தினமணி கொண்டாட்டம்

ஐ.ஏ.எஸ் தேர்வு தடுமாற்றம் ஏன்?

17th Oct 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

இந்திய அரசு இயந்திரத்தின் இயக்கத்தை ஆளுவதே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான். இந்தக் காரணங்களுக்காக சமீப காலமாக இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டிலிருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளடங்கிய அரசுத் தேர்வினை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

ஆனால் அதே சமயம், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையோ தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 2014-இல் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 150 பேர்கள் வெற்றி பெற்றார்கள். அது 2015-இல் பாதியாகக் குறைந்தது. இந்த ஆண்டு 36 பேர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக தமிழ் வழியாகக் கல்வி கற்று தேர்வான மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயினும், தரமான, பொருத்தமான பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் கிடைக்காததால் அவர்கள் ஆங்கிலப் புத்தகங்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அந்த ஆங்கிலப் புத்தகங்களை படித்துப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

ADVERTISEMENT

தவிர ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்காக நடத்தப்படும் பயிற்சி மையங்களும் வகுப்புகளை ஆங்கில மொழியில் நடத்துவதால் தமிழ் வழியில் பயின்று வந்த மாணவர்கள் வகுப்புகளின் வேகத்துடன் இணைய முடிவதில்லை. அதனால் பயிற்சி மையங்களில் தரப்படும் வழிகாட்டுதல்களைச் சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லை.

தமிழ் எழுத்துகள் வட்ட எழுத்தாக இருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வினை எழுதி முடிக்க முடியாமல் போகிறது என்ற ஒத்துக்கொள்ள முடியாத காரணமும் சொல்லப்படுகிறது. நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தமிழ்வழி மாணவர்களால் உரிய விடையை முறையாகச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் என்ன?

சென்னையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அகாதெமியின் இயக்குநர் தமிழ் இயலன் விளக்குகிறார்:

""ஐ.ஏ.எஸ் வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தருகிறார்கள். தமிழ் வழி, கலை அறிவியல், முதுகலைப்பட்டம் படித்தவர்கள் ஆங்கில கேள்விகளில் என்ன கேட்டுள்ளார்கள் என்று புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில் பதில்களை எழுதலாம் என்று அனுமதித்திருக்கும் "யு. பி. எஸ். சி' கேள்விகளையும் மாநில மொழிகளில் தரலாமே.... இதில் என்ன சிரமம் உள்ளது.... இதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

ஐ. ஏ .எஸ் தேர்வில் முதல் நிலையில் சிசாட் (சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் ) தேர்வில் கணக்குகளும், காம்பிரிகென்ஷன் எனப்படும் புரிந்து கொள்ளும் திறமையை நிர்ணயிக்கும் பகுதியும் உண்டு. இந்த கேள்விகள் ஆங்கிலம், ஹிந்தியில் இருக்கும். இந்தத் தேர்வில் கணக்குகள் இருப்பதால், குறுக்கு வழியில் விரைவாக கணக்குகளுக்கு விடைகாணும் திறமை வேண்டும். இந்தத் திறமை கலைப்பாடங்கள் படித்தவர்களுக்கு குறைவாக இருக்கும்.

காம்பிரிகென்ஷன் பகுதி ஆங்கிலத்தில் அமைந்து கேள்விகளும் ஆங்கிலத்தில் இருக்கும். இந்தப் பகுதியை ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொண்டு கேள்விகளுக்குத் தமிழில் பதில் அளிக்க வேண்டும். இந்தப் பகுதி தமிழ் வழி படித்தவர்களுக்கு சிரமமாக அமையும். அதனால் கல்லூரிகளில் படிக்கும் போதே தேவையான ஆங்கில அறிவை தமிழ்நாட்டு மாணவர்கள் பெருக்கிக் கொள்ள வேண்டும். கணக்கிலும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐ.ஏ.எஸ் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு பதிவு எண் வரிசைபடி தரப்படும். அந்த எண்ணை வைத்து தேர்வு எழுதுபவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விடைத்தாளைத் திருத்துபவரோ வேறு நபர்களோ கண்டுபிடிக்க முடியாது. இப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தபால்துறை பின்கோடு தந்திருப்பதை போல தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுத மனு செய்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தருகிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒடிசா மாநிலங்களுக்கு தனிப்பட்ட எண்கள் தரப்படும். பதிவு எண்ணை வைத்து தேர்வு எழுதுபவர் எந்த மாநிலத்தவர் என்று தேர்வு சம்பந்தப்பட்ட அனைவரும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

தேர்வுத்தாளைத் திருத்துபவர் ஒரு மாநிலத்தின் மீது விருப்பு வெறுப்பு கொண்டவராக இருந்தால், அவர் மனநிலைப்படி மதிப்பெண்களைக் கூட்டியோ குறைத்தோ போட வாய்ப்புள்ளது. அதனால், எண்ணை வைத்து எந்த மாநிலத்து மாணவர் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்க முந்தைய முறைப்படி யார் முதலில் தேர்வுக்கு பதிவு செய்கிறார்களோ அவர் முதல் தொடங்கி, பிறகு பதிவு செய்பவர்களுக்கு வரிசைப்படி அடுத்தடுத்த எண்களை பதிவு எண்ணாக வழங்க வேண்டும். இப்படி செய்தால் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் முதல் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். பிறகு நேர்முகத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தர வரிசை அமையும். இதற்காக மாநில அரசுகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT