தினமணி கொண்டாட்டம்

உலக  சாதனை...!

16th Jan 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கணினி மொழியில் வேர்ட் ஃபைல், பிடிஎஃப் ஃபைல் என்று சொற்களால் கோர்க்கப்பட்ட கோப்புகள் உண்டு. வேர்ட் ஃபைலை பிடிஎஃப் ஃபைலாக மாற்றலாம். அதுபோல பிடிஎஃப் ஃபைலை வேர்ட் ஃபைலாக மாற்றலாம். அதற்கான செயலிகள் உள்ளன. நூல்கள், நாளிதழின் பதிப்புகள் பிடிஎஃப் ஃபைலாக சுற்றுக்கு விடப்படுகின்றன. இந்த கோப்புகளை கணினி மூலம் வாசிக்கலாம். இந்த கோப்புகள் எந்த மொழியில் உள்ளதோ அந்த மொழியில் மட்டுமே வாசிக்க முடியும். அல்லது மாற்ற முடியும்.

பிடிஎஃப் ஃபைலை ஆடியோ அல்லது குரல் மொழியாக மாற்ற செயலி எதுவும் இல்லை. இந்த வசதியிருந்தால் பிடிஎஃப் ஃபைலை வாசிப்பதற்குப் பதிலாக, குரல் மொழியாக மாற்றி கணினியில் அல்லது மொபைலில் ஒலிக்கச் செய்து கேட்கலாம். பிடிஎஃப் ஃபைலில் உள்ளதை செயலி மூலம் இதுவரை வேறு மொழிக்கு மொழிமாற்றம் அல்லது மொழிபெயர்ப்பு செய்ய முடியாது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதை போல ஒரு செயலி கொண்டு பிடிஎஃப் ஃபைலில் உள்ளதை குரல் மொழியாகவும் அல்லது விரும்பும் மொழியில் குரல் மொழியாகவும் மாற்றிக் கொள்ளலாம் என்று 20 வயதான மாணவர் தெவாங் பரத்வாஜ் கண்டுபிடித்துள்ளார்.

ADVERTISEMENT

"டாக் டியூன்ஸ்' என்ற பெயர் கொண்ட செயலியை அலைபேசியில் பதிவு இறக்கம் செய்தால் பிடிஎஃப் ஃபைல் அது எந்த மொழியில் இருந்தாலும் சரி... நமக்கு விருப்பமான மொழியில் குரல் மொழியாக மாற்றிக் கொள்ளலாம். பல மணி நேரம் செலவு செய்து மொழிபெயர்க்க வேண்டாம். "டாக் டியூன்ஸ்' மூலம் சுமார் 32 மொழிகளில் குரல் மொழியாக உடன் மாற்றிக் கொள்ளலாம்.

கையெழுத்தில் உள்ள கடிதம், கவிதை, சிறுகதையைக் கூட "டாக் டியூன்ஸ்' செயலியைக் கொண்டு குரல் மொழியாக மாற்றிக் கேட்கலாம். அதுவும் விருப்பப்படும் 6 மொழிகளில் கேட்கலாம். "டாக் டியூன்ஸ்' செயலியை உருவாக்கிய தெவாங் பரத்வாஜ் ஜெய்ப்பூர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்.

""சென்ற கரோனா பாதிப்பினால் கல்வி போதனை ஆன்லைன் வழி சொல்லிக்கொடுக்கப்பட்டது. நோட்ஸ் மாணவர்களுக்கு பிடிஎஃப் ஃபைலாக அனுப்பப்படும். அல்லது ஆசிரியர் கையால் எழுதியதை பிடிஎஃப் ஃபைலாக மாற்றி அனுப்புவார். அதை வாசிப்பது மாணவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கும். அதனால் இந்த ஆங்கில பிடிஎஃப் ஃபைல்களை எனக்குத் தெரிந்த ஹிந்தி மொழியில் ஆடியோ ஃபைலாக மாற்ற செயலி ஏதும் உள்ளதா என்று இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. இந்தக் குறையை உடன் படிக்கும் நண்பனான குணால் சிங் ஷெகாவத்திடம் விவாதித்தேன். நாங்கள் இருவரும் இணைந்து "டாக் டியூன்ஸ்' செயலியை உருவாக்கினோம்.

இந்த செயலியின் மொழிபெயர்ப்பு நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. கையெழுத்து படிவங்களை மொழி பெயர்க்கும் போது 88 முதல் 92 சதவீதம் சரியாகவும், அச்சு எழுத்தில் அச்சிடப்பட்டவைகளை மொழிபெயர்ப்பது 99 சதம் வரை சரியாக அமைந்துள்ளது. குரல் வழி மொழிபெயர்ப்பை மேம்படுத்துவதற்காக முயன்று வருகிறோம்.

தற்சமயம் ஆங்கில பிடிஎஃப் ஃபைல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், குஜராத்தி, ஹிந்தி மொழிகளில் குரல் மொழியில் மொழி பெயர்க்க முடியும்.

எங்களது முயற்சியில் எங்கள் கல்லூரி ஆசிரியர்களும் உதவினார்கள். வழி காட்டினார்கள்.

இந்தச் செயலி இப்போதைக்கு ஆண்டிராய்ட் தளத்தில் கிடைக்கும் விரைவில் ஐ. ஓ. எஸ் தளத்திலும் கிடைக்கும்'' என்கிறார் தெவாங் பரத்வாஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT