தினமணி கொண்டாட்டம்

சுற்றுலா மையமாகும்  அரிட்டாபட்டி

தினமணி

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி. தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் பல்வேறு வரலாற்றுச் சுவடுகளையும், பல்லுயிர்களைப் பாதுகாக்கும் இயற்கை வளங்களையும் கொண்டது இந்தப் பகுதி. கழிஞ்சமலை, நாட்டார்மலை, வயத்துப்பில்லான்மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, கழுகுமலை, தேன்கூடு மலை என 7 மலைகளின் சங்கிலித் தொடரை அரணாகக் கொண்டது.

கழிஞ்சமலை குகைத் தளத்தில் காணப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணப் படுக்கைகள், சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம், வட்டெழுத்துக் கல்வெட்டு, 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியர் காலக் கல்வெட்டுகள், சிதிலமடைந்த பழைமையான சிவன் கோயிலின் தொல்லியல் எச்சங்கள் குறிப்பிட்டத்தக்க வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

லகுலீசர் சிற்பம்: சமணத் தீர்த்தங்கரர்களை இப்பகுதி மக்கள் ஆதரித்தது இங்குள்ள 2 தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளது. இங்குள்ள குகையில், சுமார் 10-க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்கள் தங்கியிருந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதேபோல, கழிஞ்சமலையின் மேல்பக்கத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலும், பாசுபத சைவ நெறியை நாடு முழுமையும் பரப்பியவரும், குஜராத் மாநிலத்தில் பிறந்தவருமான லகுலீசருக்கு இங்கு சிற்பம் அமைந்திருப்பதும் இப்பகுதியில் சைவமும் தழைத்தோங்கியிருந்ததற்குச் சான்றுகளாக உள்ளன.

நீர்நிலைகள்: இப்பகுதியிலுள்ள ஆணைக்கொண்டான் கண்மாய், சுந்தரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பொதிகை வளவன் ஸ்ரீஆணைமேல்கொண்டான் என்பவரால் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. இப்பகுதியில், 52 பாரம்பரிய நீர் நிலைகளும், பல்வேறு சுனைகளும் உள்ளன. இங்குள்ள தருமம் என்ற குளம் நல்லத்தங்காளால் ஏற்படுத்தப்பட்டது எனவும், இப்பகுதிக்குத் திருமணமாகி வரும் புதுமணப் பெண்கள், இக்குளத்திலிருந்து நீர் எடுத்து தனது வாழ்க்கையைத் தொடங்கினால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது.

7 மலைகளின் சங்கிலித் தொடர் அரணுக்கு உள்ளே வற்றாத பல நீர் நிலைகளைக் கொண்ட இப்பகுதி, பல்லுயிர் பெருக்கத்துக்கேற்ற பகுதியாகவும் உள்ளது. அதனால், தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத பல்வேறு பறவையினங்கள் இங்கு இருப்பது இப்பகுதிக்குக் கூடுதல் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

பல்லுயிர் பாரம்பரியத் தலம்: அரிட்டாபட்டி பகுதியிலுள்ள 7 மலைகளை வெட்டி எடுக்க முயற்சிகள் மேற்கொண்டபோது, அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தப் பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவித்துள்ளது அரசு.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்துக்குள்பட்ட அரிட்டாபட்டியில் 139.635 ஹெக்டேர் பரப்பு, மதுரை கிழக்குப் பகுதிக்குள்பட்ட மீனாட்சிபுரத்தில் 53.580 ஹெக்டேர் பரப்பு என 193.215 ஹெக்டேர் பரப்பு இந்தப் பல்லுயிர் பாரம்பரியத் தலத்தில் இடம்பெறுகிறது.

அறியப்படாத கிராமங்களில் ஒன்றாக இருந்த அரிட்டாபட்டி, தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதேநேரத்தில், இப்பகுதியில் இனி மேற்கொள்ளப்படும் சுற்றுலா நடவடிக்கைகளால், இயற்கை வளத்துக்கு எந்த ஆபத்தும் நேரிடக் கூடாது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

""2009-ஆம் ஆண்டிலிருந்து அரிட்டாபட்டியின் வரலாற்றுச் சிறப்புகளை வெளி உலகுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் தானம் அறக்கட்டளை ஈடுபட்டது. 2016-ஆம் ஆண்டில் அங்கு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், அரிட்டாபட்டியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்புக்கு அடிப்படை எனலாம். இங்கு சுற்றுலா வளர்ச்சி அவசியமானதுதான். ஆனால், அது இப்பகுதியின் பாரம்பரியத்தன்மை கெடாத வகையில் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் உள்ளூர் மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்'' என்கிறார் தானம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கான சுற்றுலாத் திட்ட ஆலோசகர் கே.பி. பாரதி.

""அரிட்டாபட்டியில் நூற்றுக்கணக்கான பறவையினங்கள் உள்ளன. இங்கு சுமார் 18 வகையான கழுகு இனங்கள் உள்ளன. அவற்றில், ஷாகின் பால்கன், போனெல்லிஸ் ஈகிள், லாகர் பால்கன், கொம்பன் ஆந்தை போன்ற பல அரிதான பறவைகள் குறிப்பிடத்தக்கவை. இங்கேயே தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் மட்டுமல்லாமல், பல பறவைகள் இங்கு வலசை வந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.

அரிய பறவைகள் மட்டுமல்லாமல், அரிய வகை தாவரங்கள், பல புராதன சின்னங்களை உள்ளடக்கிய இப்பகுதியை அரசு பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நம்முடைய இயற்கை வளங்களையும், வரலாற்றுச் சிறப்புகளையும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்துக் கொண்டு செல்ல இதுபோன்ற கிராமங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்'' என்கிறார் கண் மருத்துவரும், பறவைகள் ஆர்வலருமான டாக்டர் பத்ரி நாராயணன்.

மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியர் கூறுகையில்:

அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனிவரும் காலங்களில் அங்கு பறவைகள், வன உயிரினங்களை வேட்டையாட அனுமதிக்கப்படாது. அதேபோல, அங்குள்ள பாறைகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது. அதேநேரத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இயற்கை வளத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் அங்கு அனுமதிக்கப்படாதுஎன்றார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்ற அடிப்படையிலும், அரிட்டாபட்டியின் காலப் பழைமையையும், சாலப் பெருமைகளையும் வெளி உலகம் அறிந்திடச் செய்ய சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் அவசியமானது. எனினும், அவை இயற்கை வளத்தை அழிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT