தினமணி கொண்டாட்டம்

சாகசக்  காதல்!

பிஸ்மி பரிணாமன்

காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள். காதலனைக் கரம்பிடிக்க வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் முறைகேடாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவும் புலிகள் நிறைந்த சதுப்புக் காடு, முதலைகள் நிறைந்த ஆறு.. என்று தனது உயிரையே பணயம் வைத்து, கரம்பிடித்தாள். ஆனால், சில நாள்களிலேயே பிரிந்தனர்.

கொல்கத்தா நகரின் புறநகர் பகுதியில் அண்மையில் திருமணமான ஜோடியைத் தேடி போலீஸார் வீட்டுக்குச் சென்றனர். விவரம் கேட்டவர்களுக்கு அங்கு வசித்தவர்களுக்கே அதிர்ச்சி. போலீஸாரிடம் திருமணமான அந்த இளம்பெண் கிருஷ்ணா மண்டல் சொன்னார்:

""எனக்கு வயது 22. கொல்கத்தாவில் வசிக்கும் அபிக் மண்டல் முகநூல் மூலமா அறிமுகம் ஆனார். வாட்ஸ் ஆப் மூலம் பேசினோம். ஒரே கோத்திரம் என்பதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். திருமணம் நடக்க நான் கொல்கத்தா வரணும். இல்லைன்னா அபிக் வங்கதேசத்தில் இருந்த எங்கள் கிராமத்துக்கு வரணும். அப்படி வரணும்னா பாஸ்போர்ட் வேண்டும். எங்க ரெண்டு பேரிடத்திலும் பாஸ்போர்ட் இல்லை. அபிக் இங்கு திருட்டுத்தனமாக வருவதற்கு தயங்கினார்.

நானே கிளம்பி வர்றேன்னு, போன வாரம் வீட்டை விட்டுக் கிளம்பினேன். யார் கண்ணிலும் படாமல் இருக்க, என் ஊருக்கு அப்பால் உள்ள சுந்தர்பன் சதுப்பு நிலக் காடுகள் வழியாக பயணத்தைக் தொடங்கினேன். புலிகள் நடமாட்டமுள்ள சுந்தர் வனக் காடுகளில் சதுப்பு நிலத்தில் நடந்து சுமார் 150 கி. மீ. தூரத்தில் உள்ள கொல்கத்தா நோக்கிக் கிளம்பினேன். எனது அதிர்ஷ்டம் புலிகளின் நடமாட்டம் இல்லை.

நான் புறப்படும் முன் அபிக்கிடம் தெரிவித்தேன். வங்கத்தேச எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்ததும் "மட்லா' ஆறு குறுக்கிட்டது. சுமார் 1,200 அடி அகலமுள்ள ஆறு. படகு போக்குவரத்து இல்லை. ஆற்றில் முதலைகள் உண்டு. என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நிலைமை. தைரியமாக ஆற்றில் குதித்து நீந்தினேன்.

ஆற்றின் அக்கரையில் இருக்கும் "கைகாளி' கிராமத்தை அடைந்தேன். கொஞ்ச நேரம் ஓய்வு. மக்களிடம் கேட்டுக் கேட்டு அபிக் சொல்லியிருந்த இடத்தை அடைந்தேன். அங்கே எனக்காக அபிக் டாக்ஸியுடன் காத்திருந்தார். இரண்டு மணி நேரத்தில் கொல்கத்தா அடைந்தோம். அபிக் கொண்டுவந்திருந்த உடைகளை மாற்றிக் கொண்டு பிரசித்தி பெற்ற கொல்கத்தா காளி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அபிக் வீட்டில் வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தேன். இரண்டு நாள்களை அங்கேயே கழித்தேன். இங்கே வாழலாம் என்று தீர்மானித்தேன். அதற்குள் நீங்க வந்துட்டீங்க!'' என்றார்.

போலீஸார் கிருஷ்ணாவை, சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்ப மேற்கு வங்கத்தில் இருக்கும் வங்கத் தேசத் துணைத் தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணா பாஸ்போர்ட் எடுத்தாலும், இரண்டு நாடுகளும் மன்னித்தால் காதலர்கள் ஒன்று சேரலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT