தினமணி கொண்டாட்டம்

வருங்கால சந்ததியினருக்கு...

16th Jan 2022 06:00 AM | வனராஜன்

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் பாப்பாகுடியைச் சேர்ந்தவர் கீதா பிரியதர்ஷினி.
பட்டதாரியான இவர் தனது ஐ.டி பணியை உதறிவிட்டு முழுமையாக இயற்கை விவசாயம் செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக தரிசு நிலத்தைஎப்படி செழிப்பாக மாற்றுவது என்பதை தனது ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார்.
கீதா பிரியதர்ஷினியிடம் பேசிய போது பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
"என்னுடைய அப்பா-அம்மா இருவரும் அரசு ஊழியர்களாக பணியாற்றிதால் நான் பெரும்பாலும் பாட்டியின் கவனிப்பில் தான் வளர்ந்தேன். குறிப்பாக அவருடன் மானாவாரி நிலத்தில் விளையாடி அனைத்து விவசாய வேலைகளையும் கற்றுக்கொண்டேன். 2011-ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு பெங்களூருக்கு குடி வந்தோம். எனது கணவர் ராஜேந்திரன் விவசாய பின்புலத்தை கொண்டவர். ஆனால் சூழ்நிலை எங்கள் இருவரையும் ஐ.டித்துறையில் பணிபுரிய வைத்தது. 2013- ஆம் ஆண்டு குழந்தை பிறந்த பிறகு ஐ.டி வேலைக்கு டாட்டா சொல்லிவிட்டு முழுமையாக இயற்கை விவசாயத்தில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறேன்' என்றார்.
"என் மனைவி கீதாவுக்கு இரண்டாவது குழந்தை பிரசவத்தின் போது அவருக்கு பேறுகால நீரிழிவு நோய் ஏற்பட்டது . இது தொடர்பான ஆய்வில் இறங்கிய போது நாம் பல ஆண்டு காலம் உபயோகிக்கும் அரிசியால் சர்க்கரை நோய் வருவதில்லை என்பதையும், அதில் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகளால் தான் சர்க்கரையும் நோயும், நமது சுவாச மண்டலமும் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டோம். எனவே நாம் நோய் இல்லாமல் வாழ வேண்டுமானால் விஷம் இல்லாத உணவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இயற்கை விவசாயத்தில் இறங்கினோம்'' என்றார் கணவர் ராஜேந்திரன். தொடர்ந்து பேசினார் கீதா.
""பாப்பாக்குடி பகுதியில் மொத்தமாக நிலத்தை வாங்கினோம். இது எனது கணவர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இணைந்து வாங்கியது. அனைத்தும் மானாவாரி நிலம். நாங்கள் வாங்கும் போது கருவேல மரங்கள் மட்டுமே இந்த நிலத்தில் இருந்தன. எங்கள் நிலத்தற்கு அருகே விவசாயி ஒருவர் 2019 ரக எண்ணெய் பனை விதைத்திருந்தார். ஆனால் அவை வறண்டு போய் முற்றிலுமாக அழிந்து விட்டன. அப்போது காலம் எங்களுக்கு உணர்த்தியது என்னவென்றால் இந்த நிலத்தில் நீர் மேலாண்மை, மண் மேலாண்மை இரண்டையும் சரி செய்தால் மட்டுமே பிற விஷயங்களும் சாத்தியமாகும் என்பதை தெரிந்து கொண்டோம். எங்கள் நிலத்தில் ஐந்து வகையான மண் அமைப்பு இருந்தது. இவற்றை சரி செய்வது சவாலாக இருந்தது
அறுவடை என்பது திணை, தானியங்கள், நெல், பயிர்கள் போன்றவற்றை செய்வது கிடையாது. விதை என்பது பேர் ஆயுதம். ஆனால் அதைவிட முக்கியமானது நீர். இனி உலகத்தில் நீருக்காக போர் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே நீரையும் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு நிலத்தடி நீரை மேம்படுத்த மழை நீரை அறுவடை செய்ய வேண்டும். பண்ணைக் குட்டைகள் அமைத்து நிலத்தடி நீரை நீரின் தேவை குறைக்க முடிவெடுத்து அந்த நடவடிக்கையில் இறங்கி வெற்றி கண்டோம். இந்த ஐந்தாண்டுகளை பல வறட்சியானசூழ்நிலையை தாண்டி விட்டோம். இப்போது தான் எங்கள் நிலத்தில் போர் போட்டுள்ளோம்.

நீர் மேலாண்மையைகடைப்பிடிப்பது எப்படி?

ஓடும் நீரின் வேகத்தை குறைக்க வேண்டும். நிற்கும் நீரை பூமிக்குள் இறக்க வேண்டும் இதுதான் நீரின் தத்துவம் இந்த தத்துவத்தை பயன்படுத்தி எந்த அளவு நீர் மேலாண்மை கடைப்பிடித்து வருகிறோம். ஆற்று நீரை அதிகம் பயன்படுத்த நல்லதல்ல. காரணம் அதில் தொழிற்சாலை கழிவுகள் அதிகம் கலக்கின்றன. இதனால் ஐந்து பண்ணைக்குட்டைகள் அகழி வாய்க்கால் என ஓடும் நீரை நிறுத்தி வைத்துள்ளோம். எங்கெல்லாம் மண் வளம் இல்லையோ அங்கெல்லாம் வெட்டிவேர், கிளைரிசிடியா, அகத்தி, முருங்கை, தக்கைப்பூடு எனப் பயிர் செய்து மண்ணின் தன்மையை மாற்றி மர பயிர்கள் செய்தோம். கொடுக்காப்புளி இந்த மரப்பயிர் ஒரு வெப்ப விரும்பி பயிர் . நமது பண்ணையில் வருடந்தோறும் இரண்டு மாதங்கள் முழுவதும் நீரில் முழ்கி மீண்டு எழுந்து நிற்கிறது.

மண்ணை வளப்படுத்த புங்கை, வேம்பு, அகத்தி போன்ற மரங்களையும் தென்னை, பெருநெல்லி, சப்போட்டா போன்றவற்றையும் பூமியில் விளைவித்தோம். 2017 முதல் தங்கச்சம்பா, வாசனை சம்பா நெற்பயிர்களை பயிரிட்டோம் காய்கறிகளை விளைவித்து அறுவடை செய்து விற்பனை செய்தோம். ஆனால் திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ இருப்பதால் போக்குவரத்து செலவு, வேலையாட்கள் கூலி போன்ற விஷயங்களால் லாபம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டிலிருந்து மரங்களுக்கு மாறிவிட்டோம்.
எங்களது இந்த இயற்கை விவசாயம் முறையை தெரிந்துகொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு எங்களை விவசாயிகள் கலந்து கொண்ட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். லாபத்திற்காக நாங்கள் இதை செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செலவு செய்த தொகை தான் அதிகம். ஆனால் இயற்கை விவசாயம் என்பதை நமக்கானது. நம் வருங்கால சந்ததியினரை உழவாண்மையிலருந்து பிரித்து வைக்காமல் அவர்களை நம்மோடு சேர்த்து பயணிக்க வைப்பதே எஞ்சி நிற்கும் உழவாண்மையை உயிர்போடு வைத்திருக்கும் ஒரே வழி'' என்கிறார் கீதா பிரியதர்ஷினி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT