தினமணி கொண்டாட்டம்

சத்யஜித்ரே நூற்றாண்டு

26th Jun 2022 06:00 AM | எஸ்.குரு

ADVERTISEMENT

 


சத்யஜித்ரே நூற்றாண்டு விழா சென்னையில் என்.எஃப்.டி. அரங்கில் மூன்று நாள்கள் நடைபெற்றன.

"ரே' படங்கள் திரையிடப்பட்டன. கதைப் படங்களும், செய்திப் படங்களுமாகப் பதினைந்து படங்கள் மூன்று நாள்களில் இலவசமாகத் திரையிட்டுக் காட்டப்பட்டன. 

""உள்புறக்கண்'' (இன்னர் ஐ) எனும் செய்திப் படம் ரேயின் சிறப்பான செய்திப் படம்.  பினோத் முகர்ஜி எனும் ஓவியரைப் பற்றிய திரை ஓவியம். கண் பார்வை இழந்த பின்னரும் இவர் படம் வரைவதை நிறுத்தவில்லை.  அந்தக் கோலத்துடன் பினோத் படம் வரையும் காட்சிகள் அற்புதமானவை.

ADVERTISEMENT

""தி மியூஸிக் ஆஃப் சத்யஜித் ரே'' என்ற படம் ரே ஓர் அஷ்டாவதானி என்பதை நிரூபிக்கும் செய்திப் படம். தன் படங்களுக்கு அவரே பாடல்களை எழுதி இசை அமைப்பதை இந்தப் படம் சொல்கிறது. ரேயின் முன்னோர் இசைவாணர்கள் என்பது கூடுதல் தகவல்.

""ஹிராக் ராஜா தேஷ்'' என்ற ரேயின் கதைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத படம். சிறுவர்களுக்கான தேவதைக் கதை போன்றது.

ஹிராக் ராஜா கொடுங்கோலன். மக்கள் தன்னை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாமல் இருக்க அவர்கள் அறிவுத் திறன் குறைந்தவர்களாக- மந்த புத்திக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  பள்ளிக் கூடத்தை மூடிவிடச் சொல்கிறார். பள்ளி ஆசிரியரைக் கைது செய்யச் சொல்கிறார். ஆசிரியர் தலைமறைவாகி விடுகிறார். மக்களை மூளைச் சலவை செய்வதற்காக அரண்மனையில் ஒரு விஞ்ஞானியை ஆதரித்து வருகிறார். 

கடைசியில் பள்ளி ஆசிரியர் புரட்சி செய்து, தன் மாணவர்கள் துணையுடனும், பக்கத்துத் தேச இளவரசர் துணையுடனும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுகிறார். 

மக்கள் நலனே பெரிது என்று பறைசாற்றும் "ஜன சத்ரு' என்ற படம் - ஹென்ரிக் இப்சனின் "எனிமி ஆஃப் தி பிபிள்' என்ற நாடகத்தின் உந்துதலால் படைக்கப்பட்ட ஓர் உன்னதப் படம். பொது ஜன நேசரான மருத்துவர் குப்தா- பழைமைவாதிகளால் எதிர்க்கப்படுகிறார். கடைசியில் ஓர் இளைஞர் நாடகக் குழு குப்தாவுக்குத் தோள் கொடுக்க வருகிறது. குப்தா எழுச்சி பெறுகிறார்.

இலவசமாகத் திரையிடப்படும் இதுபோன்ற திரைப்படங்கள் திரை ரசனையை வளர்க்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT