தினமணி கொண்டாட்டம்

'பிள்ளைவாள் வாங்கோ...'

28th Aug 2022 06:00 AM | ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

இசை உலகில் மிகப் பெரிய சாதனை புரிந்த கலைஞர்களது பெயர்களைப் பட்டியலிட்டால் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் பெயர்தான் முதலில் இடம் பெறும். இவரின் மிக உயர்வான இசையை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. இவரின் இசைக்கு மயங்காதவர்களே கிடையாது.

1955-ஆம் ஆண்டில் இவருக்கு குடியரசுத் தலைவரின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது. அப்பொழுது புதுதில்லியில்  பத்திரிகையாளர் ஒருவர் டி.என்.ஆர். பிள்ளையை அணுகி, ""இது உங்களுக்கு மகிழ்ச்சியான தருணம்தானே'' என்று கேட்டார். சிரித்துக்கொண்டே பிள்ளை, ""ஆமாம், இது எனக்கு மிகவும் பெருமைப்படும் நல்ல விஷயம்தான். ஆனால், இதைவிடப் பெரிய விருதாக நான் ஒன்றைக் கருதுகிறேன்'' என்று சொல்லி, ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்!

""ஒருமுறை நான் திருமண ஊர்வலம் ஒன்றில் தோடி ராகம் வாசித்துக் கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் ஒரு சங்கதி அசாத்யமாக வந்து விழுந்தது. அருகில் பெட்ரோமாஸ் விளக்கை தலையில் சுமந்துகொண்டிருந்த நரிக்குறவர் தன்னை மறந்து "சபாஷ்' என்றார். அதுதான் நான் பெற்ற மிகப் பெரிய விருது எனக் கருதுகிறேன்'' என்றார்.

ADVERTISEMENT

""இசை பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவரின் மனதில் என்னுடைய இசை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதுதான் எனது பெரிய வெற்றி'' என்று ராஜரத்தினம் பிள்ளை கூறியது எவ்வளவு ஆழமான உண்மை. 

இதைப் பற்றி கேள்விப்பட்ட இயக்குநர் கே. பாலசந்தர் தான் இயக்கிய "சிந்து பைரவி' திரைப்படத்தில் அதன் ஹீரோ கடற்கரையில் அமர்ந்து பாடுவது போலவும், அந்த இசையில் மயங்கிய மீனவர் தன்னிடம் இருந்த சங்கு மாலையை கொண்டுவந்து அவரிடம் கொடுத்துப் பாராட்டுவது போன்ற காட்சி ஒன்றை அமைத்திருந்தார்.

1898-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம்  தேதி (ஆவணி 10) அதிகாலை சிம்ம லக்கனத்தில் பிறந்த இசைச்சிங்கம் ராஜரத்தினம். தாயார் கோவிந்தம்மாள், தந்தை குப்புசாமி பிள்ளை.  பெற்றோர் வைத்த பெயர் பாலசுப்பிரமணியம். திருமருகல் நடேசப்பிள்ளை என்னும் நாதஸ்வர வித்வானின் சகோதரிதான் கோவிந்தம்மாள். தங்கள் குழந்தை பாலசுப்பிரமணியத்தை திருமருகல் நடேசப் பிள்ளைக்கு தத்து கொடுத்துவிட்டனர். அவர் சூட்டிய பெயர் ராஜரத்தினம்.

பெயருக்கு ஏற்றாற்போல் இசை உலகில் ஒரு ராஜாவாகத் திகழ்ந்தவர் ராஜரத்தினம் பிள்ளை. நாதஸ்வரம் வாசிக்கும்போது "விரலடி ப்ருகா கார்வை கமகம்' என்னும் நான்கு விதமாக வாசிப்பதுண்டு. நாதஸ்வரத்தில் கமகம் வாசிப்பது சற்று கடினம். ஆனால், கமகம் வாசித்தால்தான் ராக ஆலாபனம் எடுபடும். திருவாவடுதுறையார் நாதஸ்வரத்தை வாசிக்கும்போது இந்த நான்கு வகை சங்கதிகளும் மாறிமாறி மழையெனப் பொழிவார். ஒரு நாள் இரவு முழுவதும் தோடி ராகம் வாசித்தார் என்பது திருவிடைமருதூர் வாசிகளுக்குத் தெரியும்.
இவர் தனது தாய் மாமா திருமருகல் நடேசப் பிள்ளையிடம் தான் நாதஸ்வரம் கற்றுக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும், இவர் ஒரு பிறவி மேதை என்பதுதான் உண்மை.
குற்றால அருவி போல் தடதடவென சங்கதிகள் வந்து விழும் அழகு ஈடு இணையற்றது. வாசஸ்பதி, ஷண்முகப்ரியா, கேதார கௌளை, காம்போதி போன்ற பல்வேறு ராகங்களை இவர் வெகு விரிவாக வாசித்திருந்தாலும், "தோடி ராஜரத்தினம் பிள்ளை‘ என்றே இவரை அனைவரும் அழைத்தனர்.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது புதுதில்லியில் இவரின் நாதஸ்வர இசை இடம் பெற்றது என்பது வரலாற்றில் இடம்பெற வேண்டிய முக்கியமான செய்தி. திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து கட்டளைத் தம்பிரானுடன் புதுதில்லிக்கு சென்றார் திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை. 1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு 12 மணி ஆனதும் தேதி 15 ஆகும். அப்பொழுது சுதந்திரம் அறிவிக்கப்
படும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தது. மவுண்ட்பேட்டன் அதற்கான பிரகடனத்தை வாசித்தார்.
மூதறிஞர் ராஜாஜி திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் மங்கலகரமான நாதஸ்வர இசையுடன் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து தங்க முலாம் பூசிய வெள்ளிக் கவசம் கொண்ட செங்கோல், சுவாமி பிரசாதம் ஆகியவை பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
சுதந்திர வரலாற்றில் நாதஸ்வரத்துக்கும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளைக்கும் தொடர்பு உண்டு என்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா?  ஏனோ தெரியவில்லை, பள்ளிக்கூட பாட புத்தகங்கள் எதிலுமே இந்தத் தகவல் இடம்பெறவில்லை.
நாதஸ்வரம், தவில் வாசிக்கும் கலைஞர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தியவர் ராஜரத்தினம் பிள்ளை. இந்த இசைக் கலைஞர்களை ஏக வசனத்தில் "வாடா.. போடா' என்று அழைத்துக் கொண்டிருந்தனர். டி.என். ராஜரத்தினம் பிள்ளை என்னும் ரோஷக்காரரின் வருகைக்குப் பிறகு "பிள்ளைவாள் வாங்கோ' என்று அனைவரும் அழைக்கத் துவங்கினர்.
ஒருமுறை திருச்செந்தூரில் ஆவணி உத்ஸவத்தின் ஏழாம் நாள் திருவிழாவில் திருவாவடுதுறையார் வாசித்துக் கொண்டிருந்தார். முருகப் பெருமானின் அழகான அலங்காரத்தை ரசித்தபடியே கந்தர்வ கானம்போல் நாதஸ்வரத்தில் இசை மழை பொழிந்தவர், திடீர் என வாசிப்பை நிறுத்திவிட்டு அருகில் இருந்தவரிடம் தன் கையில் இருந்த நாதஸ்வரத்தைக் கொடுத்துவிட்டு அருகில் சென்று முருகனின் திருமுக மண்டலத்தை கண்டு மகிழ்ந்தார். தனது கழுத்தில் அணிந்திருந்த விலை உயர்ந்த நவரத்தினம் பதித்த தங்கச் சங்கிலியை முருகனுக்கு அணிவிக்குமாறு கழற்றி கொடுத்துவிட்டார்.
ராஜரத்தினம் பிள்ளைக்கு நகைச்சுவை உணர்வு சற்று அதிகம். ஒரு ஜமீன்தார் வீட்டு கல்யாணத்தில் நீண்ட நேரம் தோடி ராகம் வாசித்து முடித்தார். அப்பொழுது அந்த ஜமீன்தார் அருகில் வந்து, ""நீங்க தோடி ராகம் நல்லா வாசிப்பீங்க என்று கேள்விப்பட்டிருக்கேன். அதை கொஞ்ச நேரம் வாசியுங்களேன்'' என்றாராம்.  
ஒரு  மணி நேரம் தோடி ராகம் வாசித்து முடித்ததும், ""அது என்ன ராகம்'' என்றுகூட தெரியாமல் தன்னிடம் வந்து இப்படி பேசியது பிள்ளைவாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே பின்னால் திரும்பி ஜால்ரா வாசித்துக் கொண்டிருந்த பையனை "பளார்' என்று கன்னத்தில் அறை விட்டார். 
""கிளம்பும்போது தோடி ராகம் வாசிக்கிற நாதஸ்வரத்தை எடுத்து வை என்று சொன்னேனே ஏன்டா மறந்த...'' என்றார். 
அதற்கு அந்த ஜமீன்தார், ""பாவம்ங்க அந்த தம்பியை அடிக்காதீங்க. அடுத்தமுறை வரும்போது பாத்துக்கலாம்ங்க'' என்று கூறிவிட்டார். அடி வாங்கிய அந்தச் சிறுவன் அழுவதா, சிரிப்பதா என்று புரியாமல் திகைத்துவிட்டானாம்.
பிள்ளைக்கு மேடை நாடக நடிகரும், பாடகருமான எஸ்.ஜி. கிட்டப்பா நல்ல நண்பர். அவரின் நட்பு காரணமாக,  "கவி காளமேகம்' என்னும் திரைப்படத்தில் காளமேகப் புலவராக ராஜரத்தினம் பிள்ளை நடித்துள்ளார். அதில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். அந்த படம் பாட்டுக்காகவே ஓடியது. அதில் கரஹரப்ரியா ராகத்தில் டி.என்.ஆர். பாடியுள்ள பாடல்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.
நாதஸ்வரம் இசைப்பது மட்டுமல்லாமல் வாய்பாட்டு பாடுவதிலும் இவர் வல்லவர். திருச்சி வானொலியில் டி.என்.ஆர். பாடிய வாய்பாட்டு கச்சேரி ஒலிப்பதிவு பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. அந்த இசை வினிகையில் திருக்கோகர்ணம் உலகநாதன் பிள்ளை வயலினும், தஞ்சாவூர் டி.கே. மூர்த்தி மிருதங்கமும் வாசித்துள்ளனர்.
பிள்ளைவாள் இறுதிக்காலத்தை சென்னையில் கழிக்க விரும்பினார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் பிரபல இயக்குநர் கே. சுப்பிரமணியம் (பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை). அடையாறில் ஜாகை (தங்குமிடம்) ஏற்பாடு செய்து அவரை சென்னைவாசி ஆக்கியவர் கே. சுப்பிரமணியம்.
திருவாவடுதுறையில் இவர் வாழ்ந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அவ்வூர் மக்கள் இவருக்கு சிலை வைப்பதற்காக ஒரு மண்டபத்தை கட்டினார்கள். ஆனால் சிலை நிறுவப்படவில்லை.
அக்காலத்தில் தங்கள் இல்லத் திருமணத்தில் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார்களாம். மற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் திருமண விழாவில் வாசிக்க நூறு ரூபாய் வாங்கிய காலத்திலேயே இவர், ""பத்தாயிரம் கொடுத்தால்தான் வாசிப்பேன்'' என்பாராம். அதற்கும் பலர் தயாராக இருந்தனர். மாப்பிள்ளை அழைப்பின்பொழுது இவர் நடந்து வர மாட்டார்.  திறந்த வண்டியில் ஜமுக்காளம் விரித்து அதில் அமர்ந்துகொண்டுதான் இவர் வாசிப்பார். அந்தக் காலத்து நாதஸ்வரக் கலைஞர்கள் குடுமி வைத்திருப்பார்கள். சட்டை அணியாமல் இடுப்பில் ஒரு துணியை கட்டிக் கொண்டிருப்பார்கள். முதன் முதலில் கிராப் வெட்டிக்கொண்டு, சல்வார், சில்க் ஜிப்பா போன்ற தடபுடலான உடையுடன் காலில் கட் ஷூ அணிந்துகொண்டு கம்பீரமாக காட்சி அளித்தவர் திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை.
இவர் வீட்டு வாசலில் பல செல்வந்தர்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் வாசிக்க வேண்டும் எனக் கேட்டு வரும்போது இவரின் வசதிக்காக தங்கள் வீட்டு கல்யாண தேதியை மாற்றிக் கொள்வார்களாம்.  வரும்போதே ஐந்து அல்லது பத்து முகூர்த்தத் தேதியுடன் வருவார்கள். அதில் எந்தத் தேதியில் பிள்ளைவாள் வாசிக்க ஒப்புக்கொள்கிறாரோ அன்றைக்குத்தான் கல்யாணம்.
ரஷிய நாட்டு அதிபர் சென்னைக்கு வந்தபோது அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு அரசு சார்பில் அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் 100 நாதஸ்வரம், 100 தவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருவாவடுதுறையார் தலைமையில் திருவெண்காடு சுப்பிரமணியம் பிள்ளை, 
திருவிடைமருதூர் வீருசாமிப் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், கக்காயி நடராஜப் பிள்ளை உட்பட பல பிரபல நாதஸ்வர, தவில் வித்வான்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம்.
இந்த மாமேதை தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை சென்னை அடையாறில் கழித்தார். 12.12.1956-இல் இவர் இயற்கை எய்தினார். அடையாறில் உள்ள ஏதேனும் ஒரு சாலைக்கு டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் பெயரை சூட்ட வேண்டும் என்பது இசை விரும்பிகளின் நீண்ட கால ஆசை.

ADVERTISEMENT
ADVERTISEMENT