தினமணி கொண்டாட்டம்

ஆரோக்கியமான தலைமுறை உருவாக..!

7th Aug 2022 07:15 PM

ADVERTISEMENT

ஆரோக்கியமான தலைமுறை உருவாக தாய்ப் பால் சிறந்தது. அது ஊட்டச்சத்து மிக்க உணவு என்கிறார், புதுச்சேரி ஓ.பி.ஜி. அன்னை தெரசா முதுகலைப் பட்டதாரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் நர்ஸிங் பேராசிரியரும், கைக்குழந்தைகள், இளம்குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் திட்டத்தின் தேசிய பயிற்சியாளருமான டி.ஆர். மஞ்சுபாலா.
ஆக. 1 முதல் 7-ஆம் தேதி வரை உலக தாய்ப் பால் வார விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த நிலையில், தாய்ப்பாலின் அவசியம் குறித்து அவரிடம் பேசியபோது:
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்தது. நூறு சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்றாலும், குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டுவதில் வெற்றி பெற முடியவில்லை. இதற்காகவே உலக தாய்ப்பால் வார விழாவைக் கடைப்பிடிக்கிறோம்.
தாய்ப்பால் பொதுவான அறிவுரை என்ன?
தாய்ப்பாலானது சுகாதாரப் பாதுகாப்பு மிக்கது. கர்ப்பக் காலத்திலே பெண்களுக்கும், தம்பதிக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து கற்பித்தல், குழந்தைக்கு நோய்த்தடுப்பு மருந்தாக தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறோம்.
குழந்தை பிறந்த முதல் 1 மணி நேரத்திலேயே குழந்தை மிகவும் சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும் இருக்கும். குழந்தை கண்களைத் திறக்கும்போது, தாய்ப்பால் அருந்த வைப்பது சரியான நேரம்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுகிறாரா, ஊட்டச்சத்து உணவை வழங்குகிறாரா, போதுமான ஓய்வை எடுக்கிறாரா, பாதுகாப்பான சூழல் உள்ளதா என்பதையெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும்.
வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், பணியிடங்கள் முதலிய பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டும் அறைகளை நிறுவுவதல் அவசியம். இவைதவிர, பாலூட்டும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, தனியுரிமையை அளிக்க வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் நடைமுறையை மேம்படுத்துவதற்காக, அவர்களின் அறிவு , திறன்களை மேம்படுத்த பயிற்சிகளை அளிப்பது அவசியம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறது.
தாய்ப்பாலின் அவசியம் குறித்து..?
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. தாய்ப்பாலைத் தவிர, வேறு எதுவும் கிடையாது. ஒரு தாய் தன் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய சிறந்த தன்னலமற்ற பரிசு இது. எல்லாவற்றுக்கும் மேலாக தாய்க்கு ஆதரவு கிடைத்தால், நாம் 100% பிரத்தியேக தாய்ப்பாலை அடையலாம். குழந்தையின் 2 வயது வரை தொடர்ந்து உணவளிக்கலாம். இது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குள்பட்ட நோய்த்தாக்கம், இறப்பு ஆகியவற்றைத் தடுக்கிறது.
பால் பௌடருக்கும், தாய்ப்பாலுக்கும் உள்ள வித்தியாசம்?
குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பால் பௌடர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பால் பௌடரால் குழந்தைக்கு பசி அடங்குமே தவிர, ஊட்டச்சத்து குறைவுதான்.
முழுமையாக தாய்ப்பாலை புகட்ட வேண்டும். தாய் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 முறை குழந்தைக்கு தாய்ப்பாலை அளிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை குழந்தை சிறுநீர் கழிக்கிறது என்றால், தாய்ப்பால் சரியான முறையில் புகட்டப்படுகிறது என்பதை அறியலாம். குழந்தையின் எடை அதிகரிப்பதற்கும் தாய்ப்பாலே முக்கிய காரணம்.
பால் அதிகம் சுரக்க என்ன வழி?
தாய் மிகவும் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும், நிதானமாகவும் இருந்தால், பால் எளிதில் சுரக்கும். அதே நேரத்தில் தாய் சோகமாக, கவலையாக, குழப்பமாக இருந்தால், தாய்ப் பால் சுரப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் தாய்ப் பால் அதிகமாக சுரக்கிறது. எனவே ஒவ்வொரு தாயும் பால் உற்பத்தியின் இந்த சுரப்பை அறிந்து கொள்ள வேண்டும். அதிகாலையில் விழிக்கும் குழந்தைக்கு பால் தொடர்ந்து புகட்ட வேண்டும். குழந்தையின் 6 மாதத்துக்குப் பின்னர், தாய்ப்பாலோடு பிற உணவையும் சேர்த்து புகட்டலாம்.
-பா.சுஜித்குமார்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT