தினமணி கொண்டாட்டம்

காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும்!

16th Jan 2022 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT


ஸ்டன் சிவா... தமிழ் சினிமாவின் முக்கியமான சண்டை பயிற்சி இயக்குநர். "சேது', "நந்தா', "பிதாமகன்', " நான் கடவுள்' , "வேட்டையாடு விளையாடு' என படத்துக்குப் படம் ஆச்சரியம் அளிக்கும் சண்டைக் காட்சிகள் இவருடையது. இப்போது இன்னும் அழகு கூட்டியிருக்கிறது தெலுங்கில் வெளியாகியுள்ள பாலகிருஷ்ணாவின்"அகண்டா' . இதன் மிகப் பெரிய வெற்றிக்கு ஸ்டன் சிவாவின் சண்டைக் காட்சிகள் முக்கியமானது என்கிறது தென்னிந்திய சினிமா வட்டாரம். எப்போதும் வெவ்வேறு தளம் கொண்ட படங்களுக்கு ஏற்ப வித்தை வியூகம் வகுப்பவர்.

எப்படியிருந்தது "அகண்டா' பட அனுபவங்கள்....

ஃபிலிம் முதல் டிஜிட்டல் காலமான இதுவரை ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு முன்பு கதை கேட்பது என் வழக்கமான வழக்கம். ஏனெனில் அந்த கதைக்கு நாம் சண்டை காட்சியை இயக்கினால் அதில் புதிதாக என்ன செய்ய முடியும் என்ற நினைப்புதான். தற்போதைய ரசிப்புத் தன்மை என்ன, அதில் எனக்கு எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதை சிந்தித்து பணியாற்றுவேன். பாலகிருஷ்ணா என்றாலே எப்போதும் மாஸ்தான். தனி பாணிதான். இந்தியாவில் யாருக்கும் இல்லாத தனி ரசிகர் கூட்டம் அவருக்கு. இந்த படத்தில் கதைக்கு ஒத்துப் போகும் படியான சண்டைக் காட்சியையும், மாஸூடன் கிளாûஸயும் இணைக்கும் வகையில் இயக்கியுள்ளேன். அதுதான் இந்த வெற்றி. "சேது,' "நந்தா', "பிதாமகன்', "நான் கடவுள்' இந்த நான்கு படங்களும் என் பயணத்தில் முக்கியமானவை. வேறுபட்ட கதைக் களங்களில் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான எனக்கான அனுபவ புத்தகங்கள் இவை. அதுதான் இந்தப் படத்துக்கும் ஒரு புரிதலை தந்தது. என் பயணத்தில் மட்டுமல்ல, பாலகிருஷ்ணாவின் பயணத்திலும் இந்தப் படம் இன்னும் கூடுதல் அழகு.

இரு மகன்களையும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்.... அவர்கள் விரும்பிய இடம்தானா இது...

ADVERTISEMENT

நான் ஒரு சாதாரண ஆள். கோடம்பாக்கம் தான் எனக்கு எல்லாம். என் மாமா நடராஜன் அப்போதைய சினிமாவில் பரபரப்பான ஸ்டண்ட் மேன். ரஜினி, கமல் படங்களுக்கெல்லாம் அவர்தான் டூப். அவர்தான் நமக்கு இந்த துறைக்கு வர ஊக்கம் தந்தவர். சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து உள்ளே வந்தேன். மாமா ஸ்டண்ட்டில் இருந்ததால், அதற்குள் வருவது சுலபமாக இருந்தது. "லவ் டுடே' நான் முதன் முதலாக சண்டை பயிற்சி இயக்குநராக உள்ளே வந்த படம். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்கள். ஒவ்வொரு படத்துக்கும் அவ்வளவு உழைப்பு. அவ்வளவு தனித்துவம் கொடுத்தேன். இப்போது நீங்கள் எல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

இதுதான் நான் வளர்ந்து வந்த கதை. அதே மாதிரிதான் என் இரு மகன்களும். என்னைப் பார்த்து வளர்ந்தவர்கள். சிறு வயதில் இருந்தே நான் எந்த படத்திற்கு வேலை செய்ய சென்றாலும் இறுதி 3 நாள்கள் மனைவியும் என் இரு மகன்களும் உடன் இருப்பார்கள். அது முதலே அவர்களுக்கு ஆர்வம் வந்தது. அதனால் நான் கஷ்டப்பட்டு வந்தது போல் இவர்களும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நான் இவர்களை கராத்தே பயிற்சிக்கு அனுப்பினேன். அவர்கள் அதில் தங்கம் வென்றனர். உலக கராத்தே சாம்பியன்ஷிப் வென்றுள்ளனர். இவர்களுடைய கராத்தே ஐடியா தான் "அகண்டா'. சினிமா சண்டை கலையில் தகுதியான இடம் அவர்களுக்கு காத்திருக்கிறது. இருவருக்கும் புதிய சிந்தனைகள் உண்டு. உங்கள் ஆதரவு வேண்டும்.

எப்படியான அனுபவம் இது...

டூரிஸ்ட்டுக்கும், டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால் எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானித்துக் கொண்டு போவான். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபார்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு. அப்படித்தான் நான் நடிக்க வந்ததும். நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம்.போதனை செய்கிற அளவுக்கு நான் சாதிக்கவில்லை. ஆனால், முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டு திரும்பிவிடக் கூடாது. உங்களுக்கான மகுடம் அடுத்த திருப்பத்திலும் காத்திருக்கலாம். இதுவே என் பயண அனுபவம்.

சண்டை காட்சிகள் இல்லாமல் நிறைய படங்கள் வெற்றியடைந்துள்ளதே...?

இது எல்லா சினிமாக்களிலும் உண்டு. ஹாலிவுட்டில் எடுத்துக் கொண்டால், ஈரானிய சினிமாவிலும் கூட இது உண்டு. பொதுவாக, சினிமாவில் ஹிட் ஆனவர்கள் ஒரே தளத்தில் பயணிப்பார்கள். மாற்றுச் சிந்தனையை அமுக்கி விடுவார்கள். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடித்துக் கொண்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றி என்று நான் பார்க்கவில்லை. இது புதிய சிந்தனைகளின் வெற்றி. மக்களின் ரசனையைப் புரிந்து, காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதை எதிர்க்கும் விஷயம், தடுக்கும் விஷயமும் தடைபடும். அதையும் தாண்டி இளைஞர்கள் வர வேண்டும். நல்ல சிந்தனைகளும் வர வேண்டும். "சேது', "நந்தா', "பிதாமகன்' படங்கள் எல்லாம் அதற்கு உதாரணம். கதைக்களங்களுக்கு ஏற்ற சண்டை காட்சிகள் அமைக்கவில்லை என்றால், அங்கே எனக்கு வேலை இல்லை. அதனால் அதில் என் பங்கும் இருக்க ஆசைப்படுகிறேன்.

என்ன இருந்தாலும் பாதுகாப்பு இல்லாத ஒரு வேலை என்கிற விமர்சனம் இருக்கிறதே....

கைத்தட்டலின் ருசிதான் இங்கே. அதற்காகத்தான் எல்லோரும் காத்துக் கிடக்கிறோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஊர், ஊராக போய் விதவிதமான கைத்தட்டல்களைக் கேட்க ஆரம்பித்தேன். "கொஞ்சம் கூட பயமே இல்லாமல், இப்படி இருக்கானே இந்த சின்ன பையன்' என பாராட்டினார்கள். மறுபடியும் மறுபடியும் கைத்தட்டல். அந்த ருசிதான் இதுவரை கடத்தி வந்திருக்கிறது. இப்படித்தான் என்னை போல் ஆயிரமாயிரம் பேர். கைத்தட்டலுக்காக காத்திருக்கிறார்கள். இங்கே பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால், நாம் தேர்வு செய்த இடம் இப்படி. என்ன செய்வது. அரசும், சங்கமும் மனசு வைத்தால், எதாவது செய்யலாம். வேறு என்ன செய்ய? உடம்புதான் இங்கே மூலதனம். அது போனால், வாழ்க்கை போய் விடும். அப்படிப்பட்ட பயங்கரமான வாழ்க்கை இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT