தினமணி கொண்டாட்டம்

படித்தது பொறியியல் பயிரிடுவதோ பன்னீர் திராட்சை

22nd May 2022 06:00 AM | கோ.முத்துகுமார்

ADVERTISEMENT

 

வெப்பம் மிகுந்த திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய முயற்சியாக பொறியியல் பட்டதாரி செலின், பன்னீர் திராட்சையைப் பயிரிட்டு அதிக மகசூல் பெற்று முன்மாதிரி விவசாயியாகத் திகழ்ந்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள காணிமடம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி மகன் செலின். பொறியியல் பட்டதாரியான இவர், கப்பலில் பணியாற்றி வந்தார். இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் காரணமாக பணியை விட்டுவிலகி, திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் அருகே அச்சம்பாடு பகுதியில் குடும்பத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் புதிய முயற்சியாக பன்னீர் திராட்சையை சாகுபடி செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, 2019- ஆம் ஆண்டில் சாகுபடி பணியைத் தொடங்கிய அவர், முன்மாதிரி விவசாயியாக உருவெடுத்து, திருப்திகரமான மகசூலும் பெற்று வருகிறார். தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளைத் தேர்வு செய்யும் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அளவில் முதல் பரிசையும் அவர் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து செலின் கூறியதாவது:

பொறியியல் படித்த பிறகு கப்பலில் பணிக்குச் சென்றேன். அங்கு ஆஸ்திரேலிய மாலுமி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்கள் நாட்டின் வெப்பம் மிகுந்த பகுதிகளில் விளையும் திராட்சைப் பழங்களில் சுவை அதிகம் என்றார். அதிலிருந்து எனக்கு திராட்சை சாகுபடி மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. கப்பல் பணியை ராஜிநாமா செய்த பின்பு அச்சம்பாடு பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் சகோதரர்களுடன் இணைந்து பன்னீர் திராட்சை பயிரிட முடிவு செய்தேன். தேனி, கம்பம் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திராட்சை தோட்டங்களைப் பார்த்ததோடு, கே.கே.பட்டியில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில் சில பயிற்சிகளைப் பெற்றேன். அதன்பின்பு 2 ஏக்கர் பரப்பில் திராட்சை சாகுபடியைத் தொடங்கினேன்.

கவாத்து பணியில் கவனம்: பன்னீர் திராட்சை செடிகள் வெப்பம் மிகுந்த பகுதியில் நேரடியாக வளராது. அதற்காக "ரூட் ஸ்டாக்' எனப்படும் ஒரு செடியுடன் இணைத்து வளர்த்து அதன்பின்பு கொடியை வெட்டி தளிர்க்கவிட வேண்டும். ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு திராட்சை செடியை முறையாகக் கவாத்து செய்தால் 25 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு நான்கு முறை அறுவடை செய்ய முடியும். கவாத்து என்றால்.. கரும்புக்கு இருப்பது போல திராட்சைக்கும் கணு உண்டு. மூன்றாவது கணுவில் வெட்டி கழிப்பதற்கு கவாத்து என்று பெயர்.

திராட்சை வளர்ப்பில் கவாத்து பணியில் கூடுதல் கவனம் தேவை. இதற்காக பிரத்யேகமாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து ஆள்களை அழைத்து வந்து கவாத்து செய்கிறோம். பருவநிலை மாற்றங்களும், பறவைகளும் திராட்சை சாகுபடியில் பெரும் சவாலாக உள்ளன. திராட்சை தோட்டத்துக்குள் மைனா, கிளி ஆகியவை கூட்டமாக புகுந்தால் ஒரு நாளில் குறைந்தபட்சம் 500 கிலோ திராட்சைகளை சாப்பிட்டுவிடும். இதேபோல தொடர்மழை பெய்தால் "செவட்டை' என்ற நோய் வரும். திராட்சையில் உர மேலாண்மை மிகவும் குறைவு. இயற்கை விவசாயத்தில் ஆட்டுச்சாணம் போட்டால் திராட்சையின் கருமை நிறம் அதிகரிக்கும். மாட்டுச்சாணம் போடும்போது மகசூல் அதிகரிக்கும்.

கூடுதல் மானியம் தேவை: திராட்சை சாகுபடிக்கு தோட்டக்கலைத் துறையினர் பல்வேறு வழிகளில் உதவி வருகிறார்கள். இந்தச் சாகுபடியில் பந்தல் அமைப்பதற்கு அதிக செலவு பிடிக்கிறது. 7 அடி உயரத்தில் மிகவும் உறுதியான கம்பிகளால் பந்தல் அமைத்தால்தான் மகசூல் அதிகரித்தாலும் தாழ்வாகாமல் கொடி படர்ந்திருக்கும். ஆனால், ஒரு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் மட்டுமே மானியம் வழங்குகிறார்கள். அந்தத் தொகைக்குள் பணியை முடிக்க இயலாது. அந்த மானிய தொகையை அதிகரிக்க வேண்டும்.

இப்போது தரிசு நிலத்தை மேம்படுத்தி தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வோரை ஊக்குவிக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.

நிகழாண்டில் 60 சென்ட் நிலத்தில் 6 டன் பழங்களை அறுவடை செய்துள்ளேன். முன்பு 10 டன் வரை கிடைத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை உள்ளிட்ட காரணங்களால் மகசூல் குறைந்துள்ளது.

ஆனாலும், அடுத்த முறை இதேநிலை நீடிக்காது என்பதால் உற்சாகமாக சாகுபடி பணிகளைத் தொடர்ந்து வருகிறேன். அடுத்ததாக பச்சை மற்றும் கருப்பு நிறத்திலான விதையில்லா திராட்சைகளை பயிரிட முடிவு செய்துள்ளேன். இளைஞர்கள் விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்தோடு பயணித்தால் நிச்சயமாக லாபம் கிடைக்கும் என்றார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு பல்வேறு ஊக்கம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. விவசாயி செலினுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கியுள்ளோம். மேலும், சிலரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தேனி, பெங்களூரு பகுதிகளில் இருந்து வரும் திராட்சையைவிட குறைந்த விலைக்கு நேரடியாக விவசாயி செலின் விற்பனை செய்வதால் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்கள் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT