தினமணி கொண்டாட்டம்

திரும்பிப் பார்க்க வைத்த  தலைமை ஆசிரியர்!

19th Sep 2021 06:00 AM | -சுதந்திரன்

ADVERTISEMENT

 

பள்ளியின் தலைமை ஆசிரியராக நடுத்தர வயதில்தான் அதாவது நாற்பது வயதுக்கு மேல்தான், ஆக முடியும். ஆனால் மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் நகரை சேர்ந்த பாபர் அலி 16 வயதிலேயே தலைமை ஆசிரியராகிவிட்டார்.
பாபர் அலி. மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் ஐந்து கி. மீ நடந்து பள்ளிக்குச் சென்று வந்தவர். கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், கற்றதை பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் பாபர் அலிக்கு இருந்தது. ஆனால் சிறுவனிடம் கல்வி கற்க யார் வருவார்கள் ?

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் களைப்பாக மூலையில் கிடைக்காமல், நண்பர்களுடன் விளையாட போகாமல் தன் முன் சில பொம்மைகளை வைத்து அவற்றைத் தன்னிடம் கல்வி கற்க வந்திருக்கும் மாணவர்களாகப் பாவித்துப் பாடங்களைக் கற்பிப்பார். பாபர் பெரியவனாக வளர்ந்தாலும் பொம்மைகளுக்குக் கல்வி கற்பிப்பதை விடவில்லை.

பாபர் அலியின் பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் திறமையை அறிந்த அக்கம்பக்கத்துச் சிறார்கள் வகுப்புகளுக்கு வரத் தொடங்கினார்கள். பொம்மை மாணவர்களுக்குப் பாபர் பிரியாவிடை கொடுத்தார். அப்போது பாபருக்கு வயது 9 தான்.. !

ADVERTISEMENT

முர்ஷிதாபாத் சுற்றுவட்டாரத்தில் அரசு, தனியார் பள்ளிகளோ இல்லாத சூழலில் சிறுவன் பாபர் அலியிடம் பாடம் கற்க வர அருகிலுள்ள கிராமத்து மாணவர்கள் ஆர்வம் காட்டினாலும், கால் வயிறுக்கு கஞ்சி குடிக்க முடியாத நிலையில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு விடவில்லை. பாபர் அவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி சிறார்களை பெற்றோர் அனுமதியுடன் தனது வகுப்புகளுக்கு வரச் செய்தார். வகுப்பினை தனது வீட்டிற்குப் பின்புறத்தில் இருந்த காலியிடத்தில் நடத்தி வந்தார்.

வகுப்பு சிறிது நாளில் பள்ளியாக மாறியது. பாபர் நடத்தி வந்த இலவசப் பள்ளி குறித்து அனைவரும் சிலாகிக்க... ஐந்து கி. மீ தூரத்திலிருந்து சிறார்கள் பாபரின் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். இந்த மாற்றத்தை கூர்ந்து கவனித்து வந்த மேற்கு வங்க அரசின் கல்வித்துறை பாபர் நடத்தி வந்த மாலை நேரப் பள்ளிக்கு அரசு அங்கீகாரத்தை வழங்கியது. படிக்க வரும் மாணவர்களைத் தொடர்ந்து கல்வி கற்க மாலை நேரப் பள்ளிக்கு வரச் செய்ய மாணவர்களுக்கு இலவச அரிசி வழங்கியது. பாபரின் மாலைப் பள்ளியை முறையான பள்ளிக்கூடமாக அங்கீகரித்து பாபரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் நியமித்தது. அப்போது பாபரின் வயது 16 .

தற்போது பாபர் அலிக்கு 28 வயதாகிறது. கர்நாடக பாடநூல் கழகத்தின் 12- ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பாபர் அலி குறித்த வாழ்க்கை குறிப்பு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாபர் அலி குறித்த ஆங்கிலப் பாடம் இடம் பெற்றுள்ளது. 2020 ஜனவரி 25 குடியரசு தினத்தன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாபரின் கல்வித் பணியைக் குறிப்பிட்டுப் பெருமையாகப் பேசியிருந்தார். தனது பள்ளிக்கு "ஆனந்த கல்வி நிலையம்' என்று பெயர் பாபர் சூட்டினார். சிறு வயதிலேயே கற்ற கல்வியை, மழைக்கு கூட பள்ளியில் ஒதுங்காத சிறார்கள் கல்வி கற்க இலவசமாக வகுப்புகள் நடத்தி வந்த பாபர் "எனது ரோல் மாடல் சுவாமி விவேகானந்தர்.." என்று சொல்கிறார்.

2009 லிருந்து பாபர் விருது மழையில் நனைத்துக் கொண்டிருக்கிறார். முப்பது வயதிற்குள் சாதனை படைத்தவர்களுக்கான "அன்டர் 30' என்கிற பிரிவில் ஃபோர்ப்ஸ் தேர்வுப் பட்டியலில் பாபர் இடம் பெற்றார். பிபிசி "கல்வி புரவலர்' விருது வழங்கி பாபரை கெளரவித்தது. பாபரிடம் படித்த மாணவர்களில் பலர் உயர்கல்வி நிலையங்களில் படித்துக் கொண்டிருக்கின்றனர். சிறார்களுக்கு வகுப்புகள் எடுத்தாலும், பாபர் ஆங்கிலம், வரலாறு பாடங்களில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். சிறார்களுக்கு ஆசிரியராக இருந்து ஏணியாக இருந்த பாபர் அலி தன்னையும் கல்வியில் உயர்த்திக் கொண்டுள்ளார்...!

Tags : kondattam Headmaster looking back
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT