தினமணி கொண்டாட்டம்

அஹிம்சை அழியாது...

27th Nov 2022 06:00 AM | எஸ்.சந்திரமௌலி

ADVERTISEMENT


"காந்திஜி போதித்த அஹிம்சைக்கு இன்றும் உலகளாவிய மதிப்பு, மரியாதை இருக்கிறது. அவர் வன்முறைக்குப் பலியாகி விட்டபோதிலும், உலகத்துக்கான அவரது செய்தி என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை'' என்றார் தாராகாந்தி பட்டாசார்ஜி.

மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி, மூதறிஞர் ராஜாஜியின் மகள் லட்சுமி தம்பதியரின் மகள் தான் தாராகாந்தி பட்டாசார்ஜி. எண்பத்து எட்டு வயதானவர்.

தில்லியில் உள்ள தேசிய காந்திஜி அருங்காட்சியத்தின் தலைவராகவும், கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர். தற்போது அவற்றின் அறங்காவலராக இருக்கிறார்.

சென்னை தியாகராய நகர் தக்கர்பாபா வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, "தமிழ்நாடு என்தாய்நாடு; தமிழ் எனது தாய்மொழி!' என்று தலைப்பில் பேசினார். அவருடன் ஒரு பிரத்யேக சந்திப்பு:

ADVERTISEMENT

உங்கள் பார்வையில் காந்திஜியின் ஆளுமையை விளக்குங்களேன்!

எளிமையான தோற்றம். பலவீனமான தேகம். ஆனால் அவருக்குப் பயம் என்பதே துளியும் கிடையாது. அசாத்தியமான மனோ தைரியம்தான்அவருடைய பெரிய பலம். அவருடன் அதிக நேரம் செலவிட எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். அவருடைய சுதந்திரப் போராட்ட வாழ்க்கைப் பயணம் பற்றி எல்லோரும்அறிவோம். ஆனால், எனக்கு அவரது உள்நோக்கிய ஆன்மிகப் பயணம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும்ஆசை. இப்போது, அவர் என் முன்னே தோன்றினால், அவருடைய ஆன்மிகப் பயணம் பற்றித் தான் நான் கேட்டுத்
தெரிந்துகொள்வேன்.

காந்திஜியின்ஆஸ்ரமங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்தான் என்பார்களே?

ஆஸ்ரம விதிமுறைகளை அனைவரும் ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்துவார். ஆனால், சில நேரங்களில் அவற்றிலிருந்து விதிவிலக்கு அளித்ததும் உண்டு. உதாரணமாக, எனது அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய பிரதான உணவு அரிசிதான். எனவே, அப்பா-அம்மாவின் திருமணத்துக்குப் பின்னர் அவர்கள் ஆஸ்ரமத்துக்கு வந்தபோது, உணவாக ரொட்டியை சாப்பிட அம்மா மிகவும் சிரமப்பட்டார். தனது சிரமங்களை காந்திஜியிடம் அம்மா கூறினார். அதைக் கேட்டதும், அரிசி உணவு சாப்பிட்டு பழகிய தென்னிந்திய பெண்ணை, ஆஸ்ரம விதிமுறை என்ற பெயரில் ரொட்டி சாப்பிடுமாறு திணிப்பது சரியல்ல என்று சொல்லி, அம்மாவுக்கு அரிசி உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இதை அம்மா மிகவும் நெகிழ்ச்சியோடு என்னிடம் சொல்லியிருக்கிறார்.

காந்திஜியுடனான உங்களுடைய நெகிழ்ச்சியான தருணங்களைச் சொல்ல முடியுமா?

காந்திஜி புணேவில் ஆகாகான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு நான் கடிதம் எழுதினேன். அதைப்படித்துவிட்டு, எனக்கு அவர் எழுதிய பதிலில் கடிதத்தில், " உன் அன்பினை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது என்பது உண்மைதான். ஆனால், உனது கையெழுத்து மிக மோசமாக இருக்கிறது. அழகான கையெழுத்துக்கு நீ பயிற்சி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

ஒருசமயம் பாபுஜியையும் பாட்டி கஸ்தூர்பாவையும் பார்ப்பதற்காக என் பெற்றோர் ஆகாகான் மாளிகைக்கு என்னையும் அழைத்துச் சென்றனர். என்னைப் பார்த்தவுடன், பாட்டி ஒரு புடவையை அளித்து, "இது என் அன்புப் பரிசு' என்றார். அப்போது, ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காந்திஜி மெல்லிய புன்னகை மூலமாகத் தனது ஒப்புதலைத் தெரிவிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம் அங்கு நெய்யப்படும் துணி வகைகள் ஆஸ்ரமத்துக்கே சொந்தம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

இன்னொரு பாட்டனாரான ராஜாஜி குறித்து?

காந்திஜிக்கும், ராஜாஜிக்கும் இடையில் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு. ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பிரித்துப் பார்க்கவே முடியாது.

இருவருடைய வாழ்க்கையும் மிகவும் எளிமையானது. மிகக் குறைந்த வசதிகளோடு, அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ராஜாஜியின் அறைக்குள்ளே போகிறபோது, எனக்கு காந்திஜியின்அறைக்குள்ளே போவதுபோலவே இருக்கும். இருவரும் பொதுவாழ்க்கையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியதைப் போலவே, குடும்பத்தின் மீது ஆழமான பாசம் கொண்டிருந்தனர். காந்திஜி மறைந்த பிறகும் பலஆண்டுகள் ராஜாஜி வாழ்ந்ததால் நீண்டகாலம் அவரதுஅன்பைப் பெற வாய்ப்பு அமைந்தது.

காந்திஜி கனவு கண்டஇந்தியா, அவரது 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய இந்த நிலையில், நிறைவேறியுள்ளதாக நனவாகியுள்ளதா?

இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததன் மூலமாக, ஆங்கிலேயர் தங்கள் அநீதிக்கு முடிவு கட்டினர். ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் நம்முடைய அநீதிகளுக்குள் சிக்கிக் கொண்டு, மீள முடியாமல் இருக்கிறோம். அவர் இந்தியா முழுக்க சர்வோதய இயக்கம் கிளைபரப்பி, சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அது இன்னமும் நிறைவேறவில்லை.
மக்களுக்கு ஏற்பட்ட பேராசையையும், படோடோபத்தையும் கண்டு காந்திஜியும் ராஜாஜியும் மன வேதனை அடைந்தனர். நான் பளபளவென்று ஆடைஅணிந்தால், ராஜாஜி "எளிமையான உடை அணியக் கூடாதா? எதற்கு இந்த டாம்பீகம்?' என்று கேட்பார். உன்னுடைய குறைந்தபட்சத் தேவைகளுக்கு மட்டும் வைத்துக் கொண்டு, அதிகப்படியானதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று இருவருமே வலியுறுத்தினர்.

அஹிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்துவந்தகாந்திஜியின் வாழ்க்கை துப்பாக்கிக் குண்டு மூலம் முடிவுக்கு வந்தது என்பது துரதிர்ஷ்டமில்லையா?

மிகவும் துரதிர்ஷ்டமானதுதான்! ஆனால், காந்திஜி மறைந்துவிட்டாலும், அவர் போதித்த அஹிம்சைக்கு இன்றும் உலகளாவிய மதிப்பு, மரியாதை இருக்கிறது என்பது எனக்கு மிகுந்த திருப்திஅளிக்கிறது. அவர் வன்முறைக்குப் பலியாகிவிட்டபோதிலும், உலகத்துக்கான அவரது செய்தி மற்றும் அஹிம்சை என்றென்றும் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT