தினமணி கொண்டாட்டம்

தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்க்கை!

DIN

நல்ல கதைகளும், உணர்வுபூர்வமான விஷயங்களும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருப்பதுதான் என்னை போன்றவர்களுக்கு மூலதனம். சினிமாவிற்கும், எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. "தாஸ்' படத்துக்குப் பிறகு வேறு மாதிரியாக களம். இறங்கி செய்கிற கதை. உண்மை ஒன்றுதான், அதை கோபமாகவும் சொல்லலாம், கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். நான் இதில் உணர்வு பூர்வமாக, ஒரு கதை சொல்ல வருகிறேன். ஒரு தனி மனிதனின் அசல் தன்மை சார்ந்து சொல்கிறேன்.'' கைகள் பற்றி பேசத் தொடங்குகிறார் இயக்குநர் பாபு யோகஸ்வரன். அக்டோபரில் வெளிவருகிறது இவர் இயக்கியுள்ள "தமிழரசன்'.

தமிழரசன்.... பெயர் சொன்னதும், வேறு எண்ணங்கள் அலை பாய்கிறது....

வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. தமிழரசன் என்கிற 40 வயதுக்காரர். மனைவி-குழந்தை என சாமானிய வாழ்க்கை. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வரும். எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். அப்படி ஒரு இடம் இங்கே வந்து போகிறது. அதைக் கடக்கிற நேரத்தில் அவனுக்கு வந்து போகிற அனுபவங்கள்தான் முழுப் படமும். இதை இப்படி ரொம்பவே சுலபமாக சொல்லி விட்டுப் போகலாம். ஆனால், இதில் வருகிற அழுத்தம் எல்லாத் திசைகளுக்கும் உங்களைக் கொண்டு போகும்.

கதை தேர்வில் விஜய் ஆண்டனி தேர்ந்தவராக இருக்கிறார்....

ஒரு சில ஹீரோக்கள் தமிழரசன் கதையைக் கேட்கக்கூட தயாராக இல்லை. ஏக பிஸியாக இருந்த விஜய் ஆண்டனி கேட்டு விட்டு, உடனே சம்மதம் சொன்னார். "சமாளிச்சு பண்ணிடுவோம் பிரதர்'னு தட்டிக் கொடுத்தார். திடீரென்று அர்த்தராத்திரி, விடியற்காலை என்று பளிச்சென்று "கொஞ்சம் பேசலாமா பிரதர்' என்று கைப்பேசியில குறுஞ்செய்தி மின்னும். எடுத்துப் பேசினால் "அப்படி ஒரு வார்த்தை சேர்த்துக்கலாமா, இப்படி இந்த சீனை பண்ணவா'னு நம்ம கிட்டே ஆலோசனை மாதிரி கேட்பார். நிச்சயமாக நல்லாயிருக்கும். துளியும் தலைக்கனம் கிடையாது. அதை விட சுத்தம் என்கிற குணம் அவருக்கே மட்டுமானது. எத்தனையோ ஹீரோக்களிடம் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது. ஆனால், ஒரு படத்தில் நடித்தால் அதில் மட்டுமே இருக்கத் தெரிகிற மனசு இவருக்குத்தான் வரும். படப்பிடிப்பு நடந்த இடங்களில் மக்கள் விஜய் ஆண்டனியை ஆசையா கூப்பிடுவாங்க.இவரும் சகஜமாக அவர்களிடம் திண்ணையில் இருந்து பேசி விட்டு, வருவார். வெற்றி ஒன்றும் அப்படியே சும்மா வந்து ஒருத்தரிடம் தங்கிவிடாது. நல்ல குணங்களோடு இருப்பதால் மட்டுமே விஜய் ஆண்டனிக்கு எல்லாமே கூடிவருகிறது.

இளையராஜா இசை...

நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார். இனி என்ன இருக்கிறது... இசையின் இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம். இந்த தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசை. அவ்வளவு இலகுவாக கைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் பலமே ராஜாவின் இசைதான். விஜய் ஆண்டனி ஒரு பாட்டு பாடியிருப்பது இன்னும் அழகு. ராஜாவின் இசை உள்ளே வந்த பின்னர்தான், படத்துக்கு இன்னொரு கலர் வந்து சேர்ந்தது. இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது. அலைகடலும் ஆழ்கடலும் அவர்தான் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்.

முதல் படத்துக்கும், இப்போதும் கிட்டத்தட்ட 10 வருடத்துக்கு மேலான இடைவெளி... எப்படி எடுத்துக்கிறீங்க...

இங்கே எப்போதும் கரண்ட் சக்சஸூக்கு மட்டும்தான் மதிப்பு, மரியாதை. "தாஸ்' பெரிய அளவிலான வெற்றிப் படம் இல்லை. ஒரு இயக்குநராகவும் அது எனக்கு எந்த அடையாளத்தையும் தரவில்லை. ஆகவே அடுத்த படம் அமைவது தாமதமானது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அதுதான் விளம்பரம், வெப் சீரிஸ் பக்கம் போய் விட்டேன். இப்போது மீண்டும் சினிமா. ஒரு கை பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT