தினமணி கொண்டாட்டம்

வழக்கத்தைத் தாண்டிய சுவாரஸ்யம்!

26th Jun 2022 04:40 PM | ஜி.அசோக்

ADVERTISEMENT

 

""சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். வாழ்க்கையின் அனுமானம்தான் இந்தக் கதை. "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.''   கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த். சினிமாக்களைப் பார்த்து சினிமா இயக்க வந்திருக்கிறார். அருள்நிதியின் "தேஜாவு' படத்தின் இயக்குநர். 

இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...

அது இல்லாமல் எப்படி.... சமுதாயம் மாதிரி... அரசியல் மாதிரி... இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ, அப்படியே அரசனும் என்பார்கள்.  அது போல்தான் சினிமாவும். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சினிமாவில் லாஜிக் எதற்கு என்று தப்பிப்பவர்கள், தன்னை காப்பாற்றிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு கதையை அதன் எதார்த்த தன்மையோடு சொல்லுகிற இயல்பை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.  அப்படி ரசிக மனப்பான்மையில் இருந்து கதை சொல்ல வந்திருக்கிறேன்.  நல்ல படங்கள் இங்கே தோற்காது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அதை என் கதையும் செய்யும்.  நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்த கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், மிஸ்ட்ரி  த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம்.

ADVERTISEMENT

கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாம்... 

ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.  அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறிவிடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்தக் கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன்.  காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும்.  அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. அதே சமயம் சமூக அக்கறையும் கலந்திருக்கும்.

இன்னுமொரு போலீஸ் கதை.... என்ன சிறப்பு...

பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்து பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமா, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேத்த மாதிரி இயங்குவதே சிரமமானது. இது ஒரு சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு.  நிச்சயம் "சிங்கம்', "சாமி' படங்கள் மாதிரி கிடையாது. அந்த இடத்திற்கு வர அருள்நிதி சாருக்கு இன்னும் கொஞ்சம் டைம் பிடிக்கும். கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் ஆக்ஷன். 

 அருள்நிதி எப்போதும் கதைக்குள் இருக்கிற ஹீரோ....

இதுதான் அருள்நிதி என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக சினிமாவை அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. யாரும் அவரை எளிதில் அணுகி கதை சொல்லலாம். எந்த இடையூறும் இருக்காது. எதையும் முகத்துக்கு நேராக  பேசி விடுவார். மனசுக்குள் எதுவும் இருக்காது. அது இல்லாமல் திறமைசாலி. ஒரு நடிகராக இன்னும் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்கள் அவரிடம் நிறைய உண்டு.  எல்லா கதைகளும் செய்யக் கூடிய ஆற்றல் அவரிடம் உண்டு. இப்போது அதைத்தாண்டி வேறு ஒரு பரிமாணத்தை காட்ட வேண்டும் என்று ஓர் இயக்குநராக நினைத்தேன். அந்த இடத்துக்கு அருள்நிதியை கொண்டு வந்திருக்கிறேன். மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், "மைம்' கோபி இவர்கள் எல்லாம் இன்னும் எனக்கு துணை. ஜிப்ரான் இசை இன்னும் உற்சாகமாக வந்திருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT