞ்சமா? குறைதீர்ப் பாயா 
கோவிந்தா என்று கேட்டுத் 
துஞ்சிய காலம் மீண்டும். 
தோன்றுமா...ஐயோ! ஐயோ!

"தென்றலாய் வீசி எங்கள் 
திசைகளைக் குளிர வைத்து 
வென்றவர் சென்றார்' என்னும் 
வெந்தழல் செய்தி கேட்டு 
மன்றெலாம் கண்ணீர் சிந்தி 
மயக்குறும் என்றால்..அந்தோ! 
என்றனின் கதியைச் சொல்ல 
இல்லையே தமிழில் வார்த்தை!

எத்தமிழ்ப் பொழிவென் றாலும் 
"இதுமழைப் பொழிவோ' என்று 
முத்தமிழ்ச் சுவைஞர் சித்தம் 
முற்றுமே கலங்க வைப்பார்! 
வித்தகம் விரிப்பார்; நெஞ்சில் 
வீணையாய்ச் சிரிப்பார்! கோடிப் 
புத்தகம் போலி ருப்பார்! 
புகழ்விட்டுப் போய்விட்டாரே!

இன்னியச் சொற்கூட்டங்கள் 
எழிலுற மேவும் நாவில் 
அன்னிய மொழிதூ வாமல் 
அடர்த்தியாய்ப் பேசு வாரே! 
புண்ணியப் பேறாய் வாய்த்துப் 
பூச்சரம் போல்ம ணந்து 
திண்ணிய ராயிருந்த 
தென்னவர் போய்விட்டாரே!

வண்டமிழ் சுரந்த கொண்டல்! 
வற்றுமா? வளங்கொ ழிக்கும் 
வண்டுலாம் சோலை கூட 
வாடுமா? தலைநி மிர்ந்து 
பண்டுலா செய்த சங்கப் 
பாட்டுநம் கண்ணை விட்டு 
விண்ணுலா செலுமா? எங்கள் 
விதியிது தானோ அம்மா!

அவ்வையார் குப்பம் பெற்ற 
அமிழ்தமா வடிந்த தையோ! 
செவ்வையாய் உயர்ந்து நின்ற 
சிகரமா இடிந்த தையோ! 
எவ்வுல சுத்தும் சென்ற 
ஏற்றமா முடிந்த தையோ!
செவ்விதழ் விரித்த ஞானச் 
சிற்பமா விழுந்த தையோ!

பண்ணிலே பொருள்க லந்த 
பான்மையில் எந்நே ரத்தும் 
என்னிலே கலந்திருந்த 
இலக்கிய ஞானி- இன்று
 விண்ணிலே கலந்தார் என்னும் 
வேதனைத் தீயில் வீழ்ந்து 
கண்ணெனும் கடலில் மூழ்கிக் 
கையற்று நிற்கின் றேனே!

ஆவினை இழந்த கன்றாய் 
அலறவோ தமிழ்ப டித்தேன்! 
பூவினை இழந்த பெண்ணாய்ப் 
புலம்பவோ உடலெ டுத்தேன்! 
நாவினை இழந்து விட்ட 
நாவலன் ஆகி விட்டேன்! 
சாவினை என்ன செய்வேன் 
சான்றவர் போய்விட் டாரே!

தனக்கொரு நடைகொண் டாரே 
தண்டமிழ்ப் படைகொண் டாரே 
கணக்கிலாச் சீர்கொண் டாரே 
கவித்துவத் தேர்கொண் டாரே 
எனக்கொரு மனங்கொண் டாரே! 
எனக்குளே குடிகொண் டாரே! 
நினைக்கவே முடியா வண்ணம் 
நெடுந்தகை விடைகொண் டாரே!

சாலவே இனித்த எங்கள் 
சர்க்கரைத் திரளும் எங்கே? 
ஏலமாய் மணந்தி ருந்த 
இலக்கிய இமயம் எங்கே? 
ஞாலமே ஏத்தி நின்ற 
நவரசத் தேனும் எங்கே? 
காலமே.. தமிழர் வீட்டுக் 
காவியம் எங்கே எங்கே?

கோடைவாய் விரிந்த எங்கள்
குளிர்தரு நிழல்தான் எங்கே? 
மேடைவாய் வீசி வாழ்ந்த 
மேன்மையின் வடிவம் எங்கே? 
ஏடெலாம் ஆட்சி செய்த 
இருந்தமிழ்ச் செங்கோல் எங்கே? 
நாடெலாம் நடந்த 
எங்கள் நடராசச் செம்மல் எங்கே?

நீர்நசை தவிர்க்க வந்த 
நெல்லியங் கனிதான் எங்கே? 
வேர்நனி சிறக்க வந்த 
விரிவுரைத் திலகம் எங்கே? 
நேர்மையின் பிம்பம் எங்கே? 
நீடிய இன்பம் எங்கே? 
கூர்மையின் ஆணி எங்கே? 
கொண்ட-ஆண் வாணி எங்கே?

எடுத்தவோர் சொல்லுக் குள்ளே 
எத்தனை பொருள்சொல் வாய்நீ! 
மடுத்தவர் செவிகட் கெல்லாம் 
சிரபுஞ்சி மழையா வாய்நீ 
அடுத்தவர் களஞ்சி யத்தில் 
அனுதினம் பொன்னா வாய்நீ! 
விடுத்தெமைச் சென்றாய்.. அந்தோ 
வேறுலகில் என்னா வாய்நீ?

கல்வியிற் பெரியர் நீரே! 
கம்பனில் மூழ்கி னீரே! 
சொல்லினில் கீரர் நீரே! 
சுந்தரக் குறள்சொன் னீரே! 
வெல்வதில் அவ்வை யாரே! 
விளைவதில் புறநா னூறே! 
பல்துறை அறிவின் பேறே! 
பதறவைத் தீரே! ஐயா!

ஏங்குமே உம்மைத் தேடி 
எழுதுகோல்! "எங்கே என்னைப் 
பாங்குறச் செய்தார்' என்றே 
"படபட'த் தழுமே அந்த 
ஆங்கில மொழியும் கூட!
அறிவரைக் காணா மல்போய்த் 
தேங்குமே தமிழு ணர்ச்சி! 
சிற்றடியேன் என்செய் வேனோ?

தாமரைப் பொய்கைக் குள்ளே 
தவழ்ந்திடும் அன்னங் கள்போல் 
சாமமோ பகலோ உம்மில் 
சங்கமித் திருந்தோம் ஐயா! 
பூமது வுண்டோம்; உங்கள் 
புன்னகைத் தமிழ்மோ கித்துத் 
தாமுரை கற்றோம்; இன்று 
தாயிலா நிலையைப் பெற்றோம்!

நயவுரை நம்பி என்றே 
நம்பிநீ முன்மொ ழிந்தாய்! 
பயவுரை ஆற்றும் என்னை 
பதவுரை ஆற்ற வைத்தாய்! 
தயவுரை தான்கற் பித்துத் 
தலையினை நிமிர வைத்தாய்! 
இயற்கையின் அழைப்பை ஏற்றாய் 
எந்தாய்!நீ போய்விட் டாயே!

பாற்கடல் இல்லா விட்டால் 
பரமனும் துயில்வ தெங்கே? 
நூற்கடல் நீயில்லாமல் 
நூற்பொருள் உறைவ தெங்கே? 
நாற்கடல் பொங்கும் நாவின் 
நல்லுரை கேட்ப தெங்கே? 
மேற்புலவர் இல்லா எங்கள் 
மேதைநீ போன தெங்கே?

அரசுலாம் அவையம் எங்கும் 
அறிவினால் கீர்த்தி பெற்றாய்! 
அரசியற் கப்பால் என்றும் 
ஆளுமைச் சீர்த்தி பெற்றாய்! 
அரசுகள் விருத ளிக்க 
அளவிலா நேர்த்தி பெற்றாய்! 
அரசுதரும் மரியா தைக்குள் 
அடடா..நீ பூர்த்தி பெற்றாய்!

தன்னுடல் உயிர னைத்தும் 
தமிழ்க்கென வாழ்ந்த உங்கள் 
பொன்னுடல் சுமக்கும் பேற்றைப் 
புல்லியன் பெற்றேன்; ஆனால் 
என்னுடல் ஆவி எல்லாம் 
எப்படித் தளர்ந்தேன் என்றே 
என்னுடை நாவால் சொல்ல 
இயலுமோ... அந்தோ...அந்தோ!

(தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் மறைவையொட்டி, எஸ்.ஜெகத்ரட்சகன் எழுதிய இரங்கற்பாவில் சில பகுதிகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT