தினமணி கொண்டாட்டம்

சமரசம் இல்லாத சர்வதேச சினிமா!

DIN

சர்வதேச அடையாளங்களுடன் உலா வருகிறார் இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு. அவர் இயக்கிய "கருவறை' ஹங்கேரி திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

""நிறைய திரைப்பட விழாக்களில் இந்தப் படம் விருது வாங்கி வந்திருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட் என நிறைய விருதுகள்.... ஹங்கேரி விழாவில் சிறந்தப் படத்துக்கான விருது வாங்கியிருப்பதில் கூடுதல் சந்தோஷம். இந்தப் படத்தை அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வர இருக்கிறேன். நம் படம் இந்த விருதுகளுக்கெல்லாம் சரியானதா என்பதை தமிழ் ரசிகர்களுக்கு முன் வைத்து பார்க்க போகிறேன்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார் இ.வி. கணேஷ்பாபு. ஒரு பக்கம் விளம்பர படவுலகம் என இன்னும் சிலிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறார்.

""இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என எல்லாமே இருக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கைதான் எல்லாம்.

வாழ்க்கையின் அனுமானம்தான் இந்தக் கதை. "உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி' என்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாமே பெரிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கும்போது, நாமே அதற்கு சாட்சியாக இருப்போம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்தப் படம்.''

திரைக்கதை வடிவம் எப்படியிருக்கும்....?

அரவிந்த், ஆர்த்தி இந்த இரண்டு பேருக்குமான காதலும், அன்பும்தான் படம். வாழ்க்கையை ரசனையாக, அதன் போக்கில் காமெடியாக, உற்சாகமாகவே வாழ்கிறவன்... அரவிந்த் வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாத மனசுக்காரன். எந்த பிரமிப்பும் ஏக்கமும் அவனுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான். அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தரம் என்ற மனப்பக்குவம் கொண்ட மனுஷி ஆர்த்தி. இவர்களின் ஒரே மகள் அஞ்சனா. இந்த மூவருக்குமான உலகம்தான் கதை. வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் படம். அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற காதல். எதையும் அடைந்து விட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லை. இப்படி ஒரு மனம் வாய்த்து விட்டால் அதை விடக் கொடுப்பினை ஏது...

நிறுவனங்கள் சார்ந்த சினிமாவா...?

நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா இது.

கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. ஹீரோவுக்காக பாட்டு வைத்தேன். காமெடி வைத்தேன் என்று இல்லாமல் கதைக்கு நேர்மையாக என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம் என்று நினைத்து ஒரு படத்தை எடுத்தேன். அதுதான் "கருவறை'. படத்தைப் பார்த்தப் பிறகு பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ஓர் எளிமையான சினிமா. இந்த மாதிரி தனிப்பட்ட முயற்சியை உலகத்தில் எல்லோரும் செய்து பார்த்து விட்டார்கள். இப்போது நானும்.

சினிமா.... விளம்பர படவுலகம் என இயங்கி கொண்டே இருக்கிறீர்கள்... ஒரு வெற்றி பெரிய மாற்றம் தரும் இல்லையா....?

எல்லோருக்கும் இன்னும் மேலே போக ஆசைதான். எல்லா எல்லைகளையும் அடைந்து விட்ட ஒரு இயக்குநரை போய், இனி என்ன இருக்கிறது என கேட்க முடியாது. அவருக்கும் இன்னும் மேலே போக ஆசை. இப்படி எல்லோருக்கும் வாழ்க்கை ஒரு விதம். சாப்பாடு, சம்பளம், சந்தோஷம் என கிடைக்கிற வாழ்வு எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை.அப்படி கிடைத்தாலும் கனவு, லட்சியம், வேட்கை என துரத்தும் இந்த வாழ்வில் ஒரு கட்டத்தில் எங்கோ போய் விடுகிறோம். கிராமத்தில் இருந்து வந்து நமக்கென ஒரு இலக்கு வைத்து இந்த பெருநகரத்தில் சுழலும் போது, அந்த இலக்கை அடைய மனம் எப்படியெல்லாம் யோசிக்கிறது. மனம் எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலேயே கடந்துக் கொண்டிருக்கிறது. தகுதியே இல்லாதவர்கள் உச்சம் அடைந்து விடுவதையும், எல்லாத் தகுதியும் இருந்தும் கஷ்டப்படுகிறவர்களையும் பார்க்கும் போது, வாழ்வின் மீது வெறுப்புதான் வருகிறது. பணம் பிரச்னை இல்லை என்கிற போது மனம் பிரச்னையாகி விடுகிறது. பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.

"கருவறை' யின் பங்கெடுப்பாளர்கள்...?

படத்தைத் துவங்குவதற்கு முன் கரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. நானே தயாரிப்பு என்பதால் எதிலும் தயக்கம் கிடையாது. கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். கதாநாயகன், கதாநாயகி, வில்லன்என எதுவுமே இங்கில்லை. எல்லாமே கதாபாத்திரங்கள்தான். மிதுன், ஏற்கெனவே ஒரிரு படங்களில் நடித்தவர். நல்ல இடத்துக்கு வர வேண்டும் என்கிற தகிப்பு கொண்டவர். இன்னொரு முக்கிய இடத்தில் ரித்விகா. எப்போதுமே ஒரு சோகம் படர்ந்திருக்கும் அவரின் முகம்தான் இந்த கதைக்கு கூடுதல் பலம். குழந்தை நட்சத்திரமாக அஞ்சனா தமிழ்செல்வி, வடிவுக்கரசி, ஆர். ஜெ. ரோகிணி, ஜோதி குமார் என இன்னப் பிற கதாபாத்திரங்களும் கூடுதல் கவனம் பெறும். ஒளிப்பதிவு என்.கே.ராஜராஜன். பின்னணி இசைக்காக ஸ்ரீகாந்த் தேவை இதில் பேசப்படுவார். படத்தொகுப்புக்கு சுராஜ் கவி பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT