தினமணி கொண்டாட்டம்

கடவுள் எழுதி வைத்திருக்கிறார்!

19th Jun 2022 05:10 PM | ஜி.அசோக்

ADVERTISEMENT

 

""சினிமா வேறு. உறவு முறை வேறு. நான் ஹரி மாமா என்றுதான் அழைப்பேன். அந்த உறவை பெரிதாக மதிக்கிறேன். என் வீட்டிலேயே ஓர் இயக்குநர் இருக்கிறார் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். அவர் தன்னை நிரூபித்துதான் வந்திருக்கிறார். நானும் ஒரு நாள் என்னை நிரூபிப்பேன். "அவங்க வீட்ல இருக்குற டைரக்டரே படம் பண்ணலை' என்று சொன்னது எனக்கு மைனஸ்தான். ஆனால், இப்போது நடந்து கை கூடியிருக்கிறது. இது வரைக்கும் நான் அவரிடம் கேட்டதில்லை.

இந்தக் கேரக்டரை அருண் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோணும் போது அவராக வருவார். காத்திருந்திருந்தேன். இந்த லாக்டவுன் நாள்களில்தான் ஒரு லைன் சொன்னார். ஒரு கை பார்த்து விடலாம் என இறங்கி வந்து விட்டேன்''. உற்சாகமாக பேசுகிறார் நடிகர் அருண் விஜய்.

இன்னும் நல்ல இடத்துக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது....

ADVERTISEMENT

எல்லோருமே அதற்காகத்தானே ஓடிக் கொண்டிருக்கிறோம். சினிமாவில் எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. எல்லாவற்றுக்கும் இங்கே போராட வேண்டும். காத்திருப்புதான் இங்கே முக்கியம். ஒரு சமயத்தில் யாருமே கண்டுக் கொள்ளவில்லையே என ஃபீல் செய்த போதுதான் நிறைய கற்றுக் கொண்டேன். அந்த விதத்தில் சினிமாவுக்கும், வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும், கொடுக்காதவர்களுக்கும் நிறையவே நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

சக்சஸ் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இப்படிதான் வர வேண்டும் என கடவுள் எழுதி வைத்திருக்கிறார். திடீரென்று சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் நமக்கென்று என்ன இருக்கிறதோ அது வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இப்போது எனக்கான சூழ்நிலைகள் சரியாக அமைந்திருக்கிறது. குடும்பத்தின் பலம், நண்பர்களின் உதவி எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்கிற வாய்ப்பை இந்த அனுபவங்கள் கொடுத்தது. எங்கே டிராவல் செய்துக் கொண்டிருக்கிறேன் என எனக்கு நன்றாகவே தெரிகிறது. அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டேன். இப்போது நான் உண்மையில் மகிழ்ச்சி.

எங்கே தவறு என தெரிகிறதா....

சினிமாவில் எல்லாமும் கூடி வர வேண்டும். தவறான படங்கள் செய்தால் மொத்த கேரியரும் பாதிக்கும். டி.வி.யில் கூட இங்கிலீஷ் சீரியல்கள் போடுகிறார்கள். சிபிஐ சீரிஸீல் மேக்கிங் அவ்வளவு அழகாக இருக்கிறது. அதை இப்போது அப்படியே தமிழில் டப் செய்கிறார்கள்.

டப்பிங் படத்தை விடுங்க. இப்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தை தமிழ் பேசி குக்கிராமத்தில் பார்க்கிறார்கள். ஜனங்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நல்ல கதையை புதிதாக புரிகிற மாதிரி சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஒவ்வொரு படம் செய்யும் போதும் பெஸ்ட் தர வேண்டும் என்றுதான் நடிக்கிறேன். நான் ப்ளஸ் டூ முடித்து, கல்லூரி போகும் போதே சினிமாவுக்கு வந்து விட்டேன். யாரும் அப்படி வந்தது இல்லை. சினிமாவுக்கு சீக்கிரம் வந்ததால் எனக்கு மெச்சூரிட்டி லெவல் இல்லை. அப்போதும் ஒரு படம் முடித்துதான் அடுத்த படம் செய்தேன். கொஞ்சம் இடைவெளி விட்டேன். அதை அனுபவமாதான் எடுத்துக் கொள்கிறேன். இப்போது பக்குவம் ஆகி விட்டேன். நான் நடித்ததில் நிறைய படங்கள், பேர் சொல்லக்கூடிய படங்களாக இருக்கிறது. நான் கமிட் ஆன படங்கள் எதுவும் பூஜை போட்டதோடு நிற்கவில்லை. பெட்டியில தூங்கவில்லை. எல்லாம் ரிலீஸ் ஆகி விட்டது. இனிமே எந்த தவறும் நடக்காது. இப்போது இந்த "யானை' படம் கூட எனக்கான ஸ்டார்ட் பட்டனாக இருக்கலாம். இனி என் உழைப்பும், படங்களும் பதில் சொல்லும். அங்கீகாரம் விரைவில் கிடைக்கும்.

உடற்பயிற்சி விஷயத்தில் இன்னும் தீவிரமாக இருக்கீங்க...

அதுதான் என் மூலதனம். நடிகனுக்கு உடம்புதான் முக்கியம். அதில் தீவிர கவனமாக இருப்பேன். உடல் கவனத்தால் சில விஷயங்களில் ஒதுங்கி நிற்பேன். ஒரே விஷயத்தை செய்துக் கொண்டே இருந்தால் போரா இருக்கும். அதனால் வெவ்வேறு முறைகளில் உடற்பயிற்சியை மாற்றி விட்டேன். டயட் , சார்ட் என்று தினமும் பல மணிநேரம் ஜிம்மில் இருக்கிறேன். எம்.ஜி.ஆர். சாரை சூப்பர் பிசிக் என்று சொல்வார்கள். என் அப்பா நல்ல பிசிக் வைத்து இருந்ததால் எனக்கு ஈர்ப்பு இருந்தது. இப்போது இருக்குற ஹீரோக்கள் எல்லாரும் பிசிக்கில் கவனம் செலுத்துவது சந்தோஷமாக இருக்கிறது. இண்டஸ்ட்ரியில முதல்ல சிக்ஸ்பேக் வைத்தது நான்தான். "ஜனனம்' படத்துல சிக்ஸ் பேக் வைத்தேன். "தடையறத் தாக்க' படத்துக்காக சிக்ஸ்பேக்கில் தயாரானேன். ஆனா தேவைப்படவில்லை. ஆனால் இவ்வளவு வொர்க் அவுட் செய்திருக்கிறேன். அதைக் காட்டியே ஆக வேண்டும் என்று கிளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கிழிச்சிருந்தால் பக்கா சினிமாத்தனமாக இருந்திருக்கும். சம்பந்தம் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன்.

மகனையும் சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கீங்க....

டாக்டர் பையன் டாக்டர் ஆகுற மாதிரி நடிகர் பையன் நடிகர் ஆகுறான். இதில் எந்தத் தவறும் இல்லை. ஆரோக்கியமான விஷயம்தான். இது ரத்தத்திலேயே இருக்கிற விஷயம். ஆனால் வந்துடுவோம்.... பார்த்துக் கொள்ளலாம் என சும்மா இருக்காமல், கனவு காணாமல் நிறைய உழைக்க வேண்டும். வாரிசு நடிகர்களுக்கு என்ட்ரி ஈஸியாக இருக்கலாம் .ஆனால், சக்சஸ் கஷ்டம். அதை என் மகன் புரிந்துக் கொண்டால் போதும். அவனுக்கு இன்னும் பயணங்கள் இருக்கிறது. அனுபவங்கள் கிடைக்க வேண்டும். பார்க்கலாம்.

அப்பா எப்படி இருக்கிறார்...

நன்றாகவே இருக்கிறார். ரொம்ப அன்பானவர். சின்ன வயதில் என் பிறந்தநாளுக்கு எல்லா சினிமா பிரபலங்களையும் அழைத்து கொண்டாடுவார். சின்ன வயதில் எனக்கு ஃபிளைட்னா ரொம்பப் பிடிக்கும். அதுக்காக, ஃபிளைட் வடிவத்துலேயே கேக் செய்து வெட்டுன நாளையெல்லாம் என்னால் மறக்கவே
முடியாது. ரொம்ப பிஸியா நடித்துக் கொண்டு இருந்த காலத்திலும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க மறக்கமாட்டார். இப்போது, என் பையனுக்கு நானும் அப்பா கடைபிடித்த வழியையே கடைப்பிடிக்கிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT