தினமணி கொண்டாட்டம்

தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி!

14th Aug 2022 06:00 AM | கே.நடராஜன்

ADVERTISEMENT

 

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி தயாரானது வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகரில்தான்!

1932 முதல் 10 ஆண்டுகள் குடியாத்தம் நகர்மன்றத் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பிச்சனூர் கோட்டா ஆர்.வெங்கடாசல செட்டியார். பதவிக் காலத்துக்குப் பிறகு , "சௌத் இந்தியா சில்க் மில்' என்ற நூற்பாலையைத் தொடங்கி அதன் மேலாண் இயக்குநராக இருந்தார். பின்னர், " இந்துஸ்தான் பேப்ரிக்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதில் தென்னிந்தியாவிலேயே முதலாவதாக ஸ்கிரீன் பிரிண்டிங் மூலம் பட்டுத் துணியில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் டிசைன்களை  பிரிண்ட் செய்து விற்பனைக்கு அனுப்பினார். 

இக்காலக் கட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திர நாளன்று நாடு முழுவதும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்பதால் நிறைய எண்ணிக்கையிலான கொடிகள் தேவைப்பட்டன. அதற்காக கொடிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை குடியாத்தம் வெங்கடாசல செட்டியாருக்கு அகமதாபாதில் இருந்த தொழில்வழி நண்பரான ஜசானி தெரிவித்தார். தேசியக் கொடியை உற்பத்தி செய்ய மனமகிழ்ச்சியுடன் முன்வந்தார் வெங்கடாசல செட்டியார். அவர் தயாரித்து அனுப்பிய கொடி தில்லி செங்கோட்டையில் ஏற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து,  சுதந்திர தினத்தன்று ஏற்ற ஒரு மில்லியன் கொடியை தயாரித்து அனுப்புமாறு வெங்கடாசலத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் குடியாத்தம் வந்து இந்துஸ்தான் பேப்ரிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

மிகவும் குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் கொடியை எப்படி தயாரிக்க முடியும் என வெங்கடாசலம் எண்ணிய வேளையில், சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த குடியாத்தம் நகர மக்களும், நண்பர்களும், ஊழியர்களைப்போல் இரவு, பகல் பாராமல் அங்கேயே உண்டு, உறங்கி, உழைத்து கொடிகளைத் தயாரித்து அஞ்சல்துறை மூலம், ரயிலில் நாடு முழுவதும் அனுப்ப உதவியுள்ளனர்.

இதற்காக அஞ்சல் துறையினர், இரவு நேரங்களிலும் நிறுவனத்தில் காத்திருந்து தேசியக் கொடிகளை அனுப்ப ஒத்துழைத்தனர்.  இவர் தயாரித்து அனுப்பிய கொடிகளைப் பாராட்டி 12.8.1947 அன்று ஜவஹர்லால் நேரு, வெங்கடாசலத்துக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

30.1.1948- இல் மகாத்மா காந்தி உயிரிழந்தபோது, அவரது உருவம் பொறித்த 10 லட்சம் கொடிகளை தயாரித்து நாடு முழுவதும் அனுப்பி வைக்குமாறு இதே 
நிறுவனத்துக்கு ஜவஹர்லால் நேரு ஆர்டர் வழங்கினாராம். 

தேசியக் கொடியையும், மகாத்மா காந்தி மறைவின்போது, அவரது உருவம் பொறித்த கொடியையும் தயாரித்து அனுப்பியதற்காக, மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி, அவரது மகன் தேவதாஸ் காந்தி இருவரும்குடியாத்தம் வந்து வெங்கடாசல செட்டியாரை பாராட்டி விட்டுச் சென்றார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT