சென்னையில் வசித்துவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான காட்சன் ருடால்ப், இசையால் எண்ணற்றோரை கவர்ந்துவருகிறார்.
இவருடன் ஓர் சந்திப்பு:
இசைப்பயணம் தொடக்கமும், அனுபவமும் பற்றி?
பிறக்கும்போதே விழித்திரை சிதைவு குறைபாடு இருந்தது. 4 வயதுக்குள் முற்றிலுமாகப் பார்வையை இழந்தேன். அப்போது எதிரே ஒருவர் உட்கார்ந்து இருந்தாலோ, அல்லது பொருள்கள் எதாவது இருந்தாலோ ஒரு பீல் கொடுக்கும் அவ்வளவுதான். அந்த காலகட்டத்தில் வெளிவந்த நோக்கியோ போனில் கம்போஸ் ஒரு ஃபிச்சர் இருக்கும்.
அதில், 123 டயலை அனுப்பும்போது, "சரிகமபதநிச' வாசிக்கிற மாதிரி ரிங் டோனாக தயார் செய்து வீட்டில் உள்ள நபர்களிடம் காண்பித்தேன். அவர்களும் ஆச்சரியப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கீ.போர்டும் வாங்கிக் கொடுத்தனர். பாடல்கள் கேட்பது, வாசிப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்தேன்.
பள்ளியில் ப்ரெய்லி முறையில் கல்விக் கற்றேன். இளங்கலை-முதுகலை ஆங்கில இலக்கியத்தை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றேன்.
இசைப்பள்ளிக்கு சென்று சரியான முறையில் இசையை கற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அனைத்து இடங்களிலும் என்னைப் புறக்கணித்தனர். இதை சவாலாக எடுத்துக் கொண்டு முயற்சிகளை செய்தேன்.
இதற்கு வெற்றிப்படியாக சுப நிகழ்ச்சியிலும், தனியார் சார்பில் ஆங்காங்கே மேடைகளில் ஏறும் வாயப்பும் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தேன். பியானோ, டிரம்ஸ், தபேலா, கிடார். ரேகாட்டர் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் மற்றும் தாள வாத்தியங்களையும் கற்றுக் கொண்டேன். எனது 17-வது வயதில் முதல் இசை ஆல்பம் வெளியிட்டேன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களின் இசைகளையும் கேட்டு வளர்ந்தேன். ராஜேஷ் என்ற மாஸ்டர் லண்டன் டிரினிட்டி தேர்வு எழுத பயிற்சிக் கொடுத்தார். அதிலுள்ள எட்டு கிரேடுகளிலும் சிறப்பாகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இசையமைப்பாளர் அனிருத், பென்னி டாயல். யோகி சேகர், பிரதீப் குமார், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். இந்த அனுபவமானது ஒரு புதிய உத்வேகத்தையும், சவால் நிறைந்ததாகவும் அதே நேரத்தில் என்னுடைய இசையில் அனைவரையும் பாடவைத்தது அளவு கடந்த மகிழ்ச்சியை தந்தது. ஒலி வடிவமைப்பிலும் சிறந்து விளங்குகிறேன்.
திரைப்படங்களில் இசை வாய்ப்புகள் கிடைக்கிறதா?
நானே சொந்தமாக கணினியில் உள்ள இசை தொடர்பாக மென்பொருள்களை ஆராய்ச்சி செய்கிறேன். எப்படி சுலபமாக கையாள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். தற்பொழுது "வளைஞன்' என்னும் தமிழ் திரைப்படத்துக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளேன்.