தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே - 64

1st May 2022 06:00 AM | டாக்டர்  எஸ். அமுதகுமார்

ADVERTISEMENT

 

எனது பன்னிரண்டாவது வயதில் ஒருநாள் இரவு என் நெஞ்சுப் பகுதியில் ஒரு பாதியிலும், வயிற்றுப் பகுதியில் ஒரு பாதியிலும் நெருப்பு அள்ளி உடம்பின் மேலே கொட்டினால் எப்படி எரியுமோ? அப்படியொரு எரிச்சல் ஏற்பட்டது. தாங்க முடியாத வலி. நான் துடிப்பதைப் பார்த்த எனது பெற்றோர் ஒரு மெல்லிய துணியைத் தண்ணீரில் நனைத்து எரிச்சலாக உள்ள அந்த இடத்தின் மேல் போர்த்தினர்.

மறுநாள் விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் ஒரு பெரிய துண்டை என் உடம்பின் மீது போர்த்தி, தோளில் போட்டுக் கொண்டு அந்தக் கிராமத்தின் ஓரத்திலுள்ள ஒரு வீட்டுக்குச் சுமந்துகொண்டு சென்றார் எனது தந்தை. அந்த வீட்டிலிருந்த ஒரு பெரியவர் எனது உடலைப் பார்த்துவிட்டு, உட்காரச் சொல்லி, நன்றாகக் குழைத்த களிமண்ணைக் கொண்டு எனது உடலில் ஏதோ ஓர் ஓவியம் போன்று வரைந்து முடித்தார். பின்னர், எரிச்சல் முழுவதும் போய், அந்த இடம் மிகவும் சில்லென்று இருந்தது.

"நான்கைந்து நாள்களுக்கு வந்து எழுதிக் கொள்ளுங்கள் சரியாகிவிடும்' என்றார் அந்தப் பெரியவர். "அக்கி' என்றும் "அக்கிப்புடைப்பு' என்றும் அழைக்கப்படும் இந்த நோய் உடலின் ஒரு பகுதியில் உள்ள சருமத்தைப் பாதிக்கும். "சிக்கன் பாக்ஸ்' அதாவது சின்னம்மை என்று சொல்வோமே! அதை உண்டாக்கக் கூடிய அதே வைரஸ் நோய்க் கிருமியான "வேரிùஸல்லா ஜாஸ்டர் வைரஸ் கிருமி' தான் இந்த "அக்கிப்புடைப்பு' நோயையும் உண்டுபண்ணுகிறது. சின்னம்மை வந்துபோய், பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த வைரஸ் கிருமி உடலிலேயே பல ஆண்டுகள் அமைதியாகத் தங்கியிருந்து, ஒருநாள் "அக்கி' யாக சருமத்தில் வந்து, நம்மை ஆட்டம் காட்டிவிடும்.

ADVERTISEMENT

உடலின் ஒரு பாதியை ஓர் இம்மியளவும் தாண்டாமல், வரக்கூடிய இந்த "அக்கிப்புடைப்பு' வைரஸ் கிருமி நோய், முதலில் தோலில் அரிப்பு, நமைச்சலை ஏற்படுத்தும். அடுத்து தாங்க முடியாத வலியையும், எரிச்சலையும் உண்டு பண்ணும். பின்னர், வரிசை வரிசையாக, கொத்துக் கொத்தாக, சிறு சிறு சிவப்புக் கொப்புளங்கள் தோன்றும். இது பெரும்பாலும் தலைக்குக் கீழுள்ளமுண்டப் பகுதி, கழுத்து, முகம் ஆகிய இடங்களில் ஏற்படும்.

காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் சோர்வு போன்றவை சிலருக்கு இருக்கலாம். சில நேரங்களில் அரிதாக கண்களின் உள்ளே கூட இந்த அக்கி வர வாய்ப்புண்டு. இம் மாதிரி ஏற்பட்டால், உடனே கண் மருத்துவரைச் சந்தித்து உடனடி சிகிச்சையைஆரம்பிக்க வேண்டும். இல்லையேல், கண் பார்வைக்குக் கூட பாதிப்பு ஏற்படலாம்.

காது கேட்பதில் கோளாறு, காதுக்குள் சரியான வலி, தலைச்சுற்றல், நாக்கில் சுவை இல்லாமை போன்ற சிலஅறிகுறிகளும் அக்கிநோய் வந்துபோனபிறகுஏற்படலாம். இதற்கும் உடனடி சிகிச்சையை ஆரம்பிக்கவேண்டும்.

