தினமணி கொண்டாட்டம்

அடுத்தது யார்?

26th Jun 2022 06:00 AM | தி. நந்தகுமார்

ADVERTISEMENT

 

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர் வெற்றி பெற்றால் , அந்தப் பதவிக்குத் தேர்வாகும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் நபர் என்பதோடு, 2-ஆவது பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-இல் நடைபெறவுள்ளது.

திரௌபதி முர்முவின் பெயர் 14-ஆவது குடியரசுத் தலைவர் தேர்வின்போதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பட்டியலில் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ராம்நாத் கோவிந்த் தேர்வானார். இந்த முறை முர்முவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, காங்கிரஸ் உள்பட 17 எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவர் களத்தில் உள்ளனர்.

திரௌபதி முர்மு: ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு 1958-ஆம் ஆண்டு ஜூன் 20-இல் பிறந்தார். குழந்தைப் பருவம், வறுமையுடன் வாழ்க்கையைக் கடந்தார். கல்வியால் முன்னேற்றம் அடைந்தார். புவனேசுவரத்தில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரௌபதியின் கணவர் பெயர் ஷ்யாம் சரண் முர்மு. இரு மகன்கள், ஒரு மகள். கணவரையும், இரு ஆண் குழந்தைகளையும் விபத்து, நோய் காரணமாக அடுத்தடுத்து இழந்தார். ஒற்றை மகளை வளர்க்கப் போராடினார். இதன்பிறகு, ஒடிசாவின் நீர்ப்பாசனத் துறையில் பணிபுரிந்திருக்கிறார் திரௌபதி.

1997-இல் உள்ளாட்சிப் பிரதிநிதியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த திரௌபதி, பாஜக சார்பில் இருமுறை எம்எல்ஏவாக இருந்தார். 2000-ஆம் ஆண்டு ஒடிஸாவில் பா.ஜ.க.- பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, அமைச்சராக இருந்தார். 2015-இல் ஆளுநராகப் பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு 2002-இல் அப்துல் கலாமை எதிர்த்து ஐ.என்.ஏ. படையைச் சேர்ந்த லட்சுமி சாகல் இடதுசாரிகள் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால், லட்சுமி சாகல் வெற்றி பெறவில்லை. 2007-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்றார். தற்போது குடியரசுத் தலைவர் பதவிக்கு களம் காணும் மூன்றாவது பெண் திரௌபதி முர்மு ஆவார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், திரௌபதி முர்மு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

""எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. இந்தக் கட்டத்தில், அதிகம் பேச விரும்பவில்லை. நன்றி உள்ளவராக இருக்க கடமைப்பட்டுள்ளேன். அரசியலமைப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன். தேர்தலில் வெற்றி பெற அனைத்துக் கட்சிகள், மாநிலங்கள் ஆதரவைக் கோருகிறேன். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நான் பெறுவேன்.'' என்றார்.

யஷ்வந்த் சின்ஹா: பீகார் மாநிலம் பாட்னாவில் 1937 -இல் நவ. 6-இல் பிறந்த யஷ்வந்த் சின்ஹா, 1958-இல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1960 வரை பாட்னா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியராக, 24 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 1984-ஆம் ஆண்டு தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஜனதா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

1988-இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-இல் ஜனதா தளம் உருவானபோது, பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 1990 முதல் 1991 வரை மத்திய நிதியமைச்சராக, சந்திரசேகர் அமைச்சரவையில் பணியாற்றினார். பின்னர், பாஜகவில் இணைந்தார்.

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில், நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். பாஜகவில் இருந்து விலகி 2021-ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராக இருந்துவந்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவரது சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

""குடியரசுத் தலைவர் தேர்தலில், அனைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என்றார்.

யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்படும் நிலையில், அவரின் மகனும், பாஜக எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா கூறியதாவது

""செய்தி கிடைத்தது. பலர் என்னை அழைத்தார்கள், ஊடகத்தினரும் என்னிடம் நிறைய கேள்விகளைக் கேட்கின்றனர். இதை ஒரு குடும்ப விஷயமாக ஆக்க வேண்டாம். பாஜகவின் தொண்டன். ஹசாரிபாக் எம்.பி. என்ற முறையில், எனது அரசியலமைப்பு கடமைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன், அவற்றை நிறைவேற்றுவேன். ஒரு மகனாகப் பார்க்க வேண்டாம். கட்சியின், நாடாளுமன்ற உறுப்பினராக எனது பொறுப்புகளை நிறைவேற்றுவேன்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT