தினமணி கொண்டாட்டம்

சமையல் சமையல்! (07/08/2022)

7th Aug 2022 06:54 PM

ADVERTISEMENT

 பலாப்பழ கட்லெட்
 தேவையானவை:
 பலாப்பழ சுளைகள்-25
 சக்கரவை வள்ளிக்கிழங்கு- 4
 சர்க்கரை- 200 கிராம்
 பிரெட் துண்டு- 4
 பால்- 100 கிராம்
 பிரெட் தூள்- 100 கிராம்
 ஏளக்காய் பொடி- 1 தேக்கரண்டி
 நெய்- தேவையான அளவு
 செய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோல், நார் நீக்கி நன்றாக உதிர்க்க வேண்டும். பிரெட்டை பாலில் ஊற வைத்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பலாச்சுளைகளை நறுக்கிப் போட்டு அறுக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டு காய்ந்ததும், சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி, அதில் உதிர்ந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிசைந்த பிரெட்டு, ஏலக்காய் பொடி, பலாப்பழம் அரைத்ததைச் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். அந்தக் கலவையை நன்றாகப் பிசைந்து வடைப் போல தட்ட வேண்டும். பிறகு பிரெட்டு தூளில் புரட்டி நெய் தடவிய தோசைக்கல்லை அடுப்பில் போட்டு இதை போட்டு வேக வைத்து, திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுக்க வேண்டும்.
 
 பலாப்பழப் போளி
 தேவையானவை:
 பலாப்பழம்- 500 கிராம்
 தேங்காய்-1
 வெல்லம்- 500 கிராம்
 ஏளக்காய்- 6
 மைதா மாவு- 300 கிராம்
 நல்லெண்ணெய்- 50 மி.லி.
 நெய்- தேவையானது
 செய்முறை: மைதா மாவை போளிக்கு ஏற்ற மாதிரி இளக்கமாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பலாச்சுளையைப் பொடியாக நறுக்கி, பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும். தேங்காய்த் துருவலை தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, பாகு காய்ச்சி அதில் அரைத்த விழுது ஏலப் பொடியும் சேர்த்துக் கலவை கட்டியாக வரும் வரை கிளறி உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு போளிக்குத் தயார் செய்வது போல், விரித்து தோசைக்கல்லை போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
 
 பாலப்பழப் பாயாசம்
 தேவையானவை
 பலாச்சுளைகள்-15
 அரிசி- 100 கிராம்
 பால்- 100 கிராம்
 வெல்லம்- 200 கிராம்
 ஏலக்காய்ப் பொடி- 1 மேசைக்கரண்டி
 முந்திரிப் பருப்பு- 10
 நெய்- சிறிதளவு
 செய்முறை: அரிசியை பால்விட்டு வேக வைக்க வேண்டும். பலாச்சுளைகளைப் பொடியாக நறுக்கி, இதில் போட்டு வேக விட வேண்டும். தேவையானால் தண்ணீர் விடலாம். பலாச்சுளை வெந்தவுடன் வெல்லத்தைப் பொடி செய்து போட்டு நன்கு மசித்து கெட்டியானவுடன் கீழே இறக்கி, ஏலப் பொடி, முந்திரிப் பருப்பை வறுத்துப் போட வேண்டும். இதன் பின்பு பாலை சேர்த்து கலக்கிவிட வேண்டும்.
 
 பலாப்பழ முடை கிழங்கு
 தேவையானவை:
 பலாச்சுளை- 20
 பச்சரிகி- 100 கிராம்
 வெல்லம்- 100 கிராம்
 தேங்காய்- 1 மூடி
 செய்முறை: பலாச்சுளைகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பச்சரிசி, தேங்காய்த் துருவல், பலாச்சுளை மூன்றையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 வாழை இலைகளை நறுக்கி நெருப்பில் வாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்துள்ள கலவையை இலையில் வடை போல் சற்று பெரியதாக வட்டமாக இலேசாகத் தட்டி, ஆவியில் வைத்து எடுக்க வேண்டும். ஒருமுறையில் பத்து இலைகளை வைத்து மூட வேண்டும். நன்றாக வெந்தவுடன் எடுத்து
 விரித்துப் போட வேண்டும்.
 
 பலாப்பழ அல்வா
 தேவையானவை:
 பலாச்சுளை-20
 தேங்காய்- 1 மூடி
 நெய்- 200 கிராம்
 முந்திரி- 25 கிராம்
 செய்முறை: நன்றாகப் பழுத்த பலாச்சுளைகளை எடுத்து கொண்டையை நீக்கியவுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள
 வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் அரை கிண்ணம் தண்ணீர் விட்டு, இந்தச் சுளைகளை போட்டு வேக வைக்க வேண்டும். தேவையானால் இன்னும் கொஞ்சம் நீர் சேர்த்து வேக வைத்து, மசிய அரைக்க வேண்டும். வெல்லத்தை பாகுவாகக் காய்ச்சி அரைத்த விழுதையும், தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி ஏலப்பொடியைத் தூவி முந்திரிப் பருப்பையும் வறுத்துப் போட வேண்டும்.
 
 அரிசி பலாப்பழ வத்ஸன்
 தேவையானவை:
 பச்சரிசி- 400 கிராம்
 பலாச்சுளைகள்- 15
 வெல்லம்- 300 கிராம்
 தேங்காய்- 1
 செய்முறை: முதலில் பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். நன்கு பழுத்த பலாச்சுளைகள், தேங்காய்த் துருவல், வெல்லம் இவற்றை நன்றாக அரைக்க வேண்டும். இவை மசித்தவுடன் ஊறப்போட்ட பச்சரிசியை கொஞ்சம் தண்ணீர் இல்லாமல் வடித்து இத்துடன் சேர்த்து அரைக்க வேண்டும். அரிசி மட்டும் மை போல அரைக்காமல் நொய் மாதிரியாக இருக்க வேண்டும். பிறகு அரைத்ததை பாத்திரத்தில் எடுத்துவைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டி ஏலக்காய்த் தூள் சேர்க்க வேண்டும். இரண்டு கையளவுள்ள சற்றுப் பெரிதான வாழையிலையின் மட்டையைக் கிழித்துத் தயார் செய்துகொள்ள வேண்டும். பிறகு ஒரு மேஜை கரண்டி மாவை அதில் வைத்து, இலையை மடித்து ஆவியில் அவித்து வெந்தவுடன் உபயோகிக்க வேண்டும். மாவு அரைக்கும்போது, இரண்டு தேக்கரண்டி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 -ஆர்.ஜெயலட்சுமி
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT