தினமணி கொண்டாட்டம்

வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயம்!

ஜி. அசோக்


"நிசப்தம்', "அவள்', "காளி', "நெற்றிக்கண்', "தேன்', வெப் சீரிஸ் "பேப்பர் ராக்கெட்' என தேர்ந்த படங்களால் எக்கச்சக்க பெயர் பெற்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர். சினிமா வாசனையே இல்லாத குடும்பத்திலிருந்து முளைத்து வந்தவர். தணியாத தாகம், தளராத வேகம் என தனக்கான சினிமாவைக் கற்று உயரம் தொட்டிருக்கிறார். ""வாழ்க்கையின் நீட்சிதான் சினிமா. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொரு நாளும் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனக்கும் சினிமாதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் சினிமா. வாழ்வியலுக்கு நெருக்கமாக இருந்து வருகிற ரியல் சினிமாதான் எனக்கு ரொம்பவும் விருப்பம்....'' - முகத்தில் சந்தோஷ ரேகை படர பேசுகிறார்.

ஒரு படத்துக்கு முதல் ரசிகன் அந்த படத்தின் படத்தொகுப்பாளர்தான்.... அந்த சுவாரஸ்ய அனுபவம் எப்படியிருக்கும்....

தொழில்நுட்பம் சார்ந்த இலக்கியம் என்றும் சொல்லலாம். பலவிதமான வாழ்க்கைகளை வாழ்ந்து பார்ப்பதற்கான இடமாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன். உலகின் அனைத்து சினிமாவிலும் நிறம், உடை, கலாசாரம், இடம் மாறியியிருக்கிறது. ஆனால் உணர்வுகள் மாறவேயில்லை. அதுதான் படத்தொகுப்பில் உள்ள சுவாரஸ்யமும். இயக்குநரின் கற்பனையை, திரைக்கதையின் காட்சி அடுக்குகளாக மாற்றுவதுதான் ஒரு சினிமாவின் ஆக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதி. அதனால் படத்தொகுப்பு வேலை என்பது அவ்வளவு பிடிக்கும். வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயம். அது இங்கே அப்படியே பொருந்தி வரும். சம்பளம், அன்றாட, சமூகத் தேவைகள் என்பதைத் தாண்டி வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் அதிர்ஷ்டம்.

டி.எஸ். சுரேஷ்தான் எனக்கு படத்தொகுப்பை கற்றுத் தந்தவர். அவ்வளவு சுதந்திரம் தந்தார். அதன் பின் ஸ்ரீகர் பிரசாத் சார் என் வாழ்க்கையில் முக்கியமான நபர். நிறைய பயிற்சிகள் தந்து என்னை வார்த்தார். அவர்தான் அவள் பட வாய்ப்பையும் பெற்று தந்தார். சந்தோஷ் சிவன் சாரிடம் இனம் எடிட்டர் அசியேட்டாக வேலை பார்த்தேன். அந்த அனுபவம் அற்புதமானது. என்னை ஊக்கப்படுத்தினார். பெரிய மனசு அவருக்கு. படத்தொகுப்பில் மட்டும்தான் மிகை என்பதே இல்லை. ஒரு காட்சி பிடிக்கவில்லை என்றால் அதே மாதிரி வேறு காட்சியை திட்டமிடலாம். ஒரு வகையில் அதில் சுவாரஸ்யம் குறைவு. படத்தொகுப்பு அப்படியல்ல. ஒரு காட்சியை இன்னொரு காட்சியுடன் சேர்ப்பது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. அது கை சேர்ந்தால் அது நல்ல படத்தொகுப்பு.

படம் விறு விறுப்பாக இருந்தால், அது நல்ல எடிட்டிங் என்பது போன்ற ஒரு பேச்சு இருக்கே....

திரைக்கதைதான் முதல் சுவாரஸ்யம். அதை காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை வருட பயணம், இத்தனை படங்கள் என பயணித்து வந்த போதிலும், சினிமாவின் சூட்சுமம் புரியவில்லை. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கூட படத்தொகுப்பில் மாற்றங்களை கொண்டு வரலாம். கதையின் தன்மை பொருத்தே எடிட்டிங் என்பது அமையும். சில நேரங்களில் அது வெவ்வேறு கோணங்களில் வெளிப்பட்டு விடும். கதையின் இலக்கை எடிட்டிங் கொண்டு சேர்த்ததா என்பது மிக முக்கியம். கதையின் தன்மை குறித்து இயக்குநருக்கு ஒரு பார்வை இருக்கும். சில இயக்குநர்கள் விரிவாக எடுத்து வருவார்கள். சிலர் இது போதும், இதுதான்... என நம்பிக்கையாக வருவார்கள். இந்த இரண்டு பேருக்கும் சேர்த்து எடிட்டர் யோசிக்க வேண்டும். கதையை அதன் போக்கில் அணுகி கருச்சிதையாமல் சொல்லுவதுதான் எடிட்டிங். 2 மணி நேர சினிமா என்பது நீங்கள் பார்ப்பது. அது எங்களிடம் வரும் போது குறைந்தது 4 மணி நேர சினிமாவாக இருக்கும். இந்த இரண்டு மணி நேரம்தான் ஒரு எடிட்டருக்கு சவால். அதை உங்களுக்கு புரிவது மாதிரி தந்தால் அதுதான் நல்ல எடிட்டிங்.

தமிழ் சினிமாவிலிருக்கும் மிகை குறித்து அடிக்கடி விவாதங்கள் நடப்பதுண்டு...

அந்த மிகை தரும் சுவாரஸ்யம்தான் கமர்ஷியல் சினிமாவின் அடிப்படை. தொழில்நுட்பம் தருகிற வசதிகள் நம் கட்டுக்குள் இருக்க வேண்டும். "அவதார்', " அபோகலிப்டா' மாதிரி ஒரு வாழ்க்கை இங்கே இல்லை. அது இயக்குநரின் கற்பனை. அந்த கற்பனைக்குத்தான் இங்கே காசு. சினிமாவில் வண்ணம் என்கிற தொழில்நுட்பம் வந்த போது, நடிகர்கள் கலர் கலராக ஆடைகள் அணிந்து வந்தது மாதிரிதான் இதுவும். இதில் விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கும். விதிவிலக்குகளும் இருக்கும். இருந்தாலும், இதை சினிமா என்ற கோணத்தில் அணுக வேண்டும். தமிழ் கலாசாரம் என்பது உலகம் முழுக்க பாராட்டக்கூடியதாக இருக்கிறது. சர்வதேசத் தரத்தில் இலக்கியங்கள் தமிழில் இருக்கிறது. அதுபோல் உலக தரத்தில் படங்களும் உருவாக வேண்டும்.

அடுத்தடுத்த பயணங்கள்....

அமேசானுக்காக த வில்லேஜ் வெப் சீரிஸ் வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன. ராவணக் கோட்டம் உள்ளிட்ட படங்கள் காத்திருக்கின்றன. அடுத்த வருகிற படங்கள் என் பயணத்தின் உச்சமாக இருக்கும். சாப்பாடு இல்லாமல், தண்ணீரை மட்டும் குடித்து விட்டு, படுத்துத் தூங்கினால்தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதுவும் கிடையாது. இந்தத் தொழிலுக்கு நம்மைத் தயார்ப்படுத்துகிற நேர்த்திதான் வேண்டும். அதில் குறை இருந்தால், உங்களை யாரும் உயரத்துக்குக் கொண்டு போய் வைக்க முடியாது. நல்ல வாழ்க்கை. நியாயமாக இருந்தால், அதற்கான தகுதியை நீங்கள் பெற்றிருந்தால், உங்களுக்கான இடம் எந்த வகையிலும் நிச்சயம். அதற்கு உதாரணம் நான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT