தினமணி கொண்டாட்டம்

அண்ணாவின் நேர்மையும், அரசியல் தூய்மையும்

19th Sep 2021 06:00 AM | கவிஞர் முத்துலிங்கம்

ADVERTISEMENT

 

நாக்கு வன்மை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இந்த நாட்டு மக்களின் வாக்கு வன்மையைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் "அண்ணா' அரசியல் மேடைகளில் அழகுத் தமிழ் மயிலை அரங்கேற்றி ஆட வைத்த பெருமை அண்ணாவுக்கே உண்டு. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையையும் பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியாரையும் சொற்போரில் தோற்கடித்த பெருமையும் அவருக்கே உண்டு.

"முரசொலி'யில் பணியாற்றிய போது அண்ணாவின் பேச்சைக் குறிப்பெடுப்பதற்குப் பல கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். நானும் அவர் பேச்சின் வல்லமையை அறிவேன்.

ADVERTISEMENT

அண்ணாவை "அறிஞர் அண்ணா' என்று எல்லோரும் அழைத்த காலத்தில் "பேரறிஞர் அண்ணா' என்று முதன் முதல் பெருமைப்படுத்தி அழைத்தவர் "பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார்தான்'. அதன் பிறகுதான் "நாவலர் நெடுஞ்செழியன்' "கலைஞர்;' போன்ற தலைவர்கள் "பேரறிஞர் அண்ணா' என்று விளிக்கத் தொடங்கினர்.

மலைநாடென்னும் மலேசிய நாட்டிற்கு உலகத் தலைவர்கள் ஒவ்வொருவரும் சென்றார்கள். நமது  ஜவாஹர்லால் நேருவும் சென்றிருக்கிறார். ஆனால் டிக்கெட் எடுத்து திரைப்படம் பார்ப்பது போல் கட்டணம் கொடுத்து விட்டுக் காதாரத் தமிழ்ப் பேச்சை அங்கே கேட்டதெல்லாம் அண்ணாவின் 
பேச்சைத்தான்.

அண்ணாவின் ஆங்கிலப் புலமையை அறிந்த காரணத்தால் தான் "ஏல் பல்கலைக்கழகம்' அவரை அழைத்துச் சிறப்பித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களில் "கென்டன்ஷப்' என்பவரும் ஒருவர். இவர் தன் பெயரிலேயே ஒரு அறக்கட்டளையை நிறுவி "சப்பெல்லோஷிப்' என்ற விருதை உலகத்தின் தலைசிறந்த தலைவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். அந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் அண்ணாதான். அவரால் இந்தியாவுக்கும் பெருமை. இந்தியாவால் அவருக்கும் பெருமை.

கடிதம் எழுதுவதை ஒருகலையாக வளர்ந்தவர்கள் இந்திய நாட்டில் இரண்டு தலைவர்கள். ஒருவர் "நேரு' மற்றொருவர் "அண்ணா'. அண்ணாவுக்குப் பிறகு அதைச் சரியாகச் செய்தவர் "கலைஞர்;' ஒருவர்தான். "அண்ணா' எழுதுவதைப் போல்தான் பேசுவார். பேசுவதைப் போல் தான் எழுதுவார். சிலருக்கு எழுத்து நடை வேறாகவும் பேச்சுநடை வேறாகவும் இருக்கும். அண்ணாவுக்கு இரண்டு நடையும் ஒரே விதமாகத்தான் இருக்கும். 

"அண்ணா' படைப்பாளி மட்டுமல்ல. படிப்பாளியும் கூட. கன்னிமாரா நூலகத்தையே கரைத்துக் குடித்தவர், அங்கு இல்லாத நூல் ஒன்றை திருவல்லிக்கேணி சிங்காரவேலர் மாளிகை நூலகத்தில் தேடிக் கண்டுபிடித்துப் படித்ததாக அண்ணாவே சொல்லியிருக்கிறார். 

அமெரிக்க மருத்துவமனையில் அண்ணா அனுமதிக்கபட்டிருந்த நேரத்தில் "அறுவைச் சிகிச்சைக்கு நேரமாகிவிட்டது வாருங்கள்' என்று "டாக்டர் மில்லர்' அழைத்தபோது, "அரைமணி நேரம் பொறுங்கள். அதற்குள் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விடுகிறேன்' என்றார். அப்படிக் கடைசியாக அண்ணா படித்த புத்தகம் "மேரி கரோலின்' என்ற பெண் எழுத்தாளர் எழுதிய "மாஸ்டர் கிறிஸ்டியன்' என்ற புத்தகம் தான்.

"அண்ணா' முதலமைச்சரான போது பொதுப்பணித்துறையின் சார்பாக அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் சோபா நாற்காலிகள் கொண்டு வந்து போட்டார்கள். வெளியில் இருந்து வீடு திரும்பிய "அண்ணா' இதெல்லாம் என்னவென்று கேட்டார். முதலமைச்சராக யார் வந்தாலும் எங்கள் துறையின் சார்பில் இப்படியெல்லாம் சோபா நாற்காலிகள் போடுவது வழக்கம் என்றார்கள் அதிகாரிகள். "வேண்டாம் இதையெல்லாம் எடுத்துச்சென்று விடுங்கள்' என்று கூறிவிட்டார் அண்ணா. 

"அண்ணா' மறையும் போது அவர் குடும்பத்திற்கு மூன்றரை லட்சம் ரூபாய் கடனிருந்தது. மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருக்கு இரண்டாண்டுக் காலம் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு மூன்றரை லட்ச ரூபாய் கடனிருந்தது என்றால் இன்றைய அரசியலில் யாராவது நம்புவார்களா? உண்மை அதுதான். அந்த அளவு நேர்மை. 

"ஜெயலலிதா' முதலமைச்சரான போது தான் அண்ணா குடும்பம் படக்கூடிய சிரமங்களை அறிந்து அண்ணாவின் நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்கு "எழுபத்தைந்து லட்ச ரூபாய்' நிதியளித்தார். அண்ணாவுக்குச் செய்யக் கடமைப்பட்டவர்கள் அதைச் செய்யவில்லை. "ஜெயலலிதா'தான் செய்தார்.

இவர் ஆட்சிக் காலத்தில் தான் “செக்கரட்டேரியட்” "தலைமைச் செயலகமானது'. “சத்தியமேவ ஜெயதே” "வாய்மையே வெல்லும்' என்றானது. “ஆகாஷ்வாணி” "வானொலி'யானது. "அக்ராசனர்' "அவைத்தலைவரானார்'. கனம் மந்திரிகள் "மாண்புமிகு அமைச்சர்கள்' ஆனார்கள்.

மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அண்ணா. எந்த நிலையிலும் மதுவிலக்கைத் தளர்ந்தமாட்டேன் என்று அறிவித்தார். அப்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்த "வி.வி.கிரி' காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலே வருவாய்க்காகப் பல மாநில முதல்வர்கள் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்தவராக இருந்தாலும் "அண்ணா' ஒருவர்தான் மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அதனால் காங்கிரஸ்காரர்களைவிட உண்மையான காந்தியவாதியாக அண்ணாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார் என்று போற்றிப் புகழந்திருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் "வாஞ்சிநாதன்' துணைவியார் "பொன்னம்மாள்' தியாகிகள் பென்ஷனுக்காக விண்ணப்பித்திருந்தார். "வாஞ்சிநாதன்' செயல் தியாகிகள் பட்டியலில் சேராது. ஆகவே பென்ஷன் வழங்க இயலாது என்று காங்கிரஸ் அரசு கைவிரித்துவிட்டது.
அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு அதே வாஞ்சிநாதன் துணைவியார் மீண்டும் தியாகிகள் பென்ஷனுக்காக விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்த அண்ணா, தியாகிகள் பென்ஷன் வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு வழங்கப்படுமென சட்டமன்றத்திலேயே அறிவித்து முறைப்படி அவருக்குப் பென்ஷன் கிடைக்க வழிவகை செய்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை வாயளவில் சொல்லாமல் செயல் அளவில் செய்து காட்டியவர் அண்ணா. 

1967 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் "காமராசர்', "பக்தவத்சலம்' ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று உங்களது ஆலோசனைகளை எங்களுக்குச் சொல்லி எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டார் "அண்ணா'. அதுமட்டுமல்ல 1957 தேர்தலில் இருந்து காங்கிரசை ஆதரித்தும் தி.மு.க.வைத் தாக்கியும் பிரச்சாரம் செய்து வந்த "பெரியாருக்கு' இந்த அரசைக் காணிக்கையாக்குகிறேன் என்று அறிவித்த பெருமையையும் அண்ணாவைத்தான் சாரும். 

கட்சிபேதம் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் "அண்ணா'. அதே போல் கட்சி பேதம் பார்க்காமல் அனைவருக்கும் பொதுவான அரசாக கண்ணியத்துடன் இன்றைக்கு "ஸ்டாலின்' அரசு நடைபோடுகிறது. அதனால்தான் முன்னாள் அமைச்சர் "செங்கோட்டையன்' கூடப் பாராட்டியிருக்கிறார். அந்த வகையில் நானும் பாராட்டுகிறேன். 

அண்ணா ஆட்சியிலிருந்தபோது எத்தனையோ சாதனைகளை அவர் சாதித்திருந்தாலும் அதில் மிகப் பெரிய சாதனை இந்த நாட்டுக்குத் "தமிழ்நாடு' என்று பெயர் வைத்ததுதான். தாய்க்கு மகன் பேர்வைப்பதைப் போலே தாய் நாட்டுக்குத் "தமிழ்நாடு' என்று பேர்வைத்த தலைவர் அவர்தான்.

1968-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாள் "தமிழ்நாடு' என்று அதிகாரப் பூர்வமான பெயர் சூட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதுதான் அரசின் சார்பில் அவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அன்று அண்ணாவின் பேச்சைக் குறிப்பெடுப்பதற்காக "முரசொலி பத்திரிகையின் சார்பில் நான்தான் சென்றேன். அடியாரும் என்னுடன் வந்தார். ஆனால் அண்ணாவின் பேச்சை நான்தான் குறிப்பெடுத்தேன். பத்து நிமிடங்கள் தான் பேசினார்.

"இந்த விழாவில் என்னைக் கலந்து கொள்ளக் கூடாதென்றும் கலந்து கொண்டாலும் பேசக்கூடாது என்றும் பேசினால் உடலுக்கு ஊறு நேரிடுமென்றும் டாக்டர்கள் என்னைத் தடுத்தார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் நானிருந்தால் இந்த உடல் இருந்தும் பலனில்லை என்று அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்று நெஞ்சு நெகிழத்தக்க வகையில் உருக்கமுடன் பேசினார். அவையில் இருந்தவர்களெல்லாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள். "அண்ணா'வைப் போல ஒரு "தலைவர்' இதுவரை பிறந்ததுமில்லை. இனிப் பிறக்கப்போவதுமில்லை. 

கட்டுரையாளர்: முன்னாள் அரசவைக்கவிஞர்

Tags : Kondattam Anna honesty and political purity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT