தினமணி கொண்டாட்டம்

பழைமைக்குத் திரும்புவோம்..!

17th Jul 2022 06:00 AM | கே.பி.அம்பிகாபதி

ADVERTISEMENT

 

வழக்கொழிந்து போகும் பாரம்பரியப் பயன்பாட்டுப் பொருள்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டுச் செல்லும் வகையில் காட்சிப்படுத்தி மீட்க உதவுவதோடு, தமிழின் ஆளுமை, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வில் முனைப்புக் காட்டி வருகின்றனர் ஒரு குடும்பத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சி, ராசன்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த  பக்கிரிசாமி,  ராசன்கட்டளை பகுதியில் தேநீர்க் கடையை நடத்தி வருகிறார்.  

ஐந்தாம் வகுப்பே படித்த பக்கிரிசாமி,  தமிழ் மீதும், பண்பாடு,கலாசாரத்தின் மீதும் கவனம் செலுத்தி பயணிக்கிறார்.  கவிதை எழுதும் பழக்கமுள்ள இவர், மாணவர்கள் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்கப் பயிற்சி அளித்து உதவுகிறார். 

ADVERTISEMENT

இவரின்  சேவைக்கு மனைவி மல்லிகாவும் உறுதுணையாக இருக்கிறார்.  மூத்த மகள் சௌமியா,  12 -ஆம் வகுப்பு வரையில்  அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர். சென்னையில் ஜெபிஆர் பொறியியல் கல்லூரியில் பி.டெக். ஐ.டி. படித்து வருகிறார்.  இளைய மகள் ஓவியா நாகை மீன்வளக் கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரத்திலும் உதவி புரிகின்றனர்.

புங்கை,  வேம்பு போன்ற மரங்கள், மூலிகைக் கொடிகளைக்கொண்டு பசுமைப் பந்தல் அமைத்து அதன் நிழலில் வளர்ந்துள்ள மூலிகைகளின் ஊடே இயற்கை முறையில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் பானையுடன்,குளிர்பானங்களையும் பக்கிரிசாமி விற்பனை செய்கிறார்.

இந்தக் கடையுடன் இணைந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வழக்கொழிந்து போகும் பாரம்பரியப் பொருகள்கள்தான் அந்த வழியே செல்வோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பனைப் பொருள்களில் தயாரிக்கப்பட்ட நெல் கொட்டான், பிட்டு செய்யும் கொட்டான், பனம்பாய், விசிறி, முறம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் லாபகமாக மீன் பிடிக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஊத்தா, அஞ்சறைப்பெட்டி,  தென்னை, பனை மரங்களில் முன்பு பதநீர் இறக்க பயன்படுத்தப்பட்ட மர இடிக்கி,சுரைக்காய் குடுவைகள் இப்படி வார்த்தைகளில் கூட வழக்கொழிந்து வரும் பாரம்பரிய பயன்பாட்டுப் பொருள்கள், பிரம்பு பொருள்கள் விழிப்புணர்வுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனால், பாரம்பரியமான வாழ்வியல் பயன்பாட்டுப் பொருள்கள், கைவினைப் பொருள்களைத் தயாரிக்கும் கிராமத்தினரின் வாழ்வாதாரம் நிலைக்கவும் உதவி வருவதுடன்,  தனது வயல்களில் இயற்கை முறையில் விளையும் நாட்டுக் காய்கறிகள், பழங்கள் உள்பட உள்ளூர் வாசிகள் விளைவிக்கும் பொருள்களையும் கடையில் வைத்து விற்பனை செய்ய உதவி வருகிறார்.

தனது வீட்டைச்சுற்றி அமைந்துள்ள வளாகத்தை பசுமை பூங்காபோல பராமரிக்கவும் முனைப்புக் காட்டி வருகிறார் பக்கிரிசாமி.  மா, பலா, வாழை, தென்னை, அன்னாசிப்பழம், வாட்டர் ஆப்பிள், சப்போட்டா என பல வகையான சாகுபடியையும் மேற்கொள்கிறார். இவற்றோடு வெள்ளாடு வளர்ப்பு, சிறிய அளவிலான குட்டையில் மீன் வளர்ப்பு என அனைத்தும் இயற்கை முறையில் பராமரிக்கப்படுகிறது.

இது குறித்து பக்கிரிசாமி கூறுகையில், ""எங்களின் குடும்பத் தொழில் மரம் ஏறுதல்,  கள் குறித்த புரிதல் எனக்கு உண்டு.  எந்தப் போதை பொருளையும் அருந்தும் பழக்கமில்லை. 

தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், சமூகத்தில் பழகும் முறைகளை பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.  அந்தப் பணியை என்னால் முடிந்தவரை செய்கிறேன்.

இலக்கிய நிகழ்ச்சிகள்,போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெறும் மகள்களும் இந்தப் பரிசுத் தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நடுகின்றனர்''  என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT