தினமணி கொண்டாட்டம்

பாதுகாக்கப்பட வேண்டிய  கோட்டைகள்

ஜி.ஆர். ஆனந்த்


16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்களது தொழிற்சாலைகளை பாதுகாத்துக் கொள்ள பல கோட்டைகளைக் கட்டினார்கள். தமிழ்நாட்டில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் பல கோட்டைகளை கட்டியுள்ளனர். இந்தியாவின் 1450 கோட்டைகள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் 336 கோட்டைகளும் மகாராஷ்டிராவில் 256 கோட்டைகளும் ராஜஸ்தானில் 250 கோட்டைகளும் இருக்கின்றன.

தமிழ் நாட்டில் ஆங்காங்கே பல கோட்டைகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை, திருச்சி மலைக் கோட்டை, திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை, செஞ்சி கோட்டை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, வேலூர் கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை முக்கியமான கோட்டைகள் ஆகும். இக்கோட்டைகளின் சிறப்பான வரலாற்றினை காண்போம்:

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இக்கோட்டை 1640ஆம் ஆண்டிலிருந்து 1657-ஆம் ஆண்டு முடிய கட்டப்பட்டது ஆகும். புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் இக்கோட்டை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் கட்டப்பட்டது. இக்கோட்டையிலுள்ள செயின்ட் மேரிஸ் சர்ச் தான் நம் நாட்டில் கட்டப்பட்ட முதலாவது சர்ச் ஆகும். தற்போது இக்கோட்டையில் அரசின் தலைமைச் செயலகமும், அதன் அலுவலகங்களும் இருக்கின்றன.

திருச்சி மலைக்கோட்டை கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது.  வளைந்து வளைந்து மேலே நூற்றுக்கணக்கான படிகளை கடந்து மலைக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். இங்கு உயரமான குன்றின் மீது தாயுமானவர் கோயில் குடைந்து உருவாக்கியுள்ளனர்.  குன்றின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் இருக்கின்றது.  சோழர்களின் சிறப்பினை மலைக்கோட்டை மூலம் காணலாம்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

கயத்தாறு அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டையை ஆங்கிலேயர்கள் தகர்த்து தரைமட்டமாக்கினார்கள். மண்மேடிட்டு சிதிலமடைந்து கிடந்த அப்பகுதியில் சென்ற நூற்றாண்டில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை போலவே ஒரு மாதிரிக் கோட்டையைக் கட்டினார். விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயரால் பல தோரண வாயில்களையும் கட்டினார். நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வோர் இக்கோட்டையை காணத் தவறுவதில்லை.

நாமக்கல் கோட்டை

நாமக்கல் நகரை அடையாளம் காட்டும் அளவில் கம்பீரமாக காட்சி தருவது இங்குள்ள மலைக்கோட்டை. இந்த மலையின் கிழக்குபுறம் அரங்கநாதர் கோயிலும், மேற்குபுறம் நரசிம்மர் கோயிலும் உள்ளன. இவை மலையை குடைந்து கட்டப்பட்ட குடவறை கோயில்கள் ஆகும். இவை கி.பி. 784-ஆம் ஆண்டு குணசீலன் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது. இதேபோல் மலையின் உச்சியில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்றும், தர்கா ஒன்றும் உள்ளது. இதேபோல் கல் ஸ்தூபி மற்றும் யாழி உருவம் ஒன்றும் உள்ளது. விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வது உண்டு.

பிரசித்தி பெற்ற இந்த மலையின் மீது நாமக்கல் பகுதியை ஆண்ட சிற்றரசன் ராமச்சந்திர நாயக்கனால் கோட்டை கட்டப்பட்டது என கூறப்படுகிறது. ஏறத்தாழ 5 அடி உயரம் கொண்ட இந்த கோட்டையின் மதில் சுவரில் உள்ள துளையில் துப்பாக்கியை வைத்து, கீழே சாலையில் போவோரை குறி வைத்து சுடும் அளவிற்கு இதன் மதில் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆயுத கிடங்கு ஒன்றும் மலை மீது உள்ளது. இந்த கோட்டை சுவர் கட்டி ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மலையின் அடிவார பகுதியில் இருந்து உச்சிவரை செல்வதற்கு படிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இரும்பு கைப்பிடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்திய அளவில் புகழ்பெற்ற மன்னன் திப்புசுல்தான், இந்த கோட்டையை கிழக்கிந்திய கம்பெனியை (ஆங்கிலேயர்கள்) எதிர்த்து போராட பயன்படுத்தினார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குளக்கரை திடலில் கடந்த 1933-ஆம் ஆண்டு நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பேசினார் என்ற பெருமையும் இந்த மலை அடிவாரத்துக்கு உண்டு.

சிலர் வான் உயர்ந்த கட்டடங்களை கட்டுவதால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலைக்கோட்டை மறைக்கப்படுகிறது. இதை தடுப்பதற்கு தொல்லியல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மத்திய அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைஅடிவார பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கினர். இதையடுத்து தொல்பொருள் துறையால் மலையை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்துக்கு புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டது.

திருமயம் ஊமையன் கோட்டை

புதுக்கோட்டையில் இருந்து 27 கி.மீ தூரத்தில் காரைக்குடி செல்லும் ரோட்டில் இக்கோட்டை இருக்கிறது. இக்கோட்டை வரலாற்றுப் புகழ்பெற்ற கோட்டையாகும். வட்ட வடிவமாக அமைந்துள்ள இக்கோட்டை கட்டடக்கலை இலக்கணத்தோடு கட்டப்பட்ட கோட்டையாகும்.

பெரம்பலூர் ரஞ்சன் கோட்டை

பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 44 சதுர ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோட்டை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதன் கம்பீரமான தோற்றம் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இருக்கிறது.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை 

மாயவரத்திலிருந்து பொறையாறு செல்லும் வழியில் நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இக்கோட்டை உள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் வியாபாரத்தின் பொருட்டு  தமிழ்நாட்டிற்கு வந்த டேனிஷ் வர்த்தக கம்பெனியைச் சார்ந்த ஒவ்ஷெட்டி என்பவர் தஞ்சாவூர் ரகுநாத நாயக்க மன்னரின் அனுமதி பெற்று இக்கோட்டையை கட்டினார். இக்கோட்டையை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை புராதான சின்னமாக பராமரித்து வருகிறது 

வேலூர் கோட்டை

இந்திய வரலாறு தனி முத்திரை பதித்துள்ள வேலூர் கோட்டை இந்தியாவிலுள்ள கோட்டைகளில் மிகவும் அழகான கோட்டையாகும் கி.பி.1566- ஆம் ஆண்டில் விஜயநகர மன்னரால் கோட்டை கட்டப்பட்டது.  அழகான அகழியுடன் பலமான மதில் சுவர்களுடன்  இக்கோட்டையின் கம்பீரம் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.

திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை 

சரித்திர புகழ்பெற்ற திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கரால் 1065 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  மலை மீதுள்ள கம்பீரமான கோட்டையின் கிழக்கு பகுதியில் பாண்டிய கால முறைப்படி கட்டப்பட்ட அழகான கோவிலும் ராணுவ வீரர்களின் பாசறையும், பீரங்கிகளும் அமைந்துள்ளன. இம்மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் திண்டுக்கல் நகர் முழுவதையும் காணலாம்.

செஞ்சிக்கோட்டை

திண்டிவனம் அருகே உள்ளது. சரித்திர அடையாளமாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது செஞ்சிக் கோட்டை. சுமார் 830 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, முழுமையான வடிவத்துடன் மிச்சமிருக்கும் தமிழ் மன்னர்களின் கோட்டை.

தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக்களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாள சிறை, மதில்சுவர், அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களோடும் தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்டை, செஞ்சிக் கோட்டை.

சுற்றிலும் நான்கு மலைகள். அவற்றின் உச்சியில் ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் என கோட்டைக் காவல் அமைப்புகள், இந்த மலைகளின் மீது பிரமாண்டமான மலைப்பாம்பு போல நீளும் கோட்டைச்சுவர், நடுவில் திறந்தவெளி... இதுதான் செஞ்சிக் கோட்டை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT