தினமணி கொண்டாட்டம்

அழகியின் 20 ஆண்டுகள்

16th Jan 2022 06:00 AM

ADVERTISEMENT


"கல்வெட்டு' எனும் பெயரில் 1986-ஆம் ஆண்டு  உருவான சிறுகதைதான், பின்னாளில் " அழகி' என்ற பெயரில் படமாக வெளிவந்தது.  பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்து தங்கர்பச்சான் இயக்கிய இந்தப் படம் தமிழ் சினிமாவில் தனி தடத்தை பதித்தது. இப்போது இந்தப் படம் வெளியாகி சுமார் 20 ஆண்டுகள் கடந்தோடி விட்டது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் தங்கர்பச்சான்.... ""சண்முகமும் தனலட்சுமியும் என்னை செய்தது  போலவே அழகியைக் கண்டவர்களையும் உறங்க விடாமல் செய்தார்கள். ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து  சேர்ந்து வாழ கிடைக்காமல் போன தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும் "அழகி' இன்றும்  உயிர்ப்புடன் வாழ்கிறாள்.

திரைப்பட வணிகர்கள் இப்படத்தை புறக்கணித்து ஒதுக்கியது போல் மக்களும் செய்திருந்தால் நான் காணாமலேயே போயிருப்பேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எத்தனையோ படங்கள் வெற்றிகளை குவிக்கின்றன. அவைகளெல்லாம் வணிக வெற்றியாகி மறக்கப்படுகின்றன. ஆனால் ஒரு சிலப் படங்கள் மட்டுமே காலங்கள் கடந்து மக்களின் மனங்களில் நிறைந்து என்றென்றும் வாழ்கின்றன.

முற்றிலும் வணிகமயமாகிப்போன பெரு முதலாளித்துவ வலைக்குள் சிக்கிக்கொண்டு,  என் மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் கிடந்து உயிர்ப்புள்ள படைப்புகளைத் தருவதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன். "அழகி'யின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் சுவையறியும் நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி'' என நெகிழ்ந்துள்ளார் தங்கர்பச்சான். 

ADVERTISEMENT
ADVERTISEMENT