வாய்க்குள்ளேயும் அக்கிக் கொப்புளங்கள் சிலசமயம் வர வாய்ப்புண்டு. கவனம் தேவை. நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த அக்கி நோய் அதிகமாக வரும் என்றும் பெரும்பாலும் வயதானவர்களுக்கு அதிகமாக வர வாய்ப்புண்டு என்றும் ஆய்வு கூறுகிறது.

அக்கியை உண்டாக்கும் வைரஸ் கிருமியைப் போல், கோடிக் கணக்கான வைரஸ் கிருமிகள் இந்த உலகத்தில் வாழ்கின்றன. ஒரு வைரஸ் கிருமி நமது உடலுக்குள் எப்படி வேலை பார்க்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், வைரஸ் கிருமியின் உருவம், அளவு இவற்றைப் பற்றியெல்லாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு வைரஸ் கிருமி இருப்பதையோ, நகருவதையோ, நாம் நமது கண்ணால் கண்டிப்பாகப் பார்க்க முடியாது.

சொல்லப் போனால், வைரஸ் கிருமி என்பது மிகச் சிறிய நம் கண்ணுக்குத் தெரியாத அளவில், இந்தக் கிரகத்தில் வாழும் ஒரு "நுண்ணுயிரி' ஆகும்.

கண்ணுக்குத் தெரியாத அளவில் இருந்தாலும் கூட, இந்த வைரஸ் கிருமி ஒருவரின் உடலுக்குள் நுழைந்தால், அவரை உடல் நலமில்லாமல் ஆக்கி, படுக்கவைத்து அப்புறம் ஆளையே கொன்றுவிடும்.

மனித உடல் இருக்கிறதே, அது நுண்ணியிரிகளுக்கு ஒரு மிகப் பெரிய, மிகச் செழிப்பான சூழலைக் கொண்ட சொர்க்கப் பூமி போன்றதாகும். இந்த உடலில் நுண்ணுயிரிகள், வாழ்வதற்குத் தேவையான புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து முதலியவை தாராளமாகக் கிடைக்கின்றது. உடலில் வாழும் பலகோடி பாக்டீரியா கிருமிகளைவிட, பத்து மடங்கு அதிகமாக வைரஸ் கிருமிகள் உடலில் வாழுகின்றன. சாதாரண காய்ச்சலை உண்டு பண்ணும் வைரஸ் கிருமிகளும் இருக்கின்றன.

எய்ட்ஸ், கரோனா போன்ற நோய்களை உருவாக்கும் மிகக் கொடிய வைரஸ் கிருமிகளும் இருக்கின்றன. பல வகை வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் எப்படியாவது நுழைந்துவிடும். ஆனால் உடலிலுள்ள எதிர்ப்புச் சக்தி இந்த வைரஸ் கிருமிகளோடு சண்டை போட்டு, வைரஸ் கிருமியை சக்தி இல்லாததாக ஆக்கிவிடுகிறது. அதனால், அந்த மனிதனுக்கு அந்த வைரஸ் கிருமியால் உடலில் எந்தவித நோயும் ஏற்படுவதில்லை.

எந்தச் சூழ்நிலையிலும் வாழக் கூடிய சக்தியும், தகுதியும் படைத்தது வைரஸ் கிருமிகள். பொதுவாக, வைரஸ் கிருமிகள் உடலுக்குள் வாய், கண், மூக்கு, பிறப்புறுப்பு, காயங்கள், கடிகள், தோல் கிழிந்த காயங்கள்.. இன்னும் பலவழிகளில் நமது உடலுக்குள் நுழைகின்றன. சிலசமயங்களில் நேரடியாக, நோய் உள்ள இன்னொருவரின் காயப் பகுதியையோ, ரணப் பகுதியையோ அல்லது அந்த நபரின் உடலிலிருந்து வடியும் சீழ், ரத்தம், நீர் முதலியவற்றின் மூலமாகவோ, உடலுக்குள்நுழைந்துவிடும்.

இன்னும் சில சமயங்களில் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தொட்டநாற்காலி, டேபிள், கதவு, கைப்பிடிபோன்றவற்றை நாம் தொடும்போது நமக்கு ஒட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. நோய்வாய்ப்பட்ட ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, உரக்கப் பேசினாலோ கூட வைரஸ் நோய்க் கிருமி பரவ வாய்ப்புண்டு.

சில சமயங்களில் வைரஸ் கிருமிகள் கலந்த சுத்தமற்ற உணவுகள், தண்ணீர், ரத்தம் முதலியவைகள் மூலமாகவும் பரவ வாய்ப்புண்டு. எலி, பாம்பு, கொசு முதலிய நோய்ப் பரப்பி உயிரினங்கள் மூலமாகவும் வைரஸ் கிருமிகள் மனிதனுக்குப் பரவ வாய்ப்புண்டு.

தோற்றத்தில் வைரஸ் கிருமிகள் நேரான இரும்புக் கம்பி மாதிரியோ, வளைந்த இரும்புக் கம்பி மாதிரியோ, உருளை வடிவிலோ, தட்டைவடிவிலோ, கூம்பு வடிவிலோ, செவ்வக வடிவிலோ, சதுர வடிவிலோ வாலுடன் காணப்படும். இதை சாதா மைக்ராஸ்கோப் மூலமாகப் பார்க்க முடியாது. ஸ்பெஷல் எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம்தான் இதனுடையஉருவத்தைப் பார்க்கமுடியும்.

உடலுக்குள் வைரஸ் கிருமிகள் மேலே சொன்ன ஏதோ ஒரு வழியில் நுழைந்து, முதலில் உடலிலுள்ள செல்களில் ஒட்டிக் கொள்கிறது. பின்னர், மெதுவாக செல்களுக்கு உள்ளேநுழைந்துவிடுகிறது.

"இருக்க இடம் கொடுத்தா, படுக்க பாய் கேட்கிறான்' என்பதைப் போல், முதலில் நல்ல ஆரோக்கியமான செல்களில் போய் ஒட்டிக்கொள்ளும் வைரஸ் கிருமி. பின்னர், அதே செல்களுக்குள் போய் நுழைந்துவிடுகிறது. பின்னர், பல பிரதிகளாக லட்சக்கணக்கில் உருவாகி, பெருகி, விருத்தியாகி, நன்றாக இருக்கும் செல்களின் உள்ளேநுழைந்து, அந்த இடத்தை நோய்வாய்ப்படவைத்து, செல்லை சாகடித்துவிடுகிறது.

ஒரு வைரஸ் கிருமி, ஒரு செல்லுக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பெருகி, முதலில் தொற்றை உண்டுபண்ணி, அதற்குப் பிறகுதான் இருக்கும் செல்லை பாதிப்படையச் செய்து, நோயை உண்டாக்கி, செல்களைக் கொன்றுவிடுகிறது.
வைரஸ் கிருமியானது உடலைதாக்கும் விதம் இப்படித்தான். இந்த மாதிரி நிறைய ùஸல்கள் பாதிக்கப்பட்டால், நோய் பெரிதாகிவிடும். பின்னர், அந்தக் குறிப்பிட்ட நோய்க்குண்டான அறிகுறிகளும் நோயும் உருவாக ஆரம்பித்துவிடும். உடலிலுள்ள எதிர்ப்புச் சக்தி, மிகப் பலமாகபோராடி இந்த வைரஸ் கிருமிகளை அழித்துவிட்டால், அந்த நபருக்கு நோய் ஏற்படாது.

எதிர்ப்புச் சக்தியால் இந்த வைரஸ் கிருமிகளைஅழிக்க முடியவில்லைஎன்றால், நோய்த் தொற்று ஒன்று ஒன்றாக ஆரம்பித்து வைரஸ் கிருமி எல்லாத் தடைகளையும் தாண்டி, உடலின் பல உறுப்புகளிலும் போய் உட்கார்ந்துகொண்டு நோயைத் தீவிரமாக்கிவிடும்.

சாதாரண ஜல தோஷம் என்று சொல்வோமே, அந்த நோயில் ஆரம்பித்து, எபோலா ரத்தக் கசிவு, காய்ச்சல், பிறப்புறுப்பில் வரும் மருக்கள், காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, அக்கிப் புடைப்பு, கழுத்தில் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி நோய், ரூபெல்லா அம்மை நோய், பெரியம்மை, ரேபிஸ், கல்லீரல் நோய் என கடைசியாக இன்றைய கரோனா நோய் வரை எல்லா நோய்களுமே வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதுதான்.

வைரஸ் கிருமிகள் ஏதோ ஒருவழியில் உடலுக்குள் நுழைந்து, ரத்தத்தில் கலந்து
ரத்த ஓட்டத்தோடு சேர்ந்துபயணம் செய்து, உடலின் முக்கிய உறுப்புகளில் போய் உட்கார்ந்துகொண்டு, நோயை உண்டாக்கி, பின்னர் அதே ரத்தம் மூலமாக நோயையும் பரப்பி, மனிதனைஉண்டு, இல்லை என்று ஆக்கிவிடுகிறது.

எனவே, வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் நுழையாமல் உடலை மிகச் சுத்தமாகவும், எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தியும் வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT