தினமணி கொண்டாட்டம்

காதலை உணருங்கள் தோழர்களே...!

ஜி. அசோக்

""வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.... இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பெரு நகர வாழ்க்கை, தேடல்கள் ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி, கல்லூரி என காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.  வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி,  முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.'' உள் வாழ்க்கை உணர்ந்து பேசுகிறார் இயக்குநர் ஜானகிராமன். இயக்குநர் பாலாவின் சீடர். இப்போது "டைட்டானிக்' படத்தின் இயக்குநர்.

டைட்டானிக்... பரிச்சயமான தலைப்பு...

பல சம்பவங்கள் அடங்கிய ஒரு காதல் வாழ்க்கை தரிசனம் இது.  காதல் அதி முக்கியமானது.  கலையரசன் - ஆனந்தி, காளி வெங்கட் - மதுமிதா, ராகவ் விஜய் - ஆஷ்னா சவேரி.... என மூன்று காதல்.  சந்தர்ப்பமும் சூழலும் இவர்களை இடம் மாற்றி வைக்கிறது.  எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால், காதலில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான்.  இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை.  இதில் வருகிற மூன்று பேரும் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்துக் கொண்டே இருக்கிறது இருக்கிறது.  கொஞ்ச சதவீதம் கூடிக்  குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடலாம்.
கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான  முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சியும் இங்கே நடக்கிறது. அப்படிப்பட்டவனை ஒரு சூழல் தெளிவு நிலைக்கு கொண்டு வருகிறது. வாழ்வில் எல்லாமும் போன பின்பு, அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது. இன்னமும் இங்கே மென்மையும், பிற மனிதர் சார்ந்த  அக்கறையும் அருகிப் போய்விடவில்லை என்பதும் புரியும். சென்னையில்  ஆரம்பிக்கிற கதை  பெங்களூரு வரை போகிறது.

காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது....

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாக  இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமென்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது.   என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும்.  காதலின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே...

மூன்று காதல் ஜோடிகள்... தனித்தனி கலர் கொடுக்க வேண்டிருக்குமே....

இதுதான் கதை என்று முடிவான வேகத்தில் எல்லா நடிகர்களையும் முடிவு செய்து விட்டேன். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். அப்படி வந்தவர்தான் கலையரசன். ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய்ப் புகுந்து கொள்கிற ஆர்வம் காளி வெங்கட்டுக்கு இருக்கிறது.  இன்னொரு இடத்தில் புதுமுகம் ராகவ் விஜய்.  அவருக்கு கதையில் இன்னொரு இடம் உண்டு. முக்கியமாக ஆனந்தி. சினிமாவின் காதலி. தனித்து தெரிகிற கதையின் நாயகி.  இன்னும் அவ்வளவு விஷயங்கள் இதில் உண்டு. இப்போது இருக்கிற ரசிகர்கள் மிகவும் சினிமா தெரிந்தவர்கள். அவர்களை தியேட்டரில் உட்கார வைக்க நிறைய திறமை தேவைப்படுகிறது. அழகான கதை. சிரித்து பார்க்க கூடிய திரைக்கதை. அவ்வளவுதான்.

காதல் கதை என்றால் பாடல், இசைக்கு முக்கியமானதாக இருக்கும்...

நிவாஸ் பிரசன்னா மியூசிக். ஒரு நாளும் இவர் இசையை ரொம்ப லேசாக எடுத்துக் கொண்டது  கிடையாது. தன் இசை வழியாக தனித்துவம் காட்ட முற்படுகிறார்.  அவசரப்படாமல் கதை கேட்டுப் பார்த்து, அதில் இசைக்கு என்ன வழி உண்டு என பார்த்து விட்டு "சரி'ன்னு சொல்கிற ஆளு. இசைக்கு வலிமையான இடங்கள் இருப்பதை தெரிந்து கொண்டு, உடனே அவரது பெஸ்ட்டைக் கொடுத்து இருக்கிறார். ரசித்து கேட்கும் ட்யூன். பாடல்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கிறது.  தனித்துவத்தை நீங்களே உணர்கிற இடங்கள் வருவது  ஆச்சர்யம். நல்லிசையும், மெல்லிசையும் இணைகிற ஒரு இடத்தில் அவர் இனி இருப்பார்.  ஒளிப்பதிவுக்கு பள்ளு.  வைத்த்ல் முதல் ப்ரúமிலேயே, அவரின் லட்சியம் புரிந்தது.  கலகலன்னு ஷூட்டிங் முடித்து தந்தார்.  மதன் கார்க்கி, மோகன்ராஜா இருவரும் பாடல் வரிகள் தந்திருக்கிறார்கள்.

கரோனா கட்டத்துக்குப் பின் ரசிகர்களுக்கு எதார்த்த களம் தேவைப்படுகிறது. அதை  ஆரோக்கியமாக இந்தப் படம் தொடங்கி வைக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து இருக்கிறோம்.  ஒரு அழகான   நம்பிக்கை சித்திரம் இது.  இந்த உற்சாகம் தொடர வேண்டும்.  வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி.வி.குமார் சாருக்கு ஆயிரம் நன்றிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT