தினமணி கொண்டாட்டம்

உலகத்துக்காக ஒரு சினிமா !

DIN

சில நிமிட காட்சிகளில் கலகலவென ஈர்க்கிறது " சூ மந்திரகாளி' ட்ரெய்லர். வழக்கமான சினிமா உணர்வுகள் இல்லாமல் எங்கெங்கும் சிரிப்புத் தோரணம் அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை. இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர். நம்பிக்கையோடு கால் பதிக்க வருகிறார்.

போலி சாமியார்களும், பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை, சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இயல்பான நகைச்சுவை வசனங்கள் என யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை.

இன்னும் சிரித்து பார்க்க கூடிய படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இங்கே உண்டு....

இப்படியொரு சினிமா உருவாக்க வேண்டும் என்பது என் ஆசையாகவே இருந்தது. அதற்காக ஒரு திரைக்கதையை வடிவமைத்து வைத்திருந்தேன். இதற்காக எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும் என்று நினைத்து, ஒவ்வொரு காட்சியாக செதுக்கி கொண்டு வந்தேன். என் குருநாதர் சற்குணம் சார்தான் இதை தயாரிக்க வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கான வேலைகளில் இது சாத்தியப்படவில்லை.

அப்போதுதான் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் கார்த்திகேயன் வேலு. என் உணர்வுகள் எல்லாவற்றையும் புரிந்த நபர். அவருக்கே இதில் நடிக்கும் தகுதியும் இருந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். இதற்கிடையில் கரோனா காலக் கட்டம், பல விதமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த காலம் இந்தப் படத்தையும் எங்கள் குழுவையும் கொஞ்சம் முடக்கி விட்டது. கொஞ்சம் நாள்கள் கடந்ததும், பொருளாதார ரீதியாக எங்களை நாங்களே தயார் செய்து கொண்டு இந்த ஓட்டத்துக்கு தயாராகி வந்தோம். கதைக் களத்தில் தொடங்கி, மேக்கிங் வீடியோ வரைக்கும் எல்லாமே பெரும் உழைப்பில் உருவானது. கையில் பணம், படப்பிடிப்புக்கு ஏற்ற பருவநிலை இருந்தால், அடுத்த நிமிடமே படப்பிடிப்புக்கு சென்று விடுவோம். இப்படித்தான் இந்தப் படத்தை முடித்திருக்கிறோம்.

கதையின் உள்ளடக்கம் சொன்னால், ஒரு எதிர்பார்ப்பு உருவாகும்....

இதில் சொல்ல வருகிற விஷயம் உலகத்துக்கானது. முழுக்க முழுக்க செயற்கையாகி விட்ட இந்த மனித வாழ்க்கையை உரசி பார்க்கும் ஒரு கதைக் களம் இது. அதனால் இந்தக் கதைக்கு மொழி தேவையாக இல்லை. யார் பார்த்தாலும் புரியும். இதை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பொருளாதார பலம் என்னிடம் இல்லை. வித்தியாசமாக ஏதாவது செய்தால், திரும்பி பார்க்க வைக்கலாம் என்ற யோசனை இருந்தது. அதற்காகத்தான் இந்தப் படம். "127 ஹவர்ஸ்', "தி பரேட்', "காஸ்ட் அவே' படங்கள் சின்ன பட்ஜெட்டில் மிகக் குறைந்த நபர்களால் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், உலக அளவில் எல்லோருக்கும் போய் சேர்ந்தது. காரணம் அந்தப் படங்களின் மேக்கிங்தான். கதை சொல்லப்படுகிற விதத்தில் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். அப்படித்தான் நானும் வித்தியாசம் காட்ட விரும்பினேன். அதனால் இதை பெரும் சிரத்தையோடு செய்து முடித்திருக்கிறேன்.

எந்தளவுக்கு சுவாரஸ்யம் சேர்ந்திருக்கும்...

ஏதோ ஒரு வித்தியாசத்துக்காக மட்டுமே என்னால் படம் எடுக்க முடியாது. அதைத்தாண்டி நாங்கள் செலவு செய்த பணம் கைக்கு வந்து சேர வேண்டும். அதுவும் இதில் முக்கியமாக இருக்கும். இது ஒரு பரபரப்பான படம். விறுவிறுப்பான படம். கமர்ஷியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் ஒருங்கே அமைந்த படமாகவும் இது வந்திருக்கிறது.

சேலத்தில் பங்காளியூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பொறாமை பிடித்தால் ஒருவனை ஒருவன் பில்லி சூனியம் வைத்து கெடுப்பது தான் வேலை. படத்தின் கதாநாயகன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியகாரனை கூட்டி வர, பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான். அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகாக பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர் விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான்.

ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதே கதை.

சேலம் வட்டார வாழ்க்கை, கிராமங்கள் என கதை நீளும். பெரிய மெனக்கெடல்கள், நிறைய உழைப்பு போட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்... சஞ்சனா புர்லி கதாநாயகி. கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், தர் என எல்லாமே புதுமுகங்கள்தான். படத்தை பார்த்த சற்குணம் சார் அவர் பேனரிலேயே இந்தப் படத்தை ரிலீஸ் செய்து தருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT