தினமணி கொண்டாட்டம்

வரலாறு போற்றும் மீன்பிடித் திருவிழா

22nd May 2022 06:00 AM | கி. ஸ்ரீதரன் 

ADVERTISEMENT

 


ஏரிகள்,  குளங்கள் மற்றும் நீர் நிலைகள் மனித வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. ஏரிகள் வேளாண்மைக்கு - உழவுத் தொழிலுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.  எனவே தொன்றுதொட்டு ஏரிகளை போற்றி பாதுகாப்பதற்கும், தூர்வாரி ஆழப்படுத்தவும் ஆதரவு அளித்ததை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் கூறுகின்றன.

ஏரிப்பட்டி 

நல்ல முறையில் ஏரி குளங்கள் போன்றவற்றை பராமரிக்க நிலங்கள் பண்டைய மன்னர்களாலும் மக்களாலும் கொடையாக அளிக்கப்பட்டன. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் ஏரிப்பட்டி, குளப்பட்டி என்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பாசிப்பாட்டம்

ஏரிகளில் இருந்து மீன் பிடிப்பதால் வரும் வருவாயும் ஏரிகளைப் பராமரிக்கப் பயன்பட்டது. இதனைப் பாசிப்பாட்டம் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் வட்டத்தில் பூங்குளம் கிராமத்தில் காணப்படும் கல்வெட்டில் விஜயநகர மன்னன் வேங்கடன் காலத்தில் பூங்குளம் குளத்து மீன்களை விற்ற தொகையில் குளத்தை ஆழப்படுத்திய செய்தி கல்வெட்டில் (கி.பி. 1425) காணப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் அருகிலுள்ள வல்லாஞ்சேரி என்ற ஊரில், ஏரியில் காணப்படும் கல்வெட்டில் மீன் பிடிக்கும் உரிமை பெற்றிருந்தவர்கள் ஏரியில் படிந்துள்ள சேற்றை வருடத்துக்கு 30 சதவீதம் அகற்றி தண்ணீரைத் தேக்கிட ஆவன செய்த குறிப்பு காணப்படுகிறது.

ஏரி மீன் பாட்டம்

ஏரிகளை நம்பி தொழில் செய்வோரிடமும் வரிகள் வாங்கப்பட்டன. ஏரிகளிலும், ஏரி கால்களில் மீன் பிடிப்பதற்காக ஏரி மீன் பாட்டம், ஏரி மீன் அவசரம், வீசு வலைப்பாட்டம் ஏரி மீன் காசு (திருவோத்தூர் கல்வெட்டு) மீன் பாட்டம் பாசிப்பாட்டம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டு இருந்தன என்பதையும் அறியமுடிகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராங்கியம் எனப்படும் ராஜசிங்கமங்கலம் ஊரில் காணப்படும் கல்வெட்டில் இரண்டு ஊர்களுக்குள் ஏற்பட்ட நீர் பங்கீடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.  பயன்படுத்தும் தண்ணீருக்காக நீர் கூலியாக கோயிலுக்கு நெல் அளிக்க வேண்டும். மேலும் இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் குளத்தை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவில் இரு ஊராரும் மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் அந்தக் கல்வெட்டில் காணப்படுகிறது. 

இதுபோன்று மீன்பிடித்தல் பற்றியும் அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏரி குளங்கள் ஆழப்படுத்த பட்டதையும் சர்க்கார் பெரியபாளையம் (கோவை மாவட்டம்) குள்ளபுரம் (தேனி மாவட்டம்); போன்ற பல ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மீன்பிடித் திருவிழா 

கோடைக் காலத்தில் கடும் வெயிலால் ஏரிகளில் நீர் வற்றி விடும். அதனால் அதில் உள்ள மீன்கள் இறந்து விடும் நிலை ஏற்படும் இதனைத் தவிர்க்க மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா சிறப்பாக நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம்.  ஏரியின் அருகில் உள்ள கிராமத் தேவதைகளுக்கு வழிபாடுகள் நடைபெற்று பின்னர் ஊர் பெரியவர்கள்  முன்னிலையில் ஆண்கள்,  பெண்கள், சிறுவர்கள் இணைந்து மகிழ்ச்சியுடன் மீன் பிடிப்பார்கள். இதிலிருந்து வரும் வருவாயை ஒரு பகுதியினை அவ்வேரியில் மராமத்து பணிகளுக்கு செலவிடுவார்கள். 

புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை போன்ற ஏரிகள் நிறைந்த மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க மீன்பிடித் திருவிழா தொன்றுதொட்டு நடைபெற்று வருவது தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.

(தொல்லியல்துறை - பணி நிறைவு).

ADVERTISEMENT
ADVERTISEMENT