தினமணி கொண்டாட்டம்

இந்தியாவின் முதல் செஸ் சாம்பியன் தமிழர்!

தினமணி

இந்தியாவின் முதல் செஸ் சாம்பியனாக தமிழர் இருந்துள்ளார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
"அரசர்களின் விளையாட்டு' என்று கெளரவம் பெற்றிருந்தது "சதுரங்க விளையாட்டு'. இருவர் எதிர் எதிராக அமர்ந்து விளையாடும் " பலகை விளையாட்டு' தான் சதுரங்கம். தமிழில் "ஆனைக்குப்பு' என்ற பெயரும் உண்டு.
ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காய்கள் அமைந்திருக்கும். சதுரங்கம் விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8-க்கு 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அந்தக் கட்டங்கள் அமைந்திருக்கும்.
"எதிராளியின் நகர்வு, நமது நகர்வு' என்று சிந்தித்து விளையாட, அறிவுக்கு கூர்மையும், சமயோசித தந்திரமும் சதுரங்கம் ஆடுவதற்கு அடிப்படைத் தேவை. தற்போது எல்லா நாடுகளிலும் கோடிக்கணக்கானோரால் சதுரங்கம் விளையாடப்படுகிறது. சதுரங்கம் ஒரு கலை. அறிவியலின் ஒரு பகுதி. மூளையுடன் மூளை நடத்தும் "போர்க் கலை' என்றும் சொல்லலாம்.
ஒரு பகுதியில் வெள்ளை நிறத்தில் ஓர் அரசன், ஓர் அரசி, இரு அமைச்சர்கள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு சிப்பாய்கள் அணிவகுப்பார்கள். எதிர் திசையில் அதே அளவு காய்கள் கருப்பு நிறத்தில் நிற்கும். ஒவ்வொரு காயும் விதம் விதமாக நகரும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் குறிக்கோள். எதிரி அரசனை, பிடித்துவிட்டால் வெற்றி. விளையாட்டும் முடிவடைந்துவிடும்.
அன்று இந்தியாவில் விளையாடப்பட்ட சதுரங்கத்தில் ராணிக்கெல்லாம் வேலையில்லாமல் இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவர்கள் விளையாடும் செஸ் இந்தியர்களுக்கு அறிமுகமானது.
ஆங்கில முறை செஸ் விளையாட்டின் முதல் இந்திய சாம்பியனாக இருந்தவர் தமிழர். ஆம் உண்மைதான்! அப்போதைய மதராஸ் மாகாணத்தை சேர்ந்தவர்தான் குலாம் காஸிம்.
அவரைப் பற்றிய தகவல்கள்:
குலாம் உருவம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு பதிவும் கிடைக்கவில்லை. ஆனால் குலாம் காஸிம் சதுரங்கம் விளையாடியதற்கான ஆவணப் பதிவுகள் உள்ளன. 1828-29-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட இருவேறு சதுரங்கப் போட்டிகளில் குலாம் இரண்டு முறையும் வென்று "சாம்பியன்' பட்டம் வென்ற முதல் இந்தியர்' என்று அன்றைய செஸ் மேதையாக அறியப்பட்ட ஹோவர்ட் ஸ்ட்ரான்டன் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹோவர்ட் 1843-1851 வரை உலகில் அசைக்க முடியாத செஸ் மாஸ்டராக இருந்துள்ளார். 1845-ஆம் ஆண்டு, ஏப். 26-இல் வெளியான "லண்டன் நியூஸில்' இது குறித்து எழுதியுள்ளார். அதில் மதராஸ் செஸ் கிளப்பைச் சேர்ந்த "குலாம் காஸிம், ஐதராபாத் செஸ் கிளப்பைச் சேர்ந்த ரோவ் ஸாஹிப் என்பவருக்கு எதிராக ஆடினார்.
குலாம் "ராஜாவுக்கு செக்' எனப்படும் (கிங்'ஸ் காம்பிட் மற்றும் முஸியோ காம்பிட்) ஆகிய இரு சிக்கலான வியூகங்களை வகுத்ததையும்' குறிப்பிட்டுள்ளார். குலாம் காஸிம் ஜேம்ஸ் கோச்ரேனுடன் இணைந்து தனது நகர்வுகளை குறித்து தனது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். குலாம் காஸிமின் கணிக்க முடியாத நகர்வுகளும், அசரவைக்கும் விசித்திர வியூகங்களும் செஸ் ஆட்டக்காரர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இன்றைக்கும் ஒரு மாயாஜாலமாக இருக்கிறது.
குலாமுடன் இணைந்திருந்த ஜேம்ஸ் கோச்ரேன் மதராஸின் கேம்ஸ் கிளப்பினையும், மதராஸ் பப்ளிக் சர்விஸ் கமிஷனையும் தொடங்கியவர்.
அந்தக் காலத்தில் செஸ் போட்டிகள் நடந்தவிதம் சுவாரஸ்யமானது. அப்போதெல்லாம் போக்குவரத்து வசதிகள், தகவல் பரிமாறும் வசதிகளான தபால், தந்தி, தொலைபேசி, தொலைகாட்சி இல்லாத காலம்.
1828-29-இல் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் செஸ் போட்டி, ஓரிடத்தில் நேருக்கு நேர் அமர்ந்து ஆடாமல், மதராஸில் குலாமும், ஹைதராபாத்தில் ரோவ் ஸாஹிப்பும் அமர்ந்து விளையாடினார்கள். குலாம் ஒரு காயை நகர்த்தினால் அதை கடிதத்தில் எழுதி ஹைதராபாத்தில் இருக்கும் ரோவ்விற்கு பிரத்யேக ஆள் மூலம் அனுப்புவார்கள். குலாம் நகர்வுக்கு எதிராக ராவ் காயை நகர்த்துவார். அந்த நகர்வை விளக்கி கடிதம் எழுதப்பட்டு மதராஸில் இருக்கும் குலாமுக்குத் தரப்படும். இப்படி ஒவ்வொரு நகர்வும் எதிர் போட்டியாளருக்குத் தெரியப்படுத்தி சதுரங்கப் போட்டி நடந்தது. போட்டி இரண்டு ஆண்டுகள் நடந்ததாம். இந்தப் போட்டியிலும் குலாம் காஸிம் வென்றுள்ளார்.
ஆங்கிலேயர் செஸ் விதிமுறைகளை கையாண்டு போட்டிகளில் "சாம்பியனான முதல் இந்தியர்' என்ற பட்டம் குலாம் காஸிமிற்கு வழங்கப்பட்டது. குலாமுக்குப் பிறகு 1890-ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 19 வயதான இந்திய வீரர் கோவிந்த் தீனாநாத் மட்காங்கர் தனது சதுரங்க ஆட்டத்தால் ஆங்கிலேயர்களை மிரள வைத்தார்.
1929-ஆம் ஆண்டு முதல் 1933 வரை மிர் சுல்தான் கான் என்பவர் இங்கிலாந்தில் நடந்த செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாம்பியனுக்கு இணையாகக் கருதப்பட்டார். தொடர்ந்து வெற்றிகள் பல பெற்றாலும் வெளிநாடுகள் சென்று தங்கி விளையாட செலவு செய்யப் பணம் இல்லாததால் மிர் சுல்தான் கான் செஸ் ஆட்டத்திலிருந்து விடை பெற்றார்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT