தினமணி கொண்டாட்டம்

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

14th Aug 2022 06:00 AM | பேராசிரியர் தி. இராசகோபாலன்

ADVERTISEMENT

 

கலியுகத்தில் சில அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாண்டுச் சுதந்திர தின விழாவில் "தகைசால் தமிழர் விருது' பெரியவர் இரா. நல்லகண்ணுவுக்கு வழங்கப்படுவதே அந்த அதிசய நற்செய்தி!

"கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்தது' என மகாகவி பாரதி எந்த உயர்ந்த அர்த்தத்தில் உச்சரித்தானோ, அதே உயர்ந்த அர்த்தத்தில் உச்சரிக்கப்பட வேண்டிய முழக்கம், நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும் என்பதாகும்.
ஸ்ரீவைகுண்டத்தில் 26.12.1925-இல் பிறந்தவர் இரா. நல்லகண்ணு. நம்மாழ்வார் பாசுரங்களில் நல்லகண்ணுவுக்கு மிகுந்த பயிற்சி உண்டு. பொதுவுடமை இயக்கத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிற புனிதர்.

எஸ்டேட் சொந்தக்காரராகிய புபேஷ் குப்தா, குடும்பச் சொத்தைக் கட்சிக்கு எழுதி வைத்தவர். ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கோவிந்தப்பிள்ளை போன்ற பல கேரளக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் குடும்ப சொத்துகளைக் கட்சிக்குத் தந்திருக்கிறார்கள். தமது எண்பதாவது வயதில் வழங்கப்பட்ட ரூ.1 கோடியையும், காரையும் பாலன் இல்லத்துக்கே வழங்கிவிட்டு, இன்றைக்கும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்பவர்கள் கடலை மிட்டாயைத் தவிர வேறு எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார். 9 ஆண்டுக் கால சிறைவாசத்தில் அவருக்குக் கிடைத்தது அது ஒன்றே!

ADVERTISEMENT

காரனேஷன் பள்ளியில் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த நல்லகண்ணு , திருநெல்வேலியிலுள்ள எம்.டி.டி. இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்கிறார். அங்கு வ.வே.சு. அய்யர், வ.உ.சி. போன்றோர்களின் வீரகர்ஜனைகளை கேட்டு ஆவேசம் அடைகிறார். பகத்சிங் பற்றி வரும் பத்திரிகைகள் அக்கல்லூரியில் தடைசெய்யப்படுகின்றன. இவற்றால் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு, ஸ்ரீவைகுண்டம் விரைகிறார்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை முன்னிட்டு மேற்கொண்ட பாத யாத்திரையைப் பார்வையிடுகிறார். யாத்திரையின்போது எஸ். சத்தியமூர்த்தி, முத்துராமலிங்கத்தேவர் போன்றோர் எழும்பும் கனல் மொழிகளைச் செவிமடுக்கிறார். மாணவர் நல்லகண்ணு தனது நண்பர்களோடு, யாத்திரையின் பக்கத்திலேயே வந்தே மாதரம் எனும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே நடந்தனர்.

இரண்டாவது உலகப்போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, உரியவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்க "உணவுக்குழு' அரசால் அமைக்கப்பட்டது. இளைஞர் நல்லகண்ணு அக்குழுவில் சேர்ந்தார். தெருத்தெருவாகச் சென்று பொருள்களை விநியோகிக்கும் பணியிலிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞனை ஊரிலுள்ள நிலக்கிழார்கள் அந்த மாணவனை மட்டும் தெருவுக்குள் அனுமதிக்க மறுத்தனர். இக்கொடுமைக்கு ஒரு தீர்வு காணத்துடித்தார் நல்லகண்ணு ( ஆர்.என்.கே.).

அந்த நேரத்தில் மே தின விழா நாங்குநேரியில் நிகழவிருந்தது. புகழ்பெற்ற பாடகர் பிச்சைகுட்டி அதில் பேசிப்பாடி முழங்க இருந்தார். அதனைப் பயன்படுத்தி, நல்லகண்ணு பட்டியலினத்தைச் சேர்ந்த பல இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு ஊர்வலமாக நாங்குநேரி தெருக்களில் நுழைந்தார். ஆனால் ஊர்ப்பொது மக்கள் அவர்களைத் தெருக்களில் அனுமதிக்க மறுத்தனர். என்றாலும் நல்லகண்ணு தடையை உடைத்துக்கொண்டு, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டார். அவர்கள் திரும்பி வரும் வழியில் காத்திருந்த ஊர்ப்பொதுமக்கள் தாக்கி, நீதிமன்றத்திலும் நிறுத்தினர். அப்பொழுது நல்லகண்ணு எடுத்துரைத்த அழுத்தமான வாதங்களைக் கேட்டு, நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்கினார். அன்று முதல் அவரால் தெருக்களில் மட்டுமன்றி, கோயில்களிலும் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

சோவியத் நாட்டில் நிகழ்ந்த "அக்டோபர் புரட்சி' இந்திய மார்க்சீயவாதிகளிடம் ஓர் உத்தேவகத்தை உருவாக்கியது. அதனால் கான்பூரில் கூடிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, இந்திய விடுதலைக்குப் பூரண ஒத்துழைப்பைத் தருவது எனத் தீர்மானித்தது. அந்த உணர்வு ஆர்.என்.கே.வுக்கும் இருந்ததால், அவ்வியக்கத்தில் 1944 -ஆம் ஆண்டு தம்மையும் இணைத்துக் கொண்டார்.

நல்லகண்ணுவுக்கு மகாகவி பாரதியின் பாடல்களிலும், அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் எழுத்துகளிலும், தோழர் ஜீவாவின் மேடை முழக்கங்களிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் அவரே ஒரு கவிஞராகவும் திகழ்கிறார். தோழர் ஜீவா அமரத்துவம் அடைந்தபோது அவர் எழுதிய இரங்கற்பா:

"குற்றாலம் அருவியிலே ஜீவா - நீ
குளித்து நிற்கையிலே
வற்றாத தமிழ்க் கடலும்
வந்து நிற்குதென்பேன்
வற்றாத தமிழ்க்கடலும்
வறண்ட விறகாகி
பற்றி எரியக் கண்டேன்
பார்த்த மனம் பதறுதையா'
இதைப் படித்தோரின் கண்களில் நீர்வடிந்தது.

பொதுவுடமைவாதியாக நல்லகண்ணு இருந்தபோதும், வன்முறையைக் கடைபிடித்தது இல்லை; அதனை ஆதரித்ததும் இல்லை. மேலும், "அஹிம்சை ஓர் உலகச் செல்வம்' எனவும் முரசறைந்தார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை அகற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில், 1937- ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் தேர்தலில் போட்டியிட்டபோது, இரவு பகலாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

1938- இல் ஆலைத் தொழிலாளர்கள் கடுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் துயரைத் துடைப்பதற்கு ஆர்.என்.கே.யும், ஜீவாவும் தெருத்தெருவாகச் சென்று ஆலைத் தொழிலாளர்களுக்காக அரிசியைச் சேகரித்தனர்.

நொச்சிக்குளம் எனும் ஊரில் விவசாயிகளுக்கும் - மிராசுதார்களுக்கும் ஓயாத போராட்டம். விவசாயிகளின் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். வீடுகளில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டன. விவசாயிகளுக்காக 7 நாள்கள் உண்ணாவிரதத்தில் அமர்ந்த நல்லகண்ணு, இரு தரப்பினருக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் உறவுப்பாலம் கட்டினார்.

இடையிலே பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த சில தலைவர்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வன்முறைகளில் இறங்கினர். அரசும், கம்யூனிஸ்ட் கட்சியை 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 20 வரை தடை செய்திருந்தது. நல்லகண்ணுவும் தலைமறைவானார்.

நெல்லைச் சதி வழக்கில் தலைமறைவான அவர் பிடிபட்டபொழுது பட்ட துயரங்கள், அல்லல்கள், சித்ரவதைகள் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டன. புலியூர்குறிச்சி என்ற கிராமத்தில் இரவு 11.00 மணிக்குக் குற்றவாளியாகக் கைது செய்யப்படுகிறார். நல்லகண்ணுவின் இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கட்டி அடிக்கின்றனர். மறுநாள் இரவுவரை கட்டுகளை அவிழ்க்கவே இல்லை. இரவு 2 மணிக்குத் தோழரை மலையடிவாரத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.

காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியோ "உன்னுடன் சேர்ந்து சதி செய்தவர்களை இந்த மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிட்டோம். உன்னையும் அதுபோல் உருட்டிவிட்டுக் கொல்லப் போகிறோம்' என்று அதட்டியிருக்கிறார். அப்போதும் நல்லகண்ணு மலையைப் போல் நிலைகுலையாது நின்றிருக்கிறார். அந்த வீராதி வீரர் துணிச்சலைக் கண்டு ஆத்திரமடைந்த அந்தக் காவல்துறை அதிகாரி, தாம் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டால் தோழரின் கன்னத்திலும் உதட்டிலும் சுட்டு, தனது வெறியைத் தணித்துக் கொண்டிருக்கிறார்.

நல்லகண்ணு ஒன்பதாண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால் ஒருபொழுதும் ஒரு பதவியிலும் ஒரு நாளும் இருந்ததில்லை.

தாமிரவருணி தண்ணீர் குடித்தவர்களிடம் தமிழ் தாலாட்டுப் பாடி நிற்கும். இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை புதுமைப்பித்தன் கதைகளைப் படித்தவர்கள் அறிவார்கள்;

அம்பாசமுத்திரத்தில் உள்ள பாபநாசம் அணைக்கு அருகில் சுமார் 10-க்கு 15 கல் தொலைவில் உற்பத்தியாகிறது கடனா நதி! இந்த நதியின் மீது ஓர் அணை கட்ட வேண்டும் என்று நல்லகண்ணு தலைமையில் பத்து நாள்களுக்கு ஓர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதன்பேரிலேயே 1966- ஆம் ஆண்டு அணைக்கட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அணையும் உருவானது.

"தினம்தோறும் தாமிரவருணியில் குளிப்பது என்பது என் இயல்பான வாழ்க்கை. என் வீட்டுக்கும் தாமிரவருணி ஆற்றுக்கும் 200 அடிதான் இருக்கும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் இரவில் சத்தம் எனக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட நதிக்கான சோதனையை (மணல் திருட்டு) நினைக்கும்போது நெஞ்சம் வெடித்துவிடும்' என்பது நல்லகண்ணு தரும் வாக்குமூலம்.

மணல் திருட்டை எதிர்த்து நல்லகண்ணு தொடங்கிய போராட்டத்தால், 2009- ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்த தேதியிலிருந்து, ஆறு மாதத்துக்குள் 54,417 யூனிட் மணல் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறது. ஆனா அந்த அளவை மீறி ஒரு நாளுக்கு 4000 முதல் 5000 மணல் யூனிட் அள்ளப்படுகிறது. தினசரி 100 முதல் 150 லாரிகள் இரவு பகல் பாராமல் மணல் அள்ளுகின்றன. இதனால் பாலங்களும் பழுதடைகின்றன என்பன போன்ற வாதங்களை நீதியரசர்கள் ஜோதிமணி, எஸ். நாகமுத்து ஆகியோரின் அமர்வில் அடுக்குகிறார் நல்லகண்ணு.

"பொன் திணித்த புனல் பெருகும் பொருநை நதி' எனக் கம்பரால் வருணிக்கப்பட்ட நதி புண்ணாவதைக் கேட்டு, நீதியரசர்களும் மனம் உருகி தீர்ப்பு வழங்கினர். அந்தத் தீர்ப்பை வாசித்து முடித்த நீதியரசர் ஜோதிமணி, "குறிப்பிட்ட மாமனிதர் நல்லகண்ணுவின் வாதத்தைக் கேட்டுத்தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். இல்லையென்றால், இந்த முடிவை நாங்கள் எட்டியிருக்க முடியாது. நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது வீட்டு வேலையாக அமைகிறது. ஆனால் இந்த மனிதருக்கு எந்த நேரத்திலும் பொதுமக்களைப் பற்றிய சிந்தனைகளும், அவர்களுக்காக உழைப்பதையும் தவிர வேறு வேலைகளே இல்லை எனச் சொல்லலாம்' என கூறினர்.

நல்லகண்ணுவின் பொதுவாழ்வு படிகாரத்தைப் போல் பரிசுத்தமானது. ஒருமுறை அவருடைய மகள் மூன்று நாள்கள் கட்சி அலுவலகத்திலேயே உண்டு தங்க வேண்டியதாயிற்று. பின்னர் மகள் புறப்பட்டபோது, மூன்று நாள்கள் உணவுக்கான நூற்றுப் பத்து ரூபாயை வசூலித்துக் கட்சி அலுவலகத்தில் கட்டிவிடுகிறார்.

அவரைப் பற்றி ஒரு மலருக்குக் கட்டுரை எழுதிய நடிப்பிசை நாயகி மனோரமா, "ஐயாவுக்கு ஒரு மாதத்திய செலவே 1200 ரூபாய்தான்'எனக் குறிப்பிடுகின்றார்.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான பென்ஷனை நல்லகண்ணுவுக்கு வழங்க அரசு முன்வந்தபோது, "நான் என் நாட்டுக்கான கடமையைச் செய்தேன். அதற்காக எனக்கு அரசு ஓய்வூதியம் வழங்குவது நியாயமில்லை' என மறுத்துவிட்டார்.

2007- ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துக்குரிய வீடு ஒன்றை (சி.ஐ.டி. நகரிலுள்ளது) வாடகையின்றி வசிப்பதற்கு முதல்வரே வழங்க முன்வந்தபோது, "வாடகை செலுத்தித்தான் வசிப்பேன்' எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அவர் அந்த வீட்டில் வசித்த காலத்தில் ஏற்பட்ட பழுதுகளை எல்லாம் தம் செலவிலேயே செய்து கொண்டார்.

பின்னர் சி.ஐ.டி. நகரிலுள்ள அத்தனை வீடுகளும் பழுதுபடவே அரசும் நீதிமன்றமும் காலி பண்ணச் சொல்லிவிட்டன. ஆர்.என்.கே., நீதிமன்றத்தை அணுக மறுத்து வீட்டைக் காலியும் செய்துவிட்டார்.

இதுதொடர்பாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நல்லகண்ணுவை பேட்டி எடுத்தபோது, "பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் கக்கன்ஜி பதவியில் இருந்த காலத்தில் எதையும் சேர்த்து வைக்கவில்லை. நான் மற்றவர்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். ஆனால், இதனை முன்கூட்டியே வாரியம் தெரிவித்திருக்கலாம் என்பதைத் தவிர, வேறு எனக்கு வருத்தமில்லை எனக்கூறியுள்ளார்.

நல்லகண்ணுவுக்கு கிடைக்கின்ற விருது நேர்மைக்கும் தூய்மைக்கும் வழங்கப்படும் விருதாகும். விருது சில நேரங்களில் கெளரவமும் பெறுகிறது. நல்லகண்ணு போன்றவர்களை அடையாளம் காட்டுவதால்..!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT