தினமணி கொண்டாட்டம்

கூலி வேலை முதல் கிரிக்கெட் வரை...!

பிஸ்மி பரிணாமன்

மும்பை கிரிக்கெட் அணியின் உயிர்மூச்சு காற்றாக... அதிவேகப் பந்து வீச்சாளராக மாறியிருக்கும் குமார் கார்த்திகேயா சிங்கின் அந்த நாள் வாழ்க்கையை பற்றி அறிந்தால் தூக்கிவாரிப் போடும்.

ஓர் ஆண்டு முழுவதும் மதிய உணவு சாப்பிடாமல் உழைத்துள்ளார். அவர் பார்த்த வேலை கூலி வேலை. பிறகு எப்படி அவர் கிரிக்கெட் பக்கம் வந்தார் ? இவரது கதை கற்பனையையும் மிஞ்சும். உழைப்பின் வெற்றிக்கு ஓர் உதாரணம்.

நடக்கும் ஐபிஎல்- கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்குப் போதாத காலம். ஆடிய எட்டு ஆட்டங்களில் தோல்வி. துவண்டு போன மும்பை அணி கடைசியாக ராஜஸ்தான் அணியைத் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தவர் 24 வயது குமார் கார்த்திகேயாதான்! அவர் அறிமுகப்படுத்தப்பட்டதே ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் மூலமாகத்தான்!

மும்பை அணியின் ஆட்டக்காரர் ஒருவர் விலக... அந்த இடத்துக்கு கார்த்திகேயா கொண்டுவரப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே 4 ஓவர்களில் பந்து வீசி 19 ரன்களை மட்டுமே எதிர் அணியை எடுக்க வைத்தார். ஒரு விக்கெட்டையும் கார்த்திகேயா கைப்பற்றினார். அந்த ஒரு விக்கெட் ஆட்டத்தையே புரட்டிப் போட்டது. அந்த விக்கெட்டால் வீழ்ந்தது ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த சஞ்சு சாம்சன்.

கார்த்திகேயா விக்கெட்டுகள் அதிகமாக எடுக்கவில்லை. ஆனால் அவரது பந்து வீச்சு ராஜஸ்தான் அணியை திணறச் செய்தது. வேகம் நிறைந்த கார்த்திகேயாவின் சுழல் பந்து வீச்சை எதிர்கொண்டால் அது ‘கேட்ச்'சாக மாறும் அபாயம் இருக்கிறது என்பது ஆட்டக்காரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெரிந்திருந்தது.

கார்த்திகேயா குறித்து பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கூறியதாவது:

""கார்த்திகேயாவின் அப்பாவுக்கு போலீஸ் வேலை. உத்தரப் பிரதேசம் கான்பூரில் வேலை பார்த்துவந்தார். வேலை நிமித்தம் அப்பா தில்லிக்குப் போக, கார்த்திகேயாவும் தில்லி சென்றார். அப்போது கார்த்திகேயாவுக்கு வயது பதினைந்து. கார்த்திகேயாவுக்கு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று அதீத விருப்பம். ஆனால் வீட்டிலோ பொருளாதாரச் சிக்கல். கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத நிலைமை.

தில்லி கிரிக்கெட் பயிற்சி நிலையங்களில் இலவசப் பயிற்சி கேட்டு நடையாய் நடந்தார். கடைசியில் நான் சேர்த்துக் கொண்டு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். பதினைந்தாவது வயதிலேயே குமார் கார்த்திகேயா கூலி வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். இதன் இடையே கார்த்திகேயாவின் குடும்பம் கான்பூருக்குத் திரும்பிச் சென்றது. அதன் காரணமாக கார்த்திகேயா தங்குவதற்கு ஒரு அறை தேவைப்பட்டது.

எனது பயிற்சி நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இயங்கும் ஒரு தொழிற்சாலைக்குத் தினமும் இரவு நேரத்தில் கார்த்திகேயா வேலைக்குச் சென்றுவருவார். இரவு முழுவதும் வேலை. வேலை முடிந்ததும் காலையில் பயிற்சி நிலையத்துக்குத் திரும்ப காலையில் பேருந்தில் வரமாட்டார். லிஃப்ட் கேட்டு யாருடைய வண்டியிலாவது ஏறி வந்துவிடுவார். பஸ் கட்டணமான பத்து ரூபாய் கையில் இருந்தாலும் , லிஃப்ட் கேட்டு பயிற்சி நிலையம் வந்து சேர்வார். பஸ் கட்டணம் எடுக்காமல் வருவதால் மிச்சமாகும் பணத்துக்கு காலையில் பிஸ்கட்டுகள் வாங்கி சிற்றுண்டியை முடித்துக் கொள்வார்.

பயிற்சிக்கு வரும்முன் மதிய உணவே சாப்பிடாமல் ஓர் ஆண்டுகாலம் இப்படி இருந்திருக்கிறார். கார்த்திகேயா தினமும் நீண்ட தூரம் பயணம் செய்கிறார் என்பதால், எனது பயிற்சி நிலையத்தில் சமையல்காரருடன் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். நிலையத்தில் மதிய வேளையில் சமையல்காரர் இருக்கும் உணவை கார்த்திகேயாவுக்கு கொடுப்பார். அந்தத் தருணங்களில், மதிய வேளைகளில் தான் பட்டினி கிடந்ததை நினைத்து அழுவாராம். தில்லியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றாலும் தில்லி அணியில் சேர்ந்து விளையாட கார்த்திகேயாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கார்த்திகேயாவை எப்படியாவது ஏதாவது கிரிக்கெட் அணியின் சேர்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்து, மத்திய பிரதேசத்தில் வசிக்கும் எனது நண்பரிடம் அவரை அனுப்பி வைத்தேன். நல்லவேளை... அங்கு அவர் ஓர் அணியின் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேல் விக்கெட்கள் எடுத்து பெருமை சேர்த்தார்.

கடின உழைப்பால் முன்னேறியிருக்கும் குமார் கார்த்திகேயாவுக்கு இன்று கிரிக்கெட் விளையாட்டில் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மும்பை அணி கார்த்திகேயாவை ரூ. 20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. இனி அவருக்கு ஏறுமுகம்தான்'' என்கிறார் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ்.

கவுதம் கம்பீர், அமித் மிஸ்ராவின் பயிற்சியாளரும் சஞ்சய் பரத்வாஜ்தான்.

"நான் கடந்த 9 ஆண்டுகளாக கான்பூர் சென்று பெற்றோரைப் பார்க்கவில்லை. கைப்பேசியில் பேசிக் கொள்வோம். கிரிக்கெட்டில் பெயர் சொல்கிற மாதிரி சாதித்துவிட்டுத்தான் ஊர் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். இப்போது எனது கிரிக்கெட் கனவு நனவாகியுள்ளது. இந்தப் போட்டி தொடர் நிறைவானதும் ஊர் சென்று பெற்றோரிடம் ஆசி பெறுவேன்' என்கிறார் குமார் கார்த்திகேயா சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT