தினமணி கொண்டாட்டம்

79 வயதில் அதிகம் சம்பாதிப்பவர்!

17th Oct 2021 06:00 AM | -பனுஜா   

ADVERTISEMENT

 

அம்பானி, அதானியை விலக்கி விட்டு, 79 வயதிலும் கோடிக் கணக்கில் சம்பாதிப்பவர் இந்தியாவில் யாராக இருக்கும் என்று பார்த்தால், அது நிச்சயம் அமிதாப் பச்சனாகத்தான் இருக்கும். படங்களிலும், விளம்பரங்களிலும், சானல் நிகழ்ச்சிகளிலும் அசராமல் பங்கெடுக்கும் அமிதாப் பச்சனின் ஊதியம் மாதத்திற்கு பல கோடிகள்.

அமிதாப் தான் சம்பாதிக்கும் பணத்தை மும்பையில் பல மாடி கட்டடங்கள், பங்களாக்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று முதலீடு செய்திருக்கிறார். அந்த முதலீடுகள் அமிதாப்பிற்காக சம்பாதித்து வருகின்றன. அதே சமயத்தில் வாங்கிய சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்துள்ளன.

மும்பை நகரின் பெரும் பணக்காரர்கள், பிரபலங்கள் குறிப்பாக திரைப்பட நடிகர்கள், நடிகைகள் வாழும் இடம்தான் ஜுஹு. அதன் காரணமாக அங்கு வீட்டு மனைகள், தனி வீடுகள், ஃபிளாட்டுகள், அடுக்குமாடி கட்டடங்களின் வாடகையும், விற்பனை விலையும் மிக அதிகமாக இருக்கும். ஜுஹுவில் இருக்கும் கட்டடங்கள், பங்களாக்கள், நிலம், எல்லாமே பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தம். பெரும் பணக்காரர்கள் தங்கள் கட்டடங்களை பொதுவாக வாடகைக்கு விடமாட்டார்கள். இதன் காரணமாக இப்பகுதியில் வாடகைக்கு இடமோ வீடோ கிடைப்பது குதிரைக் கொம்பு மாதிரி .

ADVERTISEMENT

பெரும் பணக்காரரான அபிதாப் பச்சன் சமீபத்தில் இந்தியாவில் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃ ப் இந்தியாவிற்கு தனது கட்டடத்தின் தரை தளத்தை வாடகைக்கு கொடுத்துள்ளார். வங்கி செயல்பாடுகளை விரிவு படுத்துவதற்காகவும், வாடிக்கையாளர்கள் எளிதில் வந்து போகவும், மும்பை நகரின் முக்கிய இடமான ஜுஹு பகுதியில் அமிதாப் வாழ்ந்து வரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் அமிதாப்பின் கட்டடத்தின் தரை தளத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃ ப் இந்தியா அமிதாப் பச்சன் மற்றும் அவரது ஓரே மகனான அபிஷேக் பச்சனுடன் வாடகை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஜுஹு பகுதியில் 3,150 சதுர அடி பரப்புள்ள அளவிலான வர்த்தகக் கட்டடத்தின் வாடகை ஒப்பந்த காலம் 15 ஆண்டுகள். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மாதம் 18.9 லட்சம் ரூபாய் வாடகையாக அமிதாப்பிற்கு தர வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டு முடிந்ததும் வாடகை மாறும். ஆறாம் ஆண்டு முதல் பத்தாம் ஆண்டு வரையில் இப்போதுள்ள வாடகையிலிருந்து 25 சதவீதம் அதிகமாக வாடகை தர வேண்டும். 11-ஆம் ஆண்டிலிருந்து 15-ஆம் ஆண்டு வரை மீண்டும் 25 சதவீதம் அதிகமாக வாடகை தந்து வர வேண்டும் என்று வாடகை ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. வாடகை முன் பணமாக (அட்வான்ஸ்) 2.26 கோடி ரூபாய் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அமிதாப் - அபிஷேகிற்கு வழங்கியுள்ளது.

அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் மும்பை ஜுஹு பகுதியில் ஜல்சா, பரிதீக்ஷô, ஜனக், அம்மு, வட்சா பெயரில் பங்களாக்கள் உள்ளன. சமீபத்தில் கூட ஜுஹுக்கு அருகில் இருக்கும் அந்தேரியில் அபிதாப் 31 கோடி ரூபாய்க்கு டியூப்லெக்ஸ் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT