தினமணி கொண்டாட்டம்

துரியோதனன் வேடத்தில் ரஜினி!

டெல்டா அசோக்

எந்த இடத்திலாவது, நிகழ்ச்சியிலாவது திடீர் விசிட் அடிப்பது நடிகர் ரஜினியின் வழக்கம். அப்படித்தான் எம்.எஸ்.வி. மறைவுக்குப் பின்னர் அவரின் புகழைப் போற்றும் விதமாக  இளையராஜா நடத்திய "என்றென்றும் எம்.எஸ்.வி.' இசை நிகழ்ச்சியில்  பார்வையாளராக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரஜினி. 

இந்த முறை சென்றிருந்தது மேடை நாடகத்தைப் பார்க்க... ! பார்த்தும் இல்லாமல் அந்த நாடகக் குழுவை வீட்டுக்கு அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.   ஒய். ஜி. மகேந்திராவின் "சாருகேசி' நாடக குழுவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து, அவர்களை கௌரவம் செய்துள்ளார். 

இதுகுறித்து ஒய்.ஜி. மகேந்திரன் பேசும்போது:

""எங்களுடைய நாடகக் குழு பல வருடங்களாக இயங்கி வருகிறது.  என் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று என் தலைமுறையையும் தாண்டி நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இன்னும், எங்கள் நாடகங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில்  14 முறை நாடகம் நடத்தியிருக்கிறேன். லண்டனில் நான்கு முறை நாடகம் அரங்கேற்றியிருக்கிறோம். எல்லா கல்ஃப் நாடுகளுக்கும் சென்றிருக்கிறோம். அங்கே இருக்கும் தமிழர்கள், எங்கள் நாடகங்களுக்கு வரவேற்புக் கொடுத்து வருகின்றனர். குடும்பங்களாக வந்து ரசிக்கிறார்கள். அதேபோலத்தான் ரஜினி சாரும். அவர், கடந்த 10 வருடங்களாக என்னோட நாடகங்களை நேரில் வந்து ரசிப்பார். 

ரஜினி, இதுவரைக்கும் மேடை நாடகங்களில் நடித்தது இல்லை. அவருக்கு ஒரே ஒரு மேடை நாடகத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை நெடுங்காலமாகவே உள்ளது. ஆனால், அதற்கான நேரம்தான் இன்னும் அமையவில்லை. அதற்குக் காரணம், அவருடைய நேரமின்மைதான். ரொம்ப பிஸியாக அவர் இருக்கிறார். 

உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினி,  என்னோடு பழகி கொண்டு இருக்கிறார்.  சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கெனவே அவரிடம் கூறியுள்ளேன். அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நாரதகான சபாவில் நடைபெறும் சாருகேசி நாடகத்தில் ரஜினி பார்வையாளராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. சொன்னதைப் போலவே அவர், அவரது மனைவி, மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

என்னை கட்டிப்பிடித்த அவர், "இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களைதான் பார்த்தேன்...' என்று கூறியதைவிட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினி அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார்.

அன்று இரவு நாடகத்தின் கதாசிரியர் வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. சாருகேசி நாடக குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்கள். ஜூன் 26-இல் ஒட்டுமொத்தக் குழுவும் ரஜினியின்  இல்லத்துக்குச் சென்றோம். அப்பொழுது ஒவ்வொருவராக ரஜினி பாராட்டினார். மேலும் அவரது நாடக அனுபவங்களை பற்றி கூறினார். 

"ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ் பகதூர் அழைத்து சென்றிருந்தார். அன்று துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்தக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்' என்று ரஜினி தெரிவித்தார். 

ஒத்திகையில் அவரது நடிப்பைக் கண்டு வியந்த குழுவினர் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவரது நண்பரின் ஊக்கத்தில் அந்த நாடகத்தில் துரியோதனனாய் ரஜினி நடித்தார்.  அவரது நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.   பாராட்டு பெற்ற அந்த ஒரு தருணம் தான் எனது வாழ்க்கையை திசை திருப்பியது என்று அவர் கூறினார். அது தான் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ஆரம்பமாக இருந்தது என்றும் அவர் பெருமையாக கூறினார்.  ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக எங்களிடம் பழகியது எங்கள் வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்'' என நெகிழ்ந்து பேசினார்  ஒய். ஜி. மகேந்திரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT