தினமணி கொண்டாட்டம்

நெசவாளியாகத் தொடங்கி...

26th Jun 2022 06:00 AM | கே.நடராஜன்

ADVERTISEMENT

 

நெசவுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து உலகளாவிய சேவை அமைப்பான ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் என்ற பொறுப்பில் அமர்ந்துள்ளார் ஒரு சாமானியர்.

1905- ஆம் ஆண்டு பால் ஹாரிஸ் என்பவரால் தொடங்கப்பட்டு, 117 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது ரோட்டரி சங்கம். 545 ரோட்டரி மாவட்டங்கள், 37 ஆயிரம் சங்கங்கள், 12.10 லட்சம் உறுப்பினர்களுடன் பேரியக்கமாகத்திகழ்கிறது.

இந்தச் சங்கத்தில் ரோட்டரி ஆளுநர்கள் என்ற பதவி பெருமைக்குரியது. தொழிலதிபர்களாகவும், ஆங்கிலத்தில் பேசுபவராகவும், யாரும் எளிதில் அணுக முடியாத நபர்கள்தான் மாவட்ட ஆளுநர் என்ற பொறுப்பில் இருந்தனர். அந்தக் கணிப்பை புறநகர் ரோட்டரி சங்கங்களின் வளர்ச்சி இன்று புரட்டிப் போட்டுள்ளது.

ADVERTISEMENT

ரோட்டரி மாவட்டம் 3231- என்பது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது. 96 ரோட்டரி சங்கங்களின் வாக்குகளில் மாவட்ட ஆளுநராக வேலூர் மாவட்டம்- குடியாத்தம் நகரைச் சேர்ந்த ஜே.கே.என்.பழனி (53) என்பவர் தேர்வு பெற்றிருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையின் நெசவுத் தொழில் வருவாய் மூலம் மட்டுமே குடும்பம் நடந்த வந்த நிலையில் இவரது தந்தை ஜே.கே.நடேசன், தனது மகன் தன்னைப்போன்று நெசவாளியாக வந்து விடக்கூடாது என்று எண்ணி பள்ளிப் படிப்பு முடித்ததும், வேலூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் சேர்த்தார். பேருந்துக்குச் செலவு செய்ய முடியாததால், பழனி நாள்தோறும் சைக்கிளில் வேலூர் சென்று வந்தார். பின்னர் நூற்பாலையில் தொழில் பழகுநர் பணி செய்தார். விசைத்தறிக் கூடம் அமைத்து தொழில் செய்தார்.

1995- இல் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராக தொழில் புரியத் தொடங்கினார். படிப்படியாக வளர்ந்து உயர்ந்த நிலையான எம்.டி.ஆர்.டி. எனும் நிலையை 10 ஆண்டுகளாகத் தக்க வைத்துள்ளார்.

இவர் 2011- இல் ரோட்டரியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். குடியாத்தம் கம்பன் கழகத்தை நிறுவினார். ஆன்மிகப் பணியிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.

2015- இல் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவராக பதவியேற்ற இவர் ரூ.1 கோடி மதிப்பில் நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனையை, பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டினார். ரோட்டரியில் மாவட்ட செயலாளர், உதவி ஆளுநர், மாவட்ட மாநாட்டுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆளுநருக்கான தேர்தலில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜூலை 1 முதல் 2023- ஆம் ஆண்டு ஜூன் 30- ஆம் தேதி வரை ஓராண்டு காலம் இவர் இப்பதவியில் இருப்பார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT