தினமணி கொண்டாட்டம்

சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் !

DIN


""சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கிடைக்கும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது. இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்ன சின்ன தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏதோ ஒரு உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை. இதைச் சொல்லி முடிக்கும் போது, பாவெல் நவகீதன் முகத்தில் அவ்வளவு பிரகாசம். "மெட்ராஸ்',

"வட சென்னை' படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர். தற்போது வந்துள்ள "பூமிகா' படத்திலும் தன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ரசிக்க வைத்துள்ளார். அடுத்து அஜித்தின் "வலிமை', விக்ரம் பிரபுவின் "டாணா காரன்' உள்ளிட்ட அரை டஜன் படங்கள் பாவெலுக்காக காத்திருக்கின்றன.

""சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் ஆசை. அப்பா பத்திரிகை துறையில் இருந்தவர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார். அந்த புத்தகங்கள் என்னை கலை நோக்கி திருப்பியது. ப்ளஸ் டூ முடிப்பதற்குள்ளாகவே நிறைய புத்தங்களை வாசித்த அனுபவம் கிடைத்தது. இந்த வாழ்க்கையை வேறு கோணத்தில் வைத்து திட்டமிட உதவியது.

சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன். ஆனால் சினிமா வாசலுக்கான திறவுகோல் என்னிடம் இல்லை. ஆயிரம் கஷ்டங்கள். நிறைய இயக்குநர்களின் வாசலில் நின்று வாய்ப்பு தேடுவேன்.

சினிமா இயக்குநர், ஒளிப்பதிவாளர் இந்த இரண்டில் ஒன்று என்பதுதான் என் பெரும் ஆசையாக இருந்தது. அந்த ஆசையில்தான் வந்தேன். அதற்கான பயிற்சிகளில் இறங்கினேன். "மெட்ராஸ்', "வடசென்னை' போன்ற படங்களின் மூலம் எனக்குத் தனித்த அடையாளம் கிடைத்தது. அதற்குக் காரணம் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்போது அதற்கென்று சில நாள்கள் உழைத்து கதாபாத்திரத்தை மெருகேற்றுவேன். அப்படிதான் சமீபத்தில் பூமிகா படத்தில் வந்த கதாபாத்திரம். ஊட்டியில் இருக்கும் குரும்பர் இன மக்களின் மொழி நடை, உடல் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு வாரம் பிடித்தது. இன்று அந்த முயற்சிக்கு பல பாராட்டுக்கள். எல்லோருக்கும் நன்றி.

சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகிய மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களை புரிந்துக் கொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது. பா. ரஞ்சித், வெற்றிமாறன் என வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள்.

சில படங்களில்தான் நடித்திருக்கிறேன். பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறைய பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இயல்பா இருக்கப்பா... னு நிறைய பேர் சொல்லுவதில் மகிழ்ச்சி. சமீபத்தில் கூட தெலுங்கில் ஒரு படம் பெரும் பெயர் பெற்று தந்திருக்கிறது. "ஸ்ரீதேவி சோடா சென்டர்' என்று படத்துக்கு பெயர். தனித்த வில்லனாக நடித்தேன். சுதீர் பாபு, மணிஷர்மா, ஸ்ரீகர் பிரசாத் என பெரிய கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம். படமும் ஹிட். எனக்கும் நல்ல பெயர்.

இவற்றையெல்லாம் விட போராடி வெற்றிப் பெற துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடித்திருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நீங்க பயணிக்கிற விதம் தனி... ஊருக்கு போகலாம் என்று இருந்த எனக்கு உங்கள் இடம் நம்பிக்கை தந்திருக்குனு வந்து விழுகிற வார்த்தைகள் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய.. நான் தேடிப் போனவை சில. நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். மனசுக்குப் பிடிக்கிற படங்களில் இருக்கிறோம் என்பதே அவ்வளவு நிறைவு.

அடுத்து "வலிமை', "டாணா காரன்' என பெரும் படங்கள் காத்திருக்கின்றன. திரைக்கதையில் அவ்வளவு சுவாரஸ்யம். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைகள். எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால், இனி வரும் இடங்கள் வேறு ஒரு நிலையில் உங்களை வந்துச் சேரும். உடம்பும், மனசும் லயித்து இயங்குகிற படம். காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்க கூடிய படமாக இருக்கும். இதோ நீங்களும், நானும், நாம் எல்லாரும் பார்த்து ரசிக்கிற இந்த உலகம்தான் என் கதைகள். நல்ல படம். நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும்.

நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது'' நம்பிக்கையாக பேசி முடிக்கிறார் பாவெல் நவகீதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT