தினமணி கொண்டாட்டம்

நிஜத்தைப் போல இப்போதும்..! 

4th Dec 2022 06:00 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT


நிஜ சூரசம்ஹாரத்தைப் போல காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் இப்போதும் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு. காமாட்சி அம்மன் கோயிலுக்கும், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பர நாதர் கோயிலுக்கும் இடையில் ராஜ வீதியில் அமைந்திருக்கிறது  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கனவில் முருகன் தோன்றி தம் வரலாற்றை "நற்றமிழில் பாடுக!'  என்று கேட்டாராம். "என்னால் எப்படியப்பா முடியும்!' என்று கச்சியப்பர் கேட்க,  முருகன் ஆறுமுகமாக காட்சியளித்து "திகடசக்கர செம்மும்' என்று முதலடி எடுத்துக் கொடுத்து அருள்புரிந்த இடம் இந்தக் கோயில். கந்தபுராணம் அரங்கேற்றத்தின்போது, புலவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தனி ஒரு புலவராக வந்து தீர்த்து வைத்த பெருமைக்குரிய இடமாகவும் உள்ளது.

சூரனை அழித்த இடம் திருச்செந்தூர் என்பதால்,  சூரசம்ஹாரப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். முருகனே புலவராக மாறி தமிழ்க்கடவுளாக காட்சி கொடுத்ததால்,  குமரக்கோட்டத்திலும் விமரிசையாக நடைபெறுவது தனிச்சிறப்பு. 

சிறுவன் ஒருவன் முருகனாகவும்,7 இளைஞர்கள் அசுரர்களாகவும் வேடம் அணிந்து கொண்டு கந்தபுராணப் பாடல்களை பாடிக் கொண்டும், தர்க்கப் பாடல்களை பாடி விவாதித்துக் கொண்டும் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சியாகும். அசுரர்களும், முருகனும் அவரவர்களுக்கே உரிய கிரீடம், வில், அம்பு, வால், கதை  ஆகியனவற்றை வைத்துக் கொண்டு மோதும் காட்சிகள் வீரம் இல்லாதவருக்கும் வீரம் வந்து விடும் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

ஆண்டுதோறும் சிறுவன் ஒருவனை முருகனாக அலங்கரித்து, வண்ணப்பூத்தேரில் அமரவைத்து, ஊர்வலமாகக் கொண்டு வருகின்றனர். அசுரர்களும்  பின்னால் குமரகோட்டம் ஆறுமுகக்கடவுள் சிறப்பு அலங்காரத்திலும்  ராஜவீதிகளில் பவனி வருகின்றனர். வாண வேடிக்கைகளும், நையாண்டி மேள வாத்தியங்களும், அசுரர்களின் ஆணவ ஆட்டங்களும்,கொக்கரிப்புகளும் சிறுவன் முருகனின் கோபமும் பார்க்க, பார்க்க அற்புதம். 

நிகழாண்டு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜின் மகன் சிறுவன் சூர்யா முருகனாக அலங்கரிக்கப்பட்டு,  அசுரர்களுடன் மோதும் காட்சி நடைபெற்றது. 

இதுகுறித்து சூரசம்ஹார விழாக் குழுத் தலைவர் வி.ஜீவானந்தத்திடம் பேசியபோது:

""கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரசம்ஹாரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.  விழாவை  ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு, நிமந்தக்காரத் தெரு, எஸ்.வி.என். பிள்ளை தெரு, பாண்டவப் பெருமாள் சந்நிதி தெரு உள்ளிட்ட 4 தெருக்களில் வசிக்கும் செங்குந்த மரபினர்களே பாரம்பரியமாக செய்து வருகிறோம்.  இளைஞர்களில் 7 பேர் அசுரர்களாகவும், முருகனாக சிறுவன் ஓருவரும் உட்பட மொத்தம் 8 பேர் அவரவர்க்கு உரிய வேடங்களை அணிந்து கொள்வார்கள்.

வேடங்களுக்கு தேவையான உடைகள், கிரீடம், மீசை, தலைமுடி, வால், கதை, வில், அம்புகள் உள்ளிட்ட மேக்கப் பொருட்கள் அவர்களே சொந்தமாகத் தயாரித்தும், வெளியில் சிலவற்றை விலை கொடுத்து வாங்கியும் வைத்துள்ளனர். 

முருகனும், அசுரர்களும் கந்தபுராணத்தில் உள்ள வாக்குவாதப்பாடல்களை இலக்கிய நயத்தோடு பாடிக்கொண்டே மோதிக்கொள்வது தான் காஞ்சிபுரம் சூரசம்ஹாரத்தின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு அசுரனுக்கும் தனித்தனியாக 22 பாடல்கள் வீதம் 7 அசுரர்கள் மற்றும் முருகன் உட்பட மொத்தம் 203 பாடல்கள் உள்ளன.

சூரபத்மன், சிங்க முகாசுரன், தாராகாசுரன், அக்னிமுகன், வஜ்ரவாகு, பானுகோபன், இரணியன் என ஒவ்வொரு அசுரர்களுக்கும் தனித்தனிப் பாடல்கள். 

வீரவாகு முருகன் சார்பாக சூரபத்மனிடம் தூது செல்வதும், அதற்கு சூரபத்மன் கூறும் பதிலும் இலக்கியப் பாடல்களாகப் பாடப்படுகிறது. அசுரர்களாக வேடம் போடும் இளைஞர்கள் 7 பேரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள்.  வேலையிலும் இருக்கும் முருக பக்தர்கள்.

இதற்காகவே 6 நாட்களும் கடுமையாக விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்த பின்னரே விரதத்தை முடிப்பார்கள். அசுரர்கள் போடும் ஆணவ ஆட்டங்களையோ அல்லது இலக்கியப் பாடல்களையோ யாருக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. மனப்பாடமாக  பாடுவது எங்களுக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.எங்கள் முன்னோர்கள் இந்தப் பாடல்களை பாடி ஆடியிருக்கிறார்கள்.

ரேணுகாம்பாள் கோயிலில் முருகன் உட்பட 8 பேருக்கும் வேடமிட்டு,பின்னர் அங்கிருந்து கச்சபேசுவரர் கோயிலுக்கு வந்து ஊர்வலம் தொடங்கும். நகரில் ராஜவீதிகள் வழியாக முருகனும்,அசுரர்களும் பாடல்களை பாடி மோதிக்கொண்டே வருவார்கள். கோயில் முன்பாக வந்த பின்னர் ஒவ்வொரு தலையாக கொய்து சூரசம்ஹாரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகளும் காட்டுவார்கள்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT