தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே... - 66

15th May 2022 06:00 AM | டாக்டர்  எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT


நம் முன்னோர்களுக்கு உடலில் ஓடும் ரத்தத்தைப் பற்றி  அதிக  விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   விபத்துகளால் ரத்த இழப்பு ஏற்பட்டதை அவர்கள் அனுபவ ரீதியாகப் பார்த்திருப்பார்கள்.  அதிக ரத்த இழப்பு ஏற்பட்டால், உயிருக்கு ஆபத்து என்பதும்,  இறந்து விடுவோம் என்பதும் அவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

விஞ்ஞானம் முன்னேறினாலும், ரத்தத்தைப் பற்றிய முக்கியத்துவம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. 

ரத்தத்தை "திரவத் தங்கம்' என்றும் அழைப்பதுண்டு.  ஆனால், உண்மையில் ரத்தம் தங்கத்தைவிட உயர்ந்தது.  மனிதர்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, ஒரு துளி ரத்தத்தைக் கூட தேவையில்லாமல் வீணாக சிந்தக் கூடாது.

1492- ஆம் ஆண்டில் ரோம் நகரில் வாழ்ந்த அரச குடும்பத்தைச்  சேர்ந்த ஏழாவது போப் இன்னஸைன்ட் என்பவருக்குத் தான் முதன் முதலில் ரத்த மாற்றம் செய்யப்பட்டது.  மூன்று திடகாத்திரமான  இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களின் ரத்தத்தை போப்புக்கு செலுத்தினார்கள்.  நோய் குணமடைவதற்கான ரத்த மாற்ற சிகிச்சை முறை வெற்றி பெறவில்லை.  சில நாள்களிலேயே போப் இறந்து விட்டார்.

ADVERTISEMENT

1628- ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஹார்வி என்ற மருத்துவர்  ரத்தம்  எப்படி  இதயத்திலிருந்து உடல் முழுக்க சுத்த ரத்தக் குழாய்கள் வழியாகச் சென்று,  பின் மறுபடியும் அசுத்த ரத்தக் குழாய்கள் வழியாக இதயத்துக்கே வந்து சேருகிறது என்பதைக் கண்டுபிடித்து அறிவித்தார். 1665- ஆம் ஆண்டில் ரிச்சர்ட் லோவர் என்ற விஞ்ஞானி, ஒரு நாயின் ரத்தத்தை இன்னொரு நாய்க்குச் செலுத்தி வெற்றி கண்டார். 

1667-இல் டாக்டர் ரிச்சர்ட் லோவர் தனது நண்பருடன் சேர்ந்து, ஆட்டின் ரத்தத்தை மனிதனுக்குக் கொடுத்துப் பார்த்தார். ஆனால், அதற்குப் பிறகு ஏற்பட்ட அதிக உயிர் இழப்புக்குப் பயந்து, விலங்கிலிருந்து மனிதனுக்கு ரத்தத்தைச் செலுத்திப் பார்க்கும் முறையையே நிறுத்திவிட்டார். 1795- ஆம் ஆண்டில் சிங் பிஸிக் என்பவர்,  முதன்முதலில் ஒரு மனிதனுடைய ரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்தி வெற்றியும் கண்டார்.  இந்த வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் விட்டுவிட்டார்.

1900-ஆம் ஆண்டில் கார்ல் லேன்ட்ஸ்டெயினர் என்ற ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி,  மனித ரத்தத்தில் மூன்று விதமான ரத்த வகைகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். A,B,O ஆகிய மூன்று ரத்த வகைகள் தான் அவர் கண்டுபிடித்து அறிவித்தது ஆகும். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1902-இல் கார்ல் லேன்ட்ஸ் டெயினருடன் வேலை பார்த்த இரண்டு மாணவர்கள், நான்காவதாக ஒரு ரத்த வகை  இருக்கிறது; அதுதான் AB ரத்தவகை ஆகும் என்றுகண்டுபிடித்தனர்.

1903-ஆம் ஆண்டில் ஜார்ஜ் வாஷிங்டன் க்ரில் என்பவர் தான் செய்யும் ஆபரேஷன்களின்போது ரத்த மாற்ற முறையைத் தொடர்ந்து உபயோகித்து வந்தார்.  1914- ஆம் ஆண்டில் "அறுவைச் சிகிச்சையின்போது ஏற்படும்  அவசர ஆபத்துகளுக்கு ஒரே தீர்வு, நல்ல தீர்வு-நேரடியாக ரத்தத்தைசெலுத்துவதுதான் என்று ஜார்ஜ் வாஷிங்டன் அழுத்தமாகச் சொல்லிவிட்டார்.

1916-ஆம் ஆண்டில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்ட ரத்தத்தோடு, இசிட்ரேட் குளுகோஸ் திரவத்தைச் சேர்த்து ரெப்ரிஜிரேட்டரில் சில நாள்கள் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் பின்னாளில் "ரத்த வங்கி' வரக் காரணமாக இருந்தது. 

1926-இல் "பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கம்' உலகிலேயே முதன் முதலாக ரத்த மாற்றுமுறையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது.  1932-இல் ரஷியாவிலுள்ள லெனின் கிராட் மருத்துவமனையில் "ரத்த வங்கி'  அறிமுகப்படுத்தப்பட்டது.  937-இல் அமெரிக்காவில் பல இடங்களிலும் ரத்த வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1950-இல் உலகம் முழுவதும் ரத்த வங்கிகள் உருவாகிவிட்டன.

1981-ஆம் ஆண்டில் உலகில் முதல் முதலாக "எய்ட்ஸ்' நோய் கண்டுபிடிக்கப்பட்டது.  இதற்கிடையே ரத்தத்தை உபயோகித்து பல வைரஸ் கிருமிகள் கண்டுபிடிப்பும், பல கிருமிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் ரத்தத்தில் பலவிதமானஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. 

2011-ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனமானது ரத்தப் பாதுகாப்புத் திட்ட அறிக்கையை வெளியிட்டது. ரத்த தானம், ரத்த மாற்றம், ரத்தம் சம்பந்தப்பட்டசிகிச்சை முறைகளை மேற்கூறிய அறிக்கையின்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மனித வாழ்க்கையில் ரத்தம் - ஒரு பொக்கிஷம்; காணக் கிடைக்காத தங்கம். ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், உடலைத் தவம் செய்கிற மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவுப் பொருள்கள், சுவாசிக்கும் காற்று, வாழுகின்ற இருப்பிடம், தினசரி உடல் பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற பல விஷயங்கள் ரத்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளஉதவுபவைகளாகும்.

கண்டவைகளைக் கண்ட நேரத்தில், கண்டபடி சாப்பிட்டு வந்தால் உடலும் கெட்டுப் போகும்.  ரத்தமும் கெட்டுப் போகும்.  உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று தெரிந்த பொருள்களைஅறவே ஒதுக்கிவிட வேண்டும்.

ரத்தத்தை விருத்தி செய்யக் கூடிய உணவுப் பொருள்களைஉணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் கெட்ட நோய்க் கிருமிகள் சேரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சத்தான உணவுப் பொருள்களாகத் தேர்ந்தெடுத்து, சாப்பிட்டு, ரத்தத்தில் ஊட்டச்சத்து, உணவுப் பொருள்கள் எப்பொழுதும் தேவையானஅளவு இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்தம் சுத்தமாக,  சீராக, ஓடிக் கொண்டிருந்தால்தான் உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருந்தால் தான் நீண்ட நாள்கள் ஆரோக்கியமாக, தெம்பாக, சுறுசுறுப்பாக வாழ முடியும். ஆயுள் காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். 

மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார்: 

""வயசாக வயசாக என்னடா விசேஷம்?  அப்படீன்னு கேட்டா, நான் தினமும் நாளிதழில் இரங்கல் செய்தி பக்கத்தை முழுவதும் பார்ப்பேன். பார்த்துட்டு, இறந்தவர் வயசு நம்மளைவிடகம்மியா இருந்தா, பரவாயில்லையே நாம் அவரைவிட கொஞ்சம் அதிக வயசோடவாழ்ந்துகிட்டு இருக்கோமே, அப்படீன்னு நினைச்சு சந்தோஷப்படுவேன். நம்பளைவிட வயசு கூடுன ஆளு இறந்து போயிருந்தா,  ஆஹா, நமக்கு இன்னும் சொஞ்சம் டயம் இருக்குதுபோல இருக்கு' அப்படீன்னு நினைச்சு என்னை நானே தேத்திக்குவேன்'' என்று சொல்லியிருந்தார். இதுதான் உண்மையான வாழ்க்கை.

உடலில் உயிர் இருக்கும் வரை, அவனது உடலில் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும்.  உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு, அடுத்த நிமிடமே ரத்த ஓட்டம் நின்று விடும். 

ரத்தம் விசேஷமானது;  சிறப்பானது; அற்புதமானது ; செழிப்பானது.  ரத்த டெஸ்டுகளைத் தவிர ரத்தத் தானங்களைத் தவிர, வேறு எந்தக் காரணத்துக்கும் ஒரு துளி ரத்தத்தைக் கூட வீண் செய்யாதீர்கள். அடிதடி, சண்டை, சச்சரவு, தகாதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு,  தேவையில்லாமல் ரத்தத்தைச் சிந்தாதீர்கள். 

எந்தக் காரியத்தைச் செய்தாலும், பாதுகாப்புடனும், விழிப்புடனும் ரத்தம் ஒருதுளி கூட சிந்தாமல் இருக்குமாறுபார்த்து, கவனத்துடன் செய்யுங்கள்.

"வாழ்க வளமுடன்'  "வாழ்க நலமுடன்'

(நிறைவு பெறுகிறது)

ADVERTISEMENT
ADVERTISEMENT