தினமணி கொண்டாட்டம்

திண்ணைப் பள்ளி அனுபவம்

17th Oct 2021 06:00 AM | -உ.வே.சா

ADVERTISEMENT

 


தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் என் சரித்திரம் முழுக்க, முழுக்க தமிழ்ச் சரித்திரமே. 

அவ்வாறே அவர் தம் நாட்குறிப்புகளின் பதிவுகளும் காணப்படுகின்றன. என்று பதிப்புரையில் காணப்படுகின்ற வாசகம் மிகையன்று. உ.வே.சாவின் இளமைக்கால பதிவுகளிலிருந்து சில சம்பவங்கள்:

இளமைக் கல்வி முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

ADVERTISEMENT

அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விஷயத்தில் அவர் யாரிடமும் பக்ஷபாதம் காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று ஒருவன் இருந்தான். அவன் தகப்பனார் பணக்காரர். அதனால் அவனுக்குச் சிறிது கர்வமும் தைரியமும் இருந்தன. உபாத்தியாயர் அடிக்கும்போது அவன் திருப்பி அடிக்க முயல்வான். முரட்டுத்தனத்தினால் குழந்தைகளை அடக்கியாள்வது கஷ்டமென்பதை அந்த உபாத்தியாயர் தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு அவருடைய கைப்பிரம்பே செங்கோலாக இருந்தது. 

எல்லாப் பிள்ளைகளும் தம்முடைய தண்டனையை ஏற்றுக் கொள்ளும் போது பிச்சு மாத்திரம் எதிர்த்தால் அவர் சும்மா இருப்பாரா? மேலும் மேலும் கடுமையான தண்டனைகளை விதித்தார். அவன் சிறிதும் அடங்கவில்லை. பிறகு அவனைப் பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கி விட்டார். அவன் பெற்ற விடுதலை நமக்கும் கிடைக்காதா? என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு.

பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பைப் பற்றி நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத்தவிர வேறு ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப் பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்ன? இராவிட்டால் என்ன?

நாராயணையர் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளைத்தான் கற்பிப்பார். அவரிடம் நான் கற்றபின்பு சாமிநாதையரது பள்ளிக் கூடத்தில் சேர்ந்தேன். அங்கேதான் ஏட்டில் எழுதக் கற்றுக் கொண்டேன். அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரைக்கும் வரவில்லை. சிலேட்டும் இல்லை. முதலில் மாணாக்கன் மணலில் எழுதிப் பழக வேண்டும். பிறகு அவனே எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணாக்கர்களுக்குள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பதும் பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்று. பன்னிரண்டு மணிக்கு மேல் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிள்ளைகள் வீட்டுக்குச் செல்வார்கள். பிறகு மூன்று மணிக்கு மீண்டும் பாடம் தொடங்கப்படும். இரவு ஏழு மணி வரையிற்கூடப்  பள்ளிக்கூடம் நடைபெறுவதுண்டு.

ஒவ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபக சக்தியை விருத்தி செய்விப்பதற்காக அவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும். "மறந்து போய்விடுவோமோ' என்ற பயத்தால் சில பிள்ளைகள் வீடு சென்றவுடன் தமக்கு உபாத்தியாயர் சொன்ன பொருள்களின் பெயர்களைத் தம் தாய் தகப்பனாரிடம் சொல்லி விடுவார்கள். மறுநாள் விடியற் காலையில் அவர்களிடம் அவற்றைத் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து சொல்வார்கள்.

பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் துணைக்கு யாரையேனும் பிள்ளைகள் அழைத்து வருவார்கள்; பெரும்பாலும் முதிய ஸ்திரீகளை அழைத்து வருவதே வழக்கம்.

நேரம் கழித்து வந்தால் பிரம்படி பலமாகக் கிடைக்குமே என்ற பயத்தால் ஒவ்வொருவனும் எல்லோருக்கும் முன்பே வந்துவிட முயல்வான். இவ்வாறு வருவதன் பிரயோசனம் பழையதுக்கு உபாத்தியாயர் வீட்டுக்கு விடும்போது தெரியும். வழக்கப்படி பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து அனுப்பும்போது,

முதலில் வந்தவன் கையில் பிரம்பினால் தடவி விடுவார்; இரண்டாம் பையனை மெல்ல அடிப்பார். வரவர அடி அதிகமாகும்; பலமாகவும் விழும். 

இதனால், முதல் நாள் பலமான அடி வாங்கினவன் அதற்குப் பயந்து மறுநாள் எல்லோருக்கும் முன்பே வந்து விடுவான். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். வேற்றான் என்னும் சொல்லே அவ்வாறு வந்தது.

மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவனென்பது அதன் பொருள். உபாத்தியாயரது கைக்கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப்பெருமையல்லவா?

சில சமயங்களில், "நாமே இன்று முதலில் வந்து விட்டோம்' என்ற பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும் தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோஷப்படக் கூடாதென்னும் நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான். அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும்.

பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. 

அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும் போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச் செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.

விளையாட்டும் வித்தையும்

விடுமுறை நாட்களில் நான் உடன்படிக்கும், பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம். ஆயினும், என் தந்தையார் காணாமல் விளையாடுவேன். கண்டால் அடித்து விடுவாரென்ற பயம் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் எப்போதும் படிக்க வேண்டுமென்பது அவரது நினைவு.

என் சிறிய தகப்பனார் எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். அவர் நயமாகக் கற்பிப்பார். என் பாட்டனாரும் கற்பிப்பதுண்டு; அவர் வார்த்தைகளால் கடிந்து கொண்டு போதிப்பார்; சில சமயம் அடிப்பார். என் தந்தையாரோ கற்பிக்கும் போதெல்லாம் அடிப்பார்; வைவார்; அவரிடம் கற்றுக்கொள்வதைவிட அடிபடுவதுதான் அதிகமாக இருக்கும். அப்பொழுது என் தாயார் வந்து, குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்? அடிக்க வேண்டாம் என்று கூறுவார். அந்த வேண்டுகோள் என் தந்தையாருக்குப் பின்னும் கோபத்தையே உண்டாக்கும்.

பிள்ளைகளோடு பிள்ளையார் பந்து, கிட்டுப்புள், பாண்டி, பட்டம் விடுதல் முதலிய விளையாட்டுக்களை விளையாடுவேன். வீட்டிலிருந்தபடியே ஒட்டி, பல்லாங்குழி, பதினைந்தாம் புள்ளி முதலிய ஆட்டங்களும் ஆடுவேன்.

ஜலகண்டம்

எனக்கு நீச்சல் தெரியாது. வாய்க்காலிலும் குளத்திலும் என் தோழர்கள் நீந்தி விளையாடுவதைப் பார்க்கும்போது எனக்கு அவர்களிடம் பொறாமை உண்டாகும். அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்ப்பதோடு நிற்பேன். ஆயினும் ஒருமுறை பிள்ளைகளோடு சேர்ந்து எங்கள் ஊர்க் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போது ஆழத்திற்குச் சென்று மூழ்கி விட்டேன். ஒருவர் வந்து என்னை எடுத்தார். என் தாயார் என் ஜாதகத்தில் எனக்கு மூன்று ஜலகண்டங்கள் ஏற்படுமென்று இருப்பதாகச் சொல்வார். அன்று நான் மூழ்கியதே முதற் கண்டம். பிறகு பட்டீச்சுரத்திலும், அவிநாசியிலும் இரண்டு முறை நான் ஜலகண்டத்திற்கு உட்பட்டு மீண்டேன்.

நூல்: என் சரித்திரம் 
அத்தியாயம் 10, 11

Tags : kondattam Boarding school experience
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT