தினமணி கொண்டாட்டம்

கலையழகு மிக்க திருக்கோயில் படிகள்

3rd Jul 2022 06:00 AM | கி. ஸ்ரீதரன்,  (தொல்லியல் துறை - பணி நிறைவு.

ADVERTISEMENT

 

வாழ்க்கையில் படிகள் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.  இல்லம் என்றாலும்,  கோயில் என்றாலும் படிப்படியாக முன்னேறி செல்வதற்கு படிகள் அவசியமாகின்றன.

சந்திர சிலா

கோயில் கலை வரலாற்றில் பல்லவர் மன்னர்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர். பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து குடைவரைக் கோயில்களைப் அமைத்தார்கள். அக்கோயிலுக்கு செல்வதற்கு கல்லிலேயே படிகள் செதுக்கியுள்ளனர். துவக்கத்தில் உள்ளபடி அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும். இதனை "சந்திர சிலா" என சிற்பக் கலைஞர்கள் அழைக்கின்றனர்.

ADVERTISEMENT

பக்ஷ சிலா

பின்னர் பாண்டியர், பல்லவர் காலத்திலும் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்,  மற்ற கோயில்களிலும் இறைவனை வழிபட செல்ல இரு வழி படிகள் அமைக்கப்பட்டன. இவ்வகையான படிகளின் பக்கச் சுவர் "பக்ஷ சிலா" எனக் குறிப்பிடப்படுகிறது.  பக்கச் சுவரின் விளிம்பில் மகரம்,  யாளி போன்ற உருவங்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். மதுரை ஆனைமலை, லாடன் கோயில்,  மாமல்லை தர்மராஜரதம்,  உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் இரு வழிப்படிகள் அமைந்திருப்பதைக் காணலாம். உத்திரமேரூர் கோயிலில் இந்தப் படிகளின் பக்கச் சுவரில் மன்மதன் - ரதி மற்றும் கலைமகளின் அழகிய சிற்ப வடிவங்களை அமைத்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

சோழர் காலம் முதல்..:  பல்லவர் காலத்தைத் தொடர்ந்து கோயில்கள், மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை,  கல்யாண மண்டபம் என பரப்பளவில் விரிவடைந்தது. இக்காலத்தில் பணிகள் கலையழகு மிக்கதாய் விளங்குகின்றன.  படிகளின் இரு பக்கங்களிலும் யாளி - யானை போன்ற உருவங்களை அழகுக்காக அமைத்தனர். இதனை யாளிப்படி, கஜபடி எனக் குறிப்பிடுவர்.  தாராசுரம் கோயிலில் படிகளில் ஆடல் மகளிர் நடனமாடும் கோலத்தில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மகிழலாம். இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திரிபுவனி பெருமாள் கோயிலில் படிகளில் அழகிய சிற்பங்கள் கலை அழகுடன் காட்சித் தருகின்றன. தாராசுரம் கோயிலில் பலிபீட படிகளில் பல்வேறு ஒலிகள் கேட்பதால் இதனை இசைப் படிகள் என அழைக்கின்றனர். அதனை கல்லால் தட்டி பார்ப்பது தவறு. செல்வோர் அனைவரும் தட்டினால் அது சிதைந்து விடும்.

தஞ்சை பெரிய கோயிலில் படிகள் மற்றும் திருச்சுவரில் அமைந்திருக்கும் சுப்பிரமணியர் கோயில்,  தாராசுரம் அம்மன் கோயில்,  திருவரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தின் படிகள் போன்றவை சிற்ப வேலைப்பாடு மிக்க விளங்குகின்றன. விழுப்புரம் அருகே உள்ள திருநாவலூர் கோயில் கோபுர வாயிலில் காணப்படும் படிகளில் இருந்த யாளி சிற்பங்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

சோபானம்

இக்கோயில் படிகளை "சோபானம்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுக்கின்றன. செய்யாறு அருகில் உள்ள பிரம்மதேசம் கோயிலில் பராந்தகச் சோழன் காலத்தில் சோபானம் அமைக்கப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதேபோன்று மாகறல் பெருமாள் கோயில், கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயில், பெரம்பலூர் மாவட்டம் சித்தளி வீரட்டேசுவரர் கோயில், கோவை மாவட்டம் அவிநாசி கோயில் போன்ற கோயில்களில் மண்டபத்திற்கு சோபானம் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் குறிக்கின்றன.

சோபானத்தில் அமர்ந்து மன்னர்கள் தானம்பண்டைய நாளில் மன்னர்கள் அரண்மனையில்,  மண்டபங்கள் போன்றவற்றில் அமர்ந்திருந்த பொழுது கோயில்களுக்கு வழிபாட்டுக்கு வேண்டிய தானங்களை அளித்தனர் என செப்பேடுகள் கூறுகின்றன. விக்கிரமச் சோழன் தனது தேவி அவனிமுழுதுடையாளுடன் சோழர் தலைநகராக விளங்கிய பழையாறையில் இருந்த "கங்கைகொண்டான்" என அழைக்கப்பட்ட மண்டபத்தில் சோபானத்தில் (படிக்கட்டில்) அமர்ந்திருந்தபோது நன்னிலம் அருகில் உள்ள ஆதிபுரீசுவரர் கோயிலுக்கு தானமளித்ததை அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த அரண்மனை "சோழ கேரளன் திருமாளிகை', "கங்கை கொண்ட சோழன் மாளிகை" என பெயர் பெற்றிருந்தது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. "ஆதிபூமி", "கீழை சோபானம்' என்ற பகுதிகள் குறிப்பிடப்படுவது சிறப்பானது.

ஆன்மிகத்தில்..

ஆன்மிக வரலாற்றிலும் படிகள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. திருவரங்கம் கோயிலில் கருவறையில் இருக்கும் படிக்கு "குலசேகரன் படி' எனச் சிறப்புடன் கூறுவார்கள். குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் ""படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'' எனத் திருமாலைச் சிறப்பித்துப் போற்றுவதைக் காணலாம். 

திருவரங்கம் போன்ற பல வைணவ கோயில்களில் பெருமாள் படியேற்றம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருவெள்ளறை கோயில் கோபுரவாயிலில் தேர்ச் சக்கரங்களுடன் யானை இழுத்துச் செல்வது போன்ற சிற்ப அமைப்பு காணப்படுகின்றது. இங்குள்ள 18 படிகள் கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கிறது என்பர். திருத்தணி திருக்கோயிலில் படித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக மக்களால் போற்றி வழிபடப் பெறுவதைக் காண்கிறோம். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகளுக்கும் வழிபாடு சிறப்புடன் நடைபெற்று வருவதையும் நாம் அறிவோம். திருக்கோயில் திருக்குளங்களுக்கும் படிகள் அமைத்துக் கொடுத்தனர் என பல சான்றுகளால் அறிய முடிகிறது.

திருக்கோயில் வரலாற்றில் சோபானம் என்ற திருப்படிகள் சிறப்பிடம் பெற்று விளங்குவதை நம்மால் அறிய முடிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT