தினமணி கொண்டாட்டம்

குடியரசுத் தலைவர்கள் இதுவரை...

26th Jun 2022 06:00 AM | ராஜி ராதா

ADVERTISEMENT

 

இந்தியாவின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-இல் நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக அமர இருப்பவரை வருக.. வருக.. என்று மனமாற வரவேற்போம். அதே சமயம் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் குறித்த ருசிகரத் தகவல்களை அறிவோம்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

1950-இல் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றார். 1950-62-ஆம் வரை இருமுறை தொடர்ந்து பதவி வகித்தார். 1931-இல் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றபோது, அதில் பங்கேற்று சிறை சென்றவர். 1946-இல் இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, அதில் உணவு, வேளாண் துறை அமைச்சராகவும் இருந்தார். அரசியலமைப்பை உருவாக்கும் குழுவுக்கு தலைவராகவும் இருந்தார். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் பொதுவாழ்வில் இருந்து விலகினார். 1962-இல் ""பாரத ரத்னா'' பட்டம் பெற்றார்.

ADVERTISEMENT

டாக்டர் ராதாகிருஷ்ணன்

மிக ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பை உதவித் தொகையிலேயே முடித்தார். 1946-52-ஆம் ஆண்டுகளில் யுனெஸ்கோவுக்குஇந்தியா சார்ந்த உறுப்பினராகப் பங்காற்றியுள்ளார். 1949-52-ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் இந்தியத் தூதராக இருந்தார் .

1962-67-இல் குடியரசுத் தலைவராகவும் இருந்த இவர் தத்துவஞானி என புகழப்பட்டவர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். "பாரத ரத்னா' விருதை முதன்முதலில் வழங்கத் தீர்மானித்தபோது, 1954-இல் பெற்றவர் இவர்.

டாக்டர் ஜாகீர் உசேன்

மூன்றாவது குடியரசுத் தலைவர் (1967-69). கல்வியில் பல சீர்திருத்தங்களைச் செய்ய முயன்றார். பதவியில் இருக்கும்போதே இறந்துவிட்டார். 1963-இல் இவருக்கு ""பாரத ரத்னா'' விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் இஸ்லாமியர் இவர்.

வி.வி.கிரி

நான்காவது குடியரசுத் தலைவர் (1969-74). 1969-இல் தற்காலிகக் குடியரசுத் தலைவராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆளும் காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து, இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்ட கிரி வெற்றி பெற்றார். இவர் எழுதிய "மை லைப் அன்ட் டைம்ஸ்' என்ற நூல் மிகவும் பிரபலம்.

பக்ருதின் அலி அகமது

5-ஆவது குடியரசுத் தலைவரான இவர் (1974-77), அஸ்ஸாம் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். பின்னர் மாநில அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அரசில் உணவு, வேளாண்மை, தொழிலாளர் நலத் துறை, கல்வித் துறை, நிறுவனச் சட்டங்கள் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். கால்பந்து, மட்டைப் பந்து சார்ந்த நிர்வாகப் பணிகளில் பொறுப்பு வகித்தார். பதவியில் இருந்தபோதே காலமானார்.

நீலம் சஞ்சீவ ரெட்டி

6-ஆவது குடியரசுத் தலைவரான இவர் (1977-82), ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமானபோது முதல்வர் பொறுப்பேற்றார். கூட்டு சேரா இயக்கத்தின் செயலாளராக உலக அளவில் இருந்தவர். இவர் காலத்தில் மொரார்ஜி தேசாய், சரண் சிங், இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தனர்.

கியானி ஜெயில் சிங்

ஏழாவது குடியரசுத் தலைவராக இருந்த இவர் (1982-87), அந்தப் பதவியில் இருந்த முதல் சீக்கியர். "கியானி' என்றால் முழுவதும் கற்றவர் என்று பொருள். சீக்கிய மத நூல்களில் விற்பன்னர். பஞ்சாப் முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது. தில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை போன்றவை நிகழ்ந்தன. இதனால் இந்திரா காந்தியுடன் மன வேற்றுமை அடைந்தார்.

ஆர்.வெங்கட்ராமன்

எட்டாவது குடியரசுத் தலைவராக இருந்த இவர் (1987-92), ராஜீவ் காந்தி வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ் என நான்கு பிரதமர்களைக் கண்டவர். தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர்,குடியரசுத் துணைத் தலைவராகவும் இருந்தார்.

சங்கர் தயாள் சர்மா

நாட்டின் 9-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த இவர் (1992-97), குடியரசுத் துணைத் தலைவராகவும் இருந்தார். 1952-56-ஆம் ஆண்டுகளில் போபால் மாகாண முதல்வராக இருந்தார். ஓமன் நாட்டுக்கு இவர் சென்றபோது, அந்த நாட்டு மன்னர் விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து இவருக்கு கை கொடுத்து வரவேற்ற அதிசயம் நிகழ்ந்தது. மன்னர் கூறிய காரணம், ""சங்கர் தயாள் சர்மாவின் மாணவன் நான்!''

கே.ஆர்.நாராயணன்

பத்தாவது குடியரசுத் தலைவரான இவர் (1997-2002), அந்தப் பதவியை வகித்த ஒரே கேரள மாநிலத்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர். வெளியுறவுத் துறை அலுவலராக இருந்த இவர், ஜப்பான், பிரிட்டன், தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தார். முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் மிகச் சிறந்த தூதர் என பாராட்டு பெற்றவர். மூன்று முறை எம்.பி.யாக இருந்த இவர், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார்.

டாக்டர் ஏ.பி. ஜெ. அப்துல் கலாம்

11-ஆவது குடியரசுத் தலைவரான இவர் (2002-07), விண்வெளிப் பொறியாளர். 1997-இல் "பாரத ரத்னா' என்ற விருதைப் பெற்றார். ஏவுகணை, வாகனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபாடு காட்டியதால், ஏவுகணை நாயகன். எளிமையை விரும்பியதால் இவர், "மக்கள் குடியரசுத் தலைவர்' என்ற செல்லப் பெயரையும் பெற்றார்.

பிரதிபா பாட்டீல்

12-ஆவது குடியரசுத் தலைவரான இவர் (2007-12), அந்தப் பதவியை வகித்த முதல் பெண். ராஜஸ்தான் ஆளுநராகப் பதவி வகித்தார். 1991-96-ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினர். 252 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்பட்டது.

பிரணாப் முகர்ஜி

13-ஆவது குடியரசுத் தலைவரான இவர் (2012-17), இந்திரா காந்தி, மன்மோகன் சிங் அரசுகளில் நிதி, வெளிவிவகாரத் துறை, பாதுகாப்புத் துறை என பல முக்கியத் துறைகளில் அமைச்சராக இருந்தார். திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தார். 1986-89-இல் "ராஷ்டிரிய சமாஜவாதி காங்கிரஸ்' என்ற கட்சியைத் தொடங்கி, காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். 2019-ஆம் ஆண்டில் இவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

ராம்நாத் கோவிந்த்

14-ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்துவரும் இவர் (2017 முதல்..), அந்தப் பதவிக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்வான முதல் நபர். 2015-17-ஆம் ஆண்டுகளில் பிகாரில் ஆளுநராக இருந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன் தில்லியில் வழக்குரைஞராக இருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT