தினமணி கொண்டாட்டம்

உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை!

17th Oct 2021 06:00 AM | -ஜி.அசோக்

ADVERTISEMENT


""மனசுக்குள் கதை ஓட ஆரம்பித்ததும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிக்கும். அதில் கச்சிதமாக பொருந்திய முகம் கௌதம் கார்த்திக். " ஆனந்தம் விளையாடும் வீடு' கிட்டத்தட்ட தயார். இறுதி கட்டப் பணிகளில் இருக்கிறேன். ஆங்காங்கே எது வேண்டும், எது வேண்டாம் என்று முடிவு எடுக்கிற நேரம். அதுதான் இந்த பரபரப்பு... கதை சொல்கிற அளவுக்கு அதில் புத்திசாலித்தனத்தையும் காட்ட வேண்டும் அதுதான் இப்போதைக்குமான என் வேலை''. தாடியை நீவியபடி சிரிக்கிறார் நந்தா பெரியசாமி.

""உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்க கூடிய படமாகவும் "ஆனந்தம் விளையாடும் வீடு' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...''

குடும்ப கதைகளுக்கான ரசிகர்களின் மன நிலை இப்போது மாறி வந்திருக்கிறதே....

உறவின்றி அமையாது உலகு. இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். கிராமத்து மனசும், மணமும் மறக்காத படம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம். தொலை தொடர்புகள் நம்மை வேற இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேர வேண்டும். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. உறவுகளும் அதன் அர்த்தங்களும்தான் இங்கே உண்மை.

ADVERTISEMENT

எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. உறவுகளுக்குள் உள்ள புரிதல், அந்த அற்புதம் பதிவாகியுள்ளது. கால சூழல், பருவத்தின் மாற்றம் எல்லாம் சேர்ந்து விவசாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு வந்தது மாதிரிதான்.... இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் மாறுதல்கள். விஞ்ஞானம் எல்லாவற்றிலும் இருந்து நம்மை வெளியேற்றி விடுகிறது. இதில் வருகிற ஹீரோ கௌதம் கார்த்திக் கூட பாசம், அன்பு, உறவுகள் என அர்த்தப்படுத்தி வாழ்கிற ஆள். ஆனால் அவரை சுற்றி தவற விடுகிற மன நிலையை குடும்பம், உறவுகள் என வகைப்படுத்தியிருக்கிறேன். இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. நான் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன் என்றால், அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால்தான் மனதை அள்ளும். தீராத உறவுகளின் அற்புதம் இது. உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை.

ஏற்கெனவே சேரன் சென்டிமெண்ட் ஆள்... இந்தக் கதைக்குள் அவர் எப்படி வந்தார்....

இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகின்றன. அப்படி எனக்குள் உருவான ஓர் அம்சம்தான் இதன் கரு. இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசி பேர் கூட்டுக் குடும்பத்தின் பிள்ளைகள்தான். அவர்களுக்கு உறவுகள்தான் ஆதாரம். அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. மண்ணை, உறவின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. நாம் பெரிதாக இழந்தது கூட்டுக் குடும்பம். சில மனிதர்களின் அன்பில் சுருங்கி, வேறு முகம் பார்க்க ஆளில்லாமல் கிடக்கிறோம். இந்தக் கதையைச் சொன்னதும் சேரன் சாருக்கு அவர் கிராமத்தின் அழகு, உறவுகள் ஞாôபகத்திற்கு வந்திருக்கலாம். இப்போதுமே அவர் தமிழ் மண்ணின் முகம்.

இதில் வருகிற மச்சான், மாமனை நாமும் பார்த்திருக்கலாம். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, நான் கடவுள் ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, ஜோ மல்லூரி, சினேகன், நமோ நாராயணன், செüந்தராஜன், மெüனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் இப்படி கண்ணுக்கு நிறைந்த நடிகர்கள். கிராமங்களில் பார்த்து ரசித்து உணர்ந்த கேரக்டர்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே வைத்து விட்டேன். எல்லோரும் கதையை கேட்டதும் நெகிழ்ந்தார்கள். வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார்கள். அதை நடத்தி முடித்திருக்கிறேன்.

கரோனா கால கட்டுப்பாடுகள்... பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு வேலை... எப்படியான அனுபவம்....

படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி. நடிக்கிற நடிகர்களும் ஒவ்வொரு விதம். பல முகங்களை ஒன்று கூட்டி ஒரு முகமாகக் கொண்டு வர வேண்டும். சரவணன் சார் ஒரு விதம். சேரன் சார் வேறு வடிவம். சிங்கம் புலி ஒரு மூடு. மாமா, மச்சான், வில்லன் என நாற்பது பேருக்கு மேல் இருக்கிறார்கள். அங்காளி, பங்காளி என வீட்டுக்குள் சில உன்னத உறவுகள். இவர்களையெல்லாம் சேர்த்து இருத்தி, நிறுத்தி, பொருத்தி கொண்டு வருவது சாதாரண வேலையில்லை. ஆறு மணிக்கு மேல் கால்ஷீட் கிடையாது. அப்படி எந்த விதிமுறையும் இங்கே இல்லை. இந்தக் கதையை உள்வாங்கி எல்லோரும் அப்படி நடித்துக் கொடுத்தார்கள். இது சினிமாவில் பெரும் ஆச்சர்யம். கரோனா கால கட்டுப்பாடுகள்... ஒருவரையொருவர் நலம் விசாரித்து அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டோம். எங்களுக்குள்ளே ஒரு வாட்ஸ் ஆப் குரூப் கிரியேட் செய்து, அதன் வழியாக எல்லாச் செய்திகளையும் கடத்தி எல்லோரையும் திரட்டி படப்பிடிப்பை முடித்தோம்.

டாக்டர் ராஜசேகர் மகளை அறிமுகப்படுத்துறீங்க....

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதியின் இளைய மகள் ஷிவத்மிகா. இவர்தான் நம்ம ஹீரோயின். அத்தனை அழகு. சினிமாக்கான வார்ப்பு. அருமையாகவும் நடிக்கிறார். சேலை கட்டிப் பார்த்தால் என் மனதில் இருந்த பொண்ணு அப்படியே பார்க்கக் கிடைத்தது. அவங்க ஷாட் முடிந்ததும் எப்போதும் கேரவன் பக்கம் போனதில்லை. கூடவே இருந்து கவனித்துக் கொண்டு, அடுத்த ஷாட்டின் தொடர்ச்சியை உள் வாங்கிட்டு தொழிலை சந்தோஷமாக, நேர்த்தியாக செய்கிற பொண்ணு. ராஜசேகரின் மகளாக இருந்ததால் வந்திருக்கலாம் அல்லது இப்படி இருந்தால்தான் நீடித்து நிற்க முடியும் என்று நினைப்பு இருந்திருக்கலாம். பெரிய இடத்துக்கு வருவதற்கான திறமைகள் இருக்கின்றன.

Tags : kondattam nothing here beyond relationships!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT