தினமணி கொண்டாட்டம்

சாதனை வெற்றிக்குப் பின்னால்...!

3rd Jul 2022 06:00 AM | சக்ரவர்த்தி

ADVERTISEMENT

 

உத்திரப் பிரதேசத்தைத் சேர்ந்த ஸூருதி சர்மா, தில்லியில் படித்து வளர்ந்தவர். 26 வயதான இவர், 2021-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.

பாராட்டுகள் குவிந்த நிலையில், அவரிடம் பேசினோம்: அவர் கூறியதாவது:

""தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் முதலாவது ரேங்கில் வெற்றி பெறுவேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதனால்தான் ரேங்க் பட்டியலை மூன்று முறை சரிபார்த்தேன்.

ADVERTISEMENT

இது எனது இரண்டாவது முயற்சி. சென்ற தேர்வில் நான் ஹிந்தியில் தேர்வை எழுதினேன். தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்து போனதால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இம்முறை ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதினேன். எழுத்துத் தேர்வில் ஆயிரத்துக்கு 932 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வில் ஆயிரத்துக்கு 173-ம் சேர்ந்து இரண்டாயிரத்துக்கு 1,105 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.

தில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் படித்தேன். சமூக இயலில் முதுநிலைப் பட்டம் எனது கல்வித் தகுதி. ஐஏஎஸ் தேர்வுக்காக "ஜாமியா மிலியா ஐஏஎஸ் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படித்தேன். அங்கு கிடைத்தப் பயிற்சியால் என்னால் முதலாவதாக வர முடிந்தது.

கடினமான உழைப்புதான். எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. ஒரு மணி நேரம் படித்தாலும் ஒழுங்காகப் படிக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசித்து உலக, இந்திய நிலவரங்களை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். தரப்படும் பயிற்சியில் கவனமாக இருக்க வேண்டும்.

மகள்களைப் படிக்க வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் என்னவோ இந்த முறை ஐஏஎஸ் தேர்வானவர்களின் பட்டியலில் முதல் மூன்று ரேங்குகளை பெண்கள் பிடித்திருக்கிறார்கள். இது ஒரு சாதனைதான்!

ஜாமியா மிலியா பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்கள் சாதாரண குடும்பத்திலிருந்தே வந்தவர்கள். இந்த மையத்தில் இந்த தேர்வில் மட்டும் 23 பேர்கள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய நுழைவு தேர்வின் அடிப்படையில் 200 மாணவர்களை பயிற்சி வகுப்பிற்கு சேர்த்துக் கொள்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டால் பயிற்சி கட்டணம் ரூ. 2,500. இத்தனை குறைவான கட்டணத்தில் எந்த வகுப்புக்கும், எந்த போட்டித் தேர்வுக்கும் பயிற்சி கிடைக்காது. சலிப்பில்லாமல் திரும்பத் திரும்பச் சொல்லித் தருகிறார்கள். முழு ஈடுபாட்டுடன் நம்மைத் தயார் செய்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

இவரின் வெற்றி குறித்து தாயும் முதுகலைப் பட்டதாரியுமான ரசனா சர்மா கூறுகையில், ""முதலில் இப்படி ஒரு சாதனை நிகழ்த்த ஸூருதிக்கு திறமையையும், அறிவினையும் தந்த கடவுளுக்கு நன்றி. ஸூருதி கஷ்டப்பட்டு இரவு பகலாக தன்னைத் தயார் செய்து கொண்டது வீணாகவில்லை. நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு கண்டேன். ஆனா அது நனவாகவில்லை. ஒரு கல்லில் இரண்டு மாங்கா மாதிரி எனது கனவையும், தன் கனவையும் நனவாக்கி கொண்டிருக்கிறாள். நானும் ஐஏஎஸ் அதிகாரியாகி இருப்பதாக உணர்கிறேன்'' என்றார்.

ஸூருதியின் தந்தையும், கட்டடக் கலைப் பொறியாளருமான சுனில் தத் சர்மாவும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT