தினமணி கொண்டாட்டம்

வரலாறு காட்டும் தீப வழிபாடு

தினமணி


விளக்கு ஒரு மங்கலப் பொருள், புறத்திருளை நீக்கும் அகல் விளக்குப் போன்று, அகத்திருளை நீக்குவதற்கு ஞான விளக்காகிய இறைவன் நமக்குத் துணை நிற்கவேண்டும். 

அத்தகைய இறைவனை அப்பர் பெருமான், உள்ளமாகிய தகழியில், உணர்வு என்னும் நெய்யை வார்த்து, உயிர்ப்பு என்னும் திரியைச் செவ்விதின் அமைத்து, ஞானம் என்னும் சுடரை ஏற்றி அதைக்கொண்டு நோக்கினால் இறைவன் திருவடிகளைக் காணலாம் என்று கூறுகின்றார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இறைவனை "சோதியே சுடரே சூழொளி விளக்கே', "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி',  "சுடர்கின்ற கோலந்தீயேயென மன்னு சிற்றம்பலவர்' என்றெல்லாம் போற்றுகின்றனர். 

இறைவன் ஜோதி வடிவாக காட்சி அளிப்பதை திருவண்ணாமலையில் "லிங்கோத்பவர்' வடிவமாக காணலாம்.

கல்வெட்டுகளில்...: இவ்வாறெல்லாம் போற்றப்படும் விளக்கை இறைவன் ஆலயங்களில் ஏற்றிவைக்க, நாடாண்ட மன்னர்களும், மக்களும் தானம் அளித்தனர். விளக்குக்கு அளிக்கப்பெற்ற தானம் சிறந்ததாகக் கருதப்பட்டது. கல்வெட்டுகளில் பெரும்பாலும் கோயிலுக்கு விளக்குக்காக அளிக்கப்பெற்ற தானத்தைப் பற்றியே கூறுகின்றன.

விளக்குகள் எரிக்கப் பொருள்கள் :

விளக்குகள் எரிக்க நெய் அல்லது எண்ணெய் வேண்டும். நெய் வாங்கிக் கொள்வதற்குப் பொன் தானமாக அளிக்கப் பெற்றதாகப் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நெய் பெறுவதற்குப் பசுக்கள், ஆடுகள், எருமைகள் கொடுக்கப்பட்டன.  இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் இருக்க எருதும், கிடாயும் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. இதைக் கல்வெட்டுகள் "சாவா மூவாப் பேராடு' எனக் குறிப்பிடுகின்றன. 

இவ்வாறு அளிக்கப் பெற்ற ஆடுகளையும் பசுக்களையும் சிலர் கோயிலின் சார்பில் பெற்று விளக்கு எரிப்பதற்கு நெய் அளித்தனர். அவர்களை "கோயில் மன்றாடிகள்', "திருவிளக்குக் குடிகள்' எனக் கல்வெட்டுகள் உரைக்கின்றன. விளக்குகளுக்காக அளிக்கப் பெற்ற நிலம் "திரு விளக்குப்புறம்' என அழைக்கப்பட்டது.  விளக்குக்குத் தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கண்ணபுரம் செளரிராசப் பெருமாள் கோயிலிலுள்ள மூன்றாம் இராசேந்திரனின் 18 -ஆம் ஆண்டு கல்வெட்டில் கோயிலில் தென்னை மரங்களைப் பராமரிப்பவர்கள் ஒரு கோல் நிலத்திற்கு மூன்று உழக்கு தேங்காய் எண்ணெய் கோயிலுக்கு அளித்திட வேண்டும் எனக் கூறப்படுகிறது. செந்தலைக் கோயில் இறைவனுக்குப் பகல் விளக்கெரிக்க சுவாமிநாத இளவரசன் என்பவன் இலுப்பைத் தோட்டம் ஒன்றைத் தானமாக அளித்தான்.

பல வகை விளக்குகள்: கோயில்களில் விளக்கு எரிப்பதற்குப் பலவகையான விளக்குகள் தானமாக அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கல்வெட்டுகளில் "நந்தா விளக்கு', "சந்தி விளக்கு', "அரை விளக்கு', "கால் விளக்கு'  போன்ற விளக்கு வகைகள் கூறப்படுகின்றன. "நந்தா விளக்கு' என்பது இறைவன் அருகில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். "சந்தி விளக்கு'  என்பது காலை, மாலை இரு நேரங்களில் மட்டும் ஏற்றப்படும்.

விளக்குகள் வெள்ளியாலும், செம்பாலும் செய்து கொடுக்கப்பட்டு அவற்றின் எடை எவ்வளவு என்பதும் குறிக்கப்பட்டுள்ளன. 

இராசராசனின் தேவியான உலக மாதேவி திருவையாறு கோயிலுக்கு ஈழச்சியல் விளக்கு, மலையான் சியல் விளக்கு, சோழச்சியல் விளக்கு, ஓர்க்குட விளக்கு, அனந்தலை விளக்கு ஆகியவற்றை அளித்தாள் என அக்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் செம்பினால் செய்யப்பட்டவை. 

மலையான்சியல், ஈழச்சியல் போன்ற விளக்குகள் இராசராசன் பெற்ற வெற்றிகளால் சோழ நாட்டுக்கு வழக்கத்துக்கு வந்திருக்கலாம். மேலும் பஞ்சாரத்தித் திருவிளக்கு என ஒரு விளக்கும் குறிப்பிடப்படுகிறது. 

முதலாம் இராசராசனின் கல்வெட்டு ஒன்று மாத்தூர் சிவன் கோயிலுக்கு "ஐந்து நிலைக் குத்துவிளக்கு', "நிலைக் குத்துவிளக்கு',  "மூன்று நிலைக் குத்துவிளக்கு' , "மூன்று நிலைக் குத்துவிளக்கு' , "மூன்று நிலைக் குத்துவிளக்கு' ஆகியவை கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

திருமணஞ்சேரிக் கோயிலுக்குத் தொங்கும் விளக்கு ஒன்று அளிக்கப்பட்டது.

திருச்சோற்றுத்துறை கோயிலுக்குச் செம்பினால் ஆன 32 அகல் விளக்குகள் அளிக்கப்பட்டன. முதலாம் இராசராசன் காலத்தில் ஸ்ரீவிசய மன்னனின் பிரதிநிதியாகிய நிமிலன் அகத்தீசுவரன் நாகைக் காயாரோகண சுவாமி கோயிலுக்குப் "பாவை விளக்கு', "குரக்கு விளக்கு',  "மத்த விளக்கு' போன்றவற்றைத் தானமாக அளிக்க, இரன் சடையன் என்ற தேவர்கண்ட ஆசாரியன் இவற்றை வடிவமைத்தான் என அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.  மேலும் கருவறை நுழைவு வாயிலில் இருக்கும் விளக்குகள் "சரவிளக்கு' அல்லது ‘தீப மாலை" "தீப மாலை'  என குறிப்பிடப்படுகிறது.

பெயர்கள்: சின்ன காஞ்சிபுரத்திலுள்ள முதலாம் இராசராசனின் ஒரு கல்வெட்டில் மும்முடிச்சோழன் என்பவன் அரசனின் அனுமதியோடு பல நாடுகளை வென்று, அங்கிருந்து கொண்டு வந்த பொருள்களில் பத்து விளக்கு எரிக்க 100 ஆடுகளைத் துர்க்கை கோயிலுக்கு வழங்கினர். அவ்விளக்குகளுக்கு "இராசராசன்' என்று பெயரிட்டான் எனக் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் அணுக்கி நக்கன் பரவை நங்கை என்னும் பெண்ணரசி திருவாரூர் கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்திருக்கிறாள். ஆரூரன் திருக்கோயிலுக்கு மாமன்னன் இராசேந்திரனும் பரவை நங்கையும் நேரில் பவனி வந்து கோயிலுக்குள் நுழைந்து இறைவன் முன்பு நின்று வணங்கினர். அவர்கள் நின்று வணங்கிய இடத்தில் பரவை ஒரு குத்துவிளக்கை ஏற்றினாள். 

இதைத் தவிர,  15, 579 பலம் எடையுள்ள 28 பிரம்மாண்ட குத்துவிளக்குகளையும் அளித்திருக்கிறாள். எனவே அக்காலத்தில் விளக்குகள் பெயரிடப்பட்டு வழக்கில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. 

பெண் ஒருத்தி தன் கைகளில் அகல் விளக்கினை ஏந்திய நிலையில் காணப்படும் பாவை விளக்கு -தீப லட்சுமி, தீப நாச்சாரியார், திருவிளக்கு நாச்சியார் என அழைக்கப்படுவதைக் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT