தினமணி கொண்டாட்டம்

குடுவையில் ஐஸ் க்ரீம்!

12th Jun 2022 06:00 AM | இரா. மகாதேவன்

ADVERTISEMENT

 

வணிகமயமாக மாறிவரும் உலகில் திறமையோடு போட்டியிட்டால் மட்டுமே வெற்றி காண முடியும். வழக்கமான வியாபாரத் தந்திரங்கள் நிகழ்காலத்தில் எடுபடுவதில்லை. தரமும், அதை முன்னிறுத்தும் புதிய உத்திகள் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும்.

அந்த வகையில், தில்லியைச் சேர்ந்த ஷில்பி பார்கவா - பவன் ஜம்பகி தம்பதியினர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்திய உணவு வகைகளை வழங்கும் கர்நாடக கஃபே என்ற விடுதியைத் தொடங்கினர். நாளடைவில் தில்லி-என்சிஆர் பகுதியில் மிகவும் விரும்பப்படும் தென்னிந்திய உணவகங்களில் ஒன்றாக மாறியது.

ஏதேனும் புதுமையாக செய்ய விரும்பிய இந்த தம்பதியினர், குளிர் இனிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். அதில், பழங்களைப் பயன்படுத்தி ஐஸ் க்ரீம் தயாரிக்கும் உத்தி தான் முன்னிலைபெற்றது.

ADVERTISEMENT

""இந்தியாவில் மாம்பழங்கள், ஷரீஃபாக்கள்,சிக்கோஸ், கொய்யா, ஜாமூன் போன்ற பல்வேறு வகையான பழங்கள் உள்ளன. அவை சுவையால் நாட்டில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பவையாகும். இந்தப் பழங்களைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான வழியில் தயாரிக்கப்படும் ஐஸ் க்ரீம்களின் சுவை குறித்து ஆராய நாங்கள் முடிவு செய்தோம்'' என்று ஷில்பி கூறுகிறார்.

2017-இல், இருவரும் 100 சதவீதம் இயற்கை, சைவ ஐஸ் க்ரீம்களை வழங்கத் தொடங்கினர். இதற்கு ஜாத்ரே என்ற வணிகப் பெயரையும் சூட்டினர். இந்த ஐஸ் க்ரீம்கள், அவற்றின் குறிப்பிட்ட பழச்சுவைமற்றும் மசாலா கலவைகளுக்கு மட்டுமல்லாமல், அவை பரிமாறப்படும் விதத்திலும் தனித்துவமாக விளங்கின.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மனதில் வைத்து, ஜாத்ரே ஐஸ் க்ரீம்கள் சுகாதாரமான தேங்காய் சிரட்டைகள் மற்றும் மண்கலன்களில் (சிறிய சுடுமண்ணாலான கப்) மட்டுமே வழங்கப்படுகின்றன.

இதனிடையே, தங்களுடைய பரபரப்பான வியாபார வேலைகளுக்கு இடையே உள்ளூர் வேளாண் பண்ணைகளுக்குச் செல்ல சிறிது நேரம் ஒதுக்குகிறார்கள் ஷில்பி - பவன். பயிர்கள், விவசாயம் மற்றும் இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள இந்தப் பயணங்கள் உதவியதாக கூறும் அவர்கள், இந்தியா முழுவதும் பயிரிடப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் குறித்து தாங்கள் நிறைய கற்றுக்கொண்டதாகக் கூறுகின்றனர்.

இதன்மூலம் கிடைத்த பட்டறிவு, ஐஸ் க்ரீமில் வெவ்வேறு சுவைகளை பரிசோதனை செய்து பார்க்க உதவியதாம். அவர்கள் முதலில் தங்கள் ஐஸ் க்ரீம்களை உணவகத்தில் பரிமாறத் தொடங்கியபோது, அவர்களிடம் சில சுவைகள், கலவைகள் மட்டுமே இருந்தன.

உணவக வணிகத்தில் நுழைவதற்கு முன்பு இனவியல், மானுடவியல் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ள பவன், உணவு உண்டபிறகு, குளிர்ந்த இனிப்புப் பொருளாக சாப்பிடுவதற்காக மட்டுமே ஐஸ் க்ரீம்கள் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், அதன் தரத்தை மேலும் உறுதிசெய்ய நாங்கள் விரும்பியதால், ஐஸ் க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். உண்மையான புது பழங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். எந்த சுவைகளையும், வண்ணங்களையும் சேர்ப்பதில்லை.

எங்கள் ஐஸ் க்ரீம்களில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவாக இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். இதனால், அந்த குறிப்பிட்ட பழம் அல்லது மூலப்பொருளின் உண்மையான சுவையை நாம் சுவைக்க முடியும். தொடக்கத்தில், கருப்பு மிளகு, ஏலக்காய் மற்றும் ரோஸ் ஸ்ட்ராபெரி ஆகிய 2 சுவைகள் மட்டுமே இருந்தன. அந்த நேரத்தில் நிறைய சுவைகளை கொண்டுவரும் திறன் எங்களிடம் இல்லை'' என்கின்றனர் அவர்கள்.

இதுகுறித்து பவன் மேலும் கூறியதாவது:

""ஜாத்ரே என்ற வணிகப் பெயரில், சிறுவயது ஏக்கம் கலந்திருக்கிறது. ஜாத்ரே என்றால் கன்னடம், மராத்தி, பெங்காலி, தமிழ் போன்ற பெரும்பாலான பிராந்திய மொழிகளில், சில சிறிய வேறுபாடுகளுடன் திருவிழா என்று பொருள். ஐஸ் போன்ற குளிர்ச்சியான எதுவும் எனக்கு கிராமத்து திருவிழாவை தான் நினைவுக்கு கொண்டுவரும்.

ஐஸ் கிரீம்கள் மீது வாடிக்கையாளர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற அன்பின் வெளிப்பாட்டிலிருந்து, அதை விரிவாக்கும் யோசனை வந்தது.

நாங்கள் முற்றிலும் புதிய சுவையைத் தேடுவதால், முந்திரி, பாதாம், பெர்ரி, சாக்லேட் போன்ற வழக்கமான சுவைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. இந்திய மற்றும் சர்வதேச சுவையின் கலவையாக கொண்டுவர முயற்சித்தோம்.

பனை வெல்லம், வறுத்த எள், கருப்பு மிளகு, ஏலக்காய், சாக்லேட் ஆரஞ்சு, வெண்ணிலா ப்ளூபெர்ரி, பச்சை தேங்காய் சர்க்கரை மற்றும் வறுத்த பாதாம், அத்தி மற்றும் பால்சாமிக் வினிகர், கோகம், சீரகம் சர்பெட், மஸ்கார்போன், கோகோ ஆகியவை ஜாத்ரே உணவகத்தில் வழங்கப்படும் சில தனித்துவமான சுவைகளில் அடங்கும்.

மேலும், வெண்ணிலா பாட், பிஸ்தா, ஹேசல்நட் மற்றும் டார்க் சாக்லேட் போன்ற பல கிளாசிக் வகைகளையும், ரத்னகிரி ஹாபஸ் மாம்பழம், ஜாமூன், பிங்க் கொய்யா, செர்ரி மற்றும் சிகூ போன்ற புதிய பழச் சுவைகளும் இங்கு கிடைக்கின்றன'' என்கிறார் பவன்.

""புதுமையான சுவைகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கொள்கலன்களில் ஐஸ் க்ரீம்களை வழங்குவதால், அதிலும் ஜாத்ரே தனித்து நிற்கிறது. எங்களுடையது ஒரு தென்னிந்திய உணவகம். நாங்கள் நிறைய தேங்காய்களைப் பயன்படுத்துகிறோம். எனவே, நாங்கள் எங்கள் உணவகங்களில் ஐஸ் க்ரீம்களை வழங்கத் தொடங்கியபோது, அந்த தேங்காய் சிரட்டைகளை பரிமாறும் கிண்ணங்களாகப் பயன்படுத்த முடிவுசெய்தோம்'' என்கிறார் ஷில்பி.

வணிகம் விரிவடைந்ததும், வீட்டு விநியோகத்திற்கான நிலையான பேக்கேஜிங்கையும் அவர்கள் கணக்கிட வேண்டியிருந்தது. மக்காத கழிவுகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. தொடக்கத்தில், காகிதத் தொட்டிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பிறகு மண் டப்பாக்களை பயன்படுத்தும் எண்ணம் வந்தது. ஒரு நாளைக்கு சுமார் 600 முதல் 700 ஸ்கூப் ஐஸ் க்ரீம்களை விற்கிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் வீடுகளில் இந்த மண் டப்பாக்களை பேனா ஸ்டாண்ட், டீ கப், மரக்கன்றுகள் நடுவது, தயிர் வைக்கும் பாத்திரம் என புதுமையான முறையில் பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று புன்னகைக்கிறார் ஷில்பி.

வணிகத்தில், தரத்தையும் புதிய உத்தியையும் பயன்படுத்தினால் வெற்றிபெற முடியும் என்பதற்கு உதாரணமாக நாங்கள் விளங்குகிறோம் என்கின்றனர் ஷில்பி பார்கவா, பவன் ஜம்பகி தம்பதியினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT