தினமணி கொண்டாட்டம்

வரலாறு பேசும் கல் தொட்டிகள்

DIN


தண்ணீரை சேமிக்க இன்று பலவகையான தொட்டிகளைப் பயன்படுத்துகிறோம்! பண்டைய நாளில் எவ்வாறு, எதற்காக, எப்படி சேமித்தார்கள் என்பது அறிந்தால் வியப்பாக இருக்கிறது.

மனிதன் நாகரிகம் அடைவதற்கு முன்னர், மலைகளில் இயற்கையாய் அமைந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கும்.  அதற்கு சுனை என்று பெயர். இன்றும் பல ஊர்களில் சுனைநீர் இருக்கின்றன.

அம்மன் கோயில்பட்டி சுனை:

சேலம் மாவட்டம்- ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் அம்மன் கோயில்பட்டி. இங்கு பெருமாள் கோயில் பாறையில் அமைந்துள்ள சுனையின் அருகில் கல்வெட்டு காணப்படுகிறது. அதில், "பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் சோபன்கண தேவன் தொட்ட சுனை" என்ற கி.பி.  4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டையத் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் பரம்பன் கோகூரைச் சேர்ந்த ஊரின் கிழார் மகன் வியக்கன் கோவன் கண்ணதேவன் இச்சுனையை அமைத்தான் என அறிய முடிகிறது.

கோயில்கள் பல்லவ மன்னர்கள் காலம் தொடங்கி,  தொடர்ச்சியாக சோழர் - பாண்டியர் - விஜயநகர - நாயக்க மன்னர்கள் போன்றோர் தொடர்ச்சியாகக் கோயில்களை எடுப்பித்து வழிபாட்டுக்காகத் தானம் அளித்துள்ளனர்.

கோயில் வழிபாட்டில்..: கோயிலில் இறைவன் அபிஷேகம் போன்ற வழிபாட்டுக்காகத் தண்ணீர் அவசியம் தேவை. அதற்காகவே அவர்கள் கல்லாலான தொட்டிகளை அமைத்துள்ளதைக் காணலாம். பல்லவ மன்னர்களின் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மாமல்லபுரத்தில் ஒரே கல்லால் ஆன குடைந்து செய்யப்பட்ட தொட்டியையும்,  பாறையைச் செதுக்கி வட்டவடிவமாகச் செய்யப்பட்டுள்ள கல் தொட்டியையும் அமைத்திருப்பதைக் கண்டு வியக்கிறோம்.

ஒரே கல்லால் ஆன தொட்டிகளைத் தொடர்ந்து சோழ - பாண்டிய - விஜயநகர - நாயக்க மன்னர்கள் காலம்வரை காண முடிகிறது. 

திருமழபாடி கோயிலுக்கு வழிபட வருவோர் தங்கள் கால்களை சுத்தம் செய்து கொள்வதற்கு மூன்றாம் திருச்சுற்றில்  தெற்கு வாசல் அருகில் கிணறு ஒன்றினை அமைத்து,  தொட்டியும் அமைத்து,  நீரை இறைத்து அளிக்க ஒருவரையும் நியமித்து அதற்கு ஊதியமாக நிலமும், திருவுடையான் தேவன் அம்பலவனான மண்டல வணிகர் என்பவர் அளித்தார் என்பதை மூன்றாம் ராஜராஜசோழனது கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தண்ணீர் பந்தல்:

பண்டைய நாளில் பெருவழியில் செல்வோரின் தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் பந்தல் அமைப்பார்கள். இன்றும் கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கும் வழக்கத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.  தண்ணீர் பந்தலுக்கு நீர் கிடைக்க கிணறு,  தொட்டியும் அமைக்கப்பட்டதாக உத்திரமேரூர், உக்கல் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சை கோயில் கல்தொட்டிகள்:

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மூன்று கல்தொட்டிகள் காணப்படுகின்றன. சுப்பிரமணியர் சந்நிதி, அம்பாள் சந்நிதி,  திருச்சுற்று மண்டபத்தில் கோயில் காட்சியகத்தின் அருகே என்று மூன்று இடங்களில் உள்ளன. ஒரு கல்லைக் குடைந்து,  தலைப்பகுதியில் நீள் செவ்வக வடிவில் வாய்ப் பகுதி அமைந்துள்ளது.  13 கலம்,  1 பறை அளவு (முகத்தல் அளவை) பொறிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சேமித்து வைப்பதாக இருந்தால், இவ்வாறு குறியீடுகள் குறிப்பதற்கு வாய்ப்பு இல்லை. கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்கும் இறைவனின் அபிஷேகத்துக்கு வேண்டிய நெய் இதில் சேமித்து வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். 

தஞ்சாவூர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் கோயில் விளக்கு எரிப்பதற்கு பசுக்கள்,  ஆடுகள் போன்ற கால்நடைகள் வழங்கப்பட்டதை கல்வெட்டுகள் விரிவாகக் கூறுகின்றன. இதேபோன்று அம்மன் ஆலயத்திலும் உள்ள கல் தொட்டியில் 10 கலம் 12 மரக்கால் 7 நாழி அளவு நிரப்ப முடியும் என்பதை குறிக்கும் வகையில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது.

ஊட்டத்தூர் கல்தொட்டி:

பெரம்பலூர் அருகே உள்ள ஊட்டத்தூர் என்ற ஊரில் நலமளிப்பதும் வழிபாடு சிறப்புமிக்கதுமான தலம் உள்ளது. அங்குள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல் தொட்டி உள்ளது.  இந்தக் கல் தொட்டியின் பக்கவாட்டில் "ஸ்வஸ்திஸ்ரீ',  இந்தக் கிணறு மூன்று குறுணி" எனக் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு 13ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். இது எண்ணெய் அல்லது நெய் சேமித்து வைக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். குறுணி என்பது 1 மரக்கால் 8 படி அளவாகும். சேமித்து வைத்ததை எடுப்பதற்கும் ஏதுவாக பக்கவாட்டில் துளைகள் உள்ளது சிறப்பானது.

ஸ்ரீரங்கம் கோயிலில் மடைப்பள்ளி அருகில் நெய் கிணறு என்று அழைக்கப்படும் சுமார் 10 அடி ஆழம் உள்ள பெரிய தொட்டி ஒன்று உள்ளதை இன்றும் பார்க்கலாம். 

இவை போன்ற கல்தொட்டிகள் பல கோயில்களில் காணப்படுகின்றன. மேல்பாடி, வேலூர், லால்குடி, மாகரல், காஞ்சிபுரம்,  ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் கோயிலில் நந்தியின் அருகே காணப்படும் சதுர வடிவிலான கல்தொட்டியில் "ஸ்வஸ்திஸ்ரீ திருவெண்காட்டு நங்கை' எனக் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியினை திருவெண்காட்டு நங்கை என்ற பெண் செய்தளித்திருக்க வேண்டும்.

கரூர் மாவட்டம் சேடபட்டி என்ற கிராமத்தில் காணப்படும் கிணற்றருகே கல் தொட்டியில் 1541-ல் கால்நடைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக எறுட்ட ரெட்டியாரின் மனைவி இதனை செய்தளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. வேலூர் அருகே உள்ள திருவலம் கோயிலில் காணப்படும் கல் தொட்டியில் பெண்கள் கோலாட்டம் ஆடும் காட்சி அழகிய புடைப்புச் சிற்பமாக கலையழகு மிக்கதாக விளங்குகிறது.

அண்மைக்காலம் வரை கால்நடைகளும் வண்டி இழுக்கும் மாடுகளும் தாகம் தீர்த்துக் கொள்ள ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தொட்டி அமைத்திருந்தனர்.   இன்று லாரிகளும், சிறு வேன்களும் அதிகமாகிவிட்டதால் இத்தகைய கல்தொட்டிகளின் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது.

எனினும் கல்தொட்டிகள் கோயில்களின் வழிபாட்டிலும் சமுதாயத் தொண்டிலும் முக்கிய இடம் பெற்று விளங்கியதை வரலாற்றுச் சான்றுகளால் அறிய முடிகிறது.

-கி.ஸ்ரீதரன், தொல்லியத் துறை (ஓய்வு).

தகவல் உதவி-  கோ.முத்துசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT