தினமணி கொண்டாட்டம்

ஆடி, பாடி மகிழ்ந்த முதியவர்கள்!

17th Oct 2021 06:00 AM | - தி. இன்பராஜ்

ADVERTISEMENT


மூத்தோர் சொல்லும்,
முதிர் நெல்லிக்கனியும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்..
என்பது பழமொழி.

ஆனால், அப்படிப்பட்ட முதியோர்கள் வீட்டில் வைத்து பராமரிக்கப்படாமல் அவர்களை பாதுகாப்பு இல்லங்களில் தனித்துவிடும் செயல் அதிகரித்து வருகிறது. முதியோர் இல்லங்களில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி காலத்தை கடந்து செல்லும் வகையில் வாழ்த்து வருகின்றனர் என்றே கூறலாம்.

முதியோர் இல்லங்களில் தவிக்கவிடப்படுவோர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று யாரும் யோசித்து பார்ப்பது கிடையாது. தன்னால் உழைக்கும் வரை ராஜா மாதிரி வாழ்த்த பலர் முதுமை காலத்தில் தனிமையில் தன் வயதுடையோருடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் முதியோர் இல்லங்களில் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது தூத்துக்குடியில் செயல்படும் "லிட்டில் சிஸ்டர்' முதியோர் இல்லம். அங்கு அண்மையில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் முதியவர்கள் ஆடி, பாடி மகிழ்ந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதியவர்களுடன் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்கும் வகையில் சக்கர நாற்காலியில் இருந்தபடியே முதியவர்கள் சிலர் பேண்ட் வாத்தியம் வாசித்து அசத்தினர். இதனைக் கண்டதும் சிறப்பு விருந்தினர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கியது.

அதையும் மிஞ்சும் வகையில் முதியோர் இல்ல வளாகத்தில் அமர்ந்தபடி 15 முதியவர்கள் இசை முழக்கங்களை எழுப்பினர். ஆனால், அவர்கள் எந்தவொரு இசைக்கருவிகளையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், அகப்பைகள், தட்டுக்கள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி அருமையான இசையை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மூதாட்டிகள் பலர் தங்களை அலங்கரித்துக் கொண்டும், இளம்பெண்களைப் போன்று - ஆடைகளைப் போல ஆடைகள் அணிந்தும் சிறிய அசைவுகளோடு நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

இதன் தொடர்ச்சியாக முதியோர்களுக்கு ஆண், பெண் என தனித்தனியே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

முதியோர் இல்லங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போது ஆடி, பாடி மகிழ்வது அவர்களின் மனநிலை தாங்கள் தனிமையில் இல்லை என்பதை உணர்த்துவதோடு அவர்களை தாங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்ல நிர்வாகி அமலி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT