தினமணி கொண்டாட்டம்

கண்களைக் கவரும் காகிதச் சிற்பங்கள்

15th May 2022 06:00 AM | எல்.அன்பரசு

ADVERTISEMENT

 

உபயோகப்படுத்திய பழைய காகிதங்களைப் பயன்படுத்தி "காகிதச் சிற்பம்' தயாரிக்கும் புதிய கலை -உலக அளவில் பொதுமக்களைக் கவர்ந்து வருகிறது.

புதுச்சேரி வீமன் நகரைச் சேர்ந்தவர் ஆ.கிருஷ்ணன். நுண்கலைப் பட்டதாரியான இவர், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கோவையில் நுண்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, புதுச்சேரியில் பொம்மைகள் தயாரிப்பு போன்ற கலைப்பொருள்கள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ADVERTISEMENT

ஆசிரியர் பணி கிடைத்தவுடன், அந்தப் பணியோடு ஓய்வு நேரத்தில் வீணாகிப் போன காகிதங்களைப் பயன்படுத்தி காகித சிற்பங்களை உற்பத்தி செய்து வருவதோடு, அதற்கான பயிற்சியையும் அளித்துவருகிறார். இதனால் அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதோடு, பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார்.

புதுச்சேரி சோலை நகரில் மாணவர்களுக்கு காகிதச் சிற்பங்கள் தயாரிக்கும் பயிற்சியை அளித்துகொண்டிருந்த ஆ.கிருஷ்ணனை சந்தித்தபோது, அவர் கூறியதாவது:

""ஆரம்பக் காலத்தில், ஓவிய ஆசிரியர் அன்பழகனுடன் இணைந்து, காகிதப் பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தேன். அப்போது, பல பள்ளிகளுக்கும் சென்று பயிற்சியை அளித்துள்ளோம்.

காகிதக் கூழ் பொம்மைகள் அனைவரும் அறிந்த நிலையில், புதிய முயற்சியாக வீணாகிய, உபயோகமில்லாத காகிதங்களை வைத்து காகிதச் சிற்பங்கள் தயாரிக்கும் நுட்பத்தை 2003-ஆம் ஆண்டில் தொடங்கினேன்.

முதன் முதலில், ஒரு விவசாயி அவரது குடும்பத்தினரின் தோற்றத்தை காகிதச் சிற்பமாக 6 அடி உயரத்தில் தயாரித்தேன்.

புதுச்சேரி ஆரோவில் பகுதியில் அதனை செய்து காட்சிக்கு வைத்தபோது, பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்போது முதல் போர் வீரர் சிற்பங்கள், விலங்குகள், தலைவர்களது சிலைகள் என பல்வேறு வடிவங்களில் காகிதச் சிற்பங்களை தயாரித்து வருகிறேன்.

இந்தச் சிற்பங்களைத் தயாரிக்கப் பழைய காகிதங்கள், நோட்டு, புத்தகங்கள், தினசரி இதழ்கள் ஆகியவை போதும். அதனைசிறு, சிறு துண்டுகளாகக் கிழித்து, பைண்டிங் பசையைப் பயன்படுத்தி காகிதங்களை ஒன்றன் மீது ஒன்றாக ஒட்டி வைத்து, சிற்பங்களை கலைநயத்துடன் தயாரித்து வருகிறோம்.

மிகவும் எளிமையான, ஆனால் புதுவைமையான கலைப் பணி. சிற்பத்துக்கு அடித்தளமாக சிறிய மரக்கட்டை, காகிதங்களைத் தாங்கி நிற்க மூங்கில் குச்சிகள், கம்பிகள் மட்டுமே இதற்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறோம். காதிதச் சிற்பத்தைத் தயாரித்து, அதன் மீது கருப்பு, சில்வர் வண்ணம் பூசி மெருகேற்றுகிறோம்.

கோவையில் நான் படித்த கல்லூரியின் முதல்வர் ரவிராஜிடம் ஒருமுறை இந்த காகிதச் சிற்பத்தை காண்பித்தபோது, வியந்து கல்லூரியில் காட்சிப்படுத்தக் கூறினார். 2015-ஆம் ஆண்டில் கோவையில் நடந்த கண்காட்சியில் அதனை முதன்முதலில் காட்சிப் படுத்தினேன். அதுவே எனக்கு முதல் அங்கீகாரத்தை வழங்கியது. அதனைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட கண்காட்சிகள், பயிலரங்குகளில் பங்கேற்று, இந்தக் கலையை அனைவரிடமும் பகிர்ந்து வருகிறேன்.

சென்னை லலித் கலா அகாதெமி சார்பில் அண்மையில் அழைக்கப்பட்டு, அங்கு காகிதச் சிற்பக் கலையை பயிற்றுவித்து வந்தேன்.

இந்தக் கலையை புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, ஊக்கப்படுத்தியதோடு, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சியளிக்கும் வாய்ப்புகளையும் வழங்கினார்.

புதுச்சேரி காந்தி திடலில் 2019-இல் நடந்த கைவினைப்பொருள் கண்காட்சியிலும் எங்களது பள்ளி சார்பில் பங்கேற்று, இந்தச் சிற்பத்தை காட்சிப்படுத்தி விருதைப் பெற்றோம்.

இதையறிந்து, புதுவை துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன் என்னை அழைத்து, கடந்த ஜனவரி மாதத்தில் புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேரடியாக நடக்கவிருந்த தேசிய இளைஞர் விழாவில் வழங்குவதற்காக, புதிய காகிதச் சிற்பங்களை தயாரிக்கும்படி கூறினார். உடனடியாக, தமிழர் பாரம்பரியக் கலையை வெளிப்படுத்தும் வகையில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஏர் உழவர்கள் போன்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காகிதச் சிற்பங்களை தயாரித்து வழங்கினேன். ஆளுநர் தமிழிசை மிகவும் வியந்து பாராட்டினார்.

இதன்பின்னர், திடீரென அழைத்த ஆளுநர் தமிழிசை, தில்லியில் உள்ள முக்கிய நபர்களுக்கு வழங்க வேண்டும் என காகிதச் சிற்பங்களை செய்துதரும்படி கேட்டார். உடனடியாக ஒரு மணி நேரத்தில் அதனை செய்து முடித்து வழங்கினேன். அதனை எடுத்துச் சென்றவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசாகவும் அதனை வழங்கினார். அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டு உலகம் அறியச் செய்து, இந்த கலையை அங்கீகரித்தார்.

புதுவைக்கு வந்த உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பாரத மாதா காகிதச் சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.

தற்போது, ஒரு அடி முதல் 7 அடிகள் வரை காகிதச் சிற்பங்களைதயாரித்து வழங்கியுள்ளோம். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்தச் சிற்பத்தை உற்பத்தி செய்து, விற்பனையும் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

சிற்பங்களைத் தயாரிக்க ரூ.50 முதல் ரூ.200 வரையே செலவாகும். அதனை ரூ.1,000 முதல் அதற்கு மேலாகவும் விற்பனையும் செய்யலாம். அவரவர் விரும்பும் கலை நயத்தில் இந்த காகித சிற்பங்களை செய்ய முடியும். குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வரை இந்தக் காகிதச் சிற்பம் நிலைத்திருக்கும். இடையே வண்ணம் பூசி புதுப்பித்தால் போதுமானது.

காகிதத்தில் சிற்பங்களைத் தயாரிப்பது பெருமையாக உள்ளது'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